07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label லக்ஷ்மி. Show all posts
Showing posts with label லக்ஷ்மி. Show all posts

Sunday, October 7, 2007

நன்றி அறிவிப்பு

ஒரு வாரமா என் தொல்லைகளைப் பொறுத்தருளிய வலையுலக மக்களுக்கு என் நன்றி. வலைச்சரத்தில் இதுவே என் கடைசி இடுகை. கடைசி இடுகைன்றதால கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, கொஞ்ச நாளா பதிவுகள் பொடுவதை அறிவித்துவிட்டோ அறிவிக்காமலோ நிறுத்தி வைத்திருக்கும் பதிவர்களைத் தொகுக்க எண்ணம். இவங்க எல்லாம் மறுபடியும் எழுத ஆரம்பிக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை.

முதலில் ஒரு கூட்டு வலைப்பதிவான சக்தி/ - இதை மதி, பத்மா, செல்வநாயகி ஆகிய மூவரும் இணைந்து ஆரம்பித்து நடத்தி வந்தனர். இந்த வருடத் துவக்கத்தில் செல்வா எழுதிய கற்றதனால் ஆய பயனென்ன தொடரின் இறுதிப் பதிவோடு நிற்கிறது இவ்வலைப் பதிவு. தொடர்ந்தால் மகிழ்வோம்.

அடுத்த பதிவு எழுத்தாளர் இரா.முருகனின் வேம்பநாட்டுக் காயல். முருகன் அவர்கள் தனது லண்டன் அனுபவத்தை எடின்பரோக் குறிப்புகள் என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இத்தொடர் 19 பாகங்கள் வந்த நிலையில் மேற்கொண்டு ஏதும் பதிவுகள் இல்லை.

அடுத்தது எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூரிலிருக்கும் இவர் பற்றிய குறிப்புகள் இங்கே. இவரும் சென்ற வருடம் முதலே அதிகம் பதிவெதுவும் போடவில்லை.

இருவருமே வலைப்பூவில் மட்டும் எழுதுபவர்கள் அல்ல. அச்சு ஊடகத்திலும் பெயர் பெற்ற எழுத்தாளர்கள். - தங்களுடைய மற்ற பணிகளுக்கு நடுவே வலைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் வலையில் மட்டுமே தமிழ் படிக்கக் கிடைக்கும் வெளிநாட்டில்/ஊரில் வாழ்பவர்களுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

இன்னும் பலர் புதிதாய் வலைப்பதிவெழுத வரவேண்டும். வலையுலகிலிருக்கும் சில்லறைத்தனங்கள் ஒழிந்து ஆரோக்கியமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடக்க (இவை மட்டுமே நடக்க) வேண்டும் என்பது போன்ற பேராசைகள் நிறைய உண்டு எனக்கு. பார்ப்போம், எவையெல்லாம் கைகூடுகிறதென.

மீண்டும் ஒரு முறை வந்து படித்த, படித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய பொன்ஸ், சிந்தாநதி ஆகியோருக்கும் என் நன்றி.
மேலும் வாசிக்க...

இளைஞர் ஸ்பெஷல்

அடுத்தது இளைஞர் ஸ்பெஷல். அப்போ இது வரை குறிப்பிட்டவங்க எல்லாம் இளைஞர்கள் இல்லையான்னெல்லாம் யாரும் சிண்டு முடிய பாக்கக் கூடாது. நான் இளைஞர்கள் என்று சொல்ல வருவது - வயதினால் இளையவர்களைப் பற்றி அல்ல. நம் வலையுலகைப் பொறுத்தவரை முதியோர் என்று தன் மேல் முத்திரை குத்திக் கொண்டு பழமை வாதம் பேசுபவர் மிகக் குறைவு. எனவே வயதை வைத்து ஒருவரை எடை போடுவது இங்கு செல்லாது. அதனால், பதிவெழுத ஆரம்பித்து குறைந்த நாட்களே ஆனவர்களை பற்றியதே இந்தச் சரம்.

நான் எழுத வந்தே ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இதை நான் எழுதுவது சரிவருமா என்று யோசித்திருந்தேன். மதியும் பொன்ஸும் போலாம் ரைட்னு சிக்னல் கொடுத்த தைரியத்தில் இந்த வகைப்படுத்துதலைத் தொடர்கிறேன். :)

வள்ளி - கேலியும் கிண்டலும் விரவிய இவரது எழுத்து நடை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளின் உபயோகம் அதிகமாய் இருக்கிறது இவரது எழுத்துக்களில் - போகப் போகக் குறைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.

1. இவர் தனது வலைப்பூ ஆரம்பித்த கதையைச் சொல்கிறார் இங்கே.
2. ப்லாகுக்கே வாஸ்து பார்க்கிறார் இவர் - இப்பதிவில்.

இன்னொரு வள்ளி - இவர் இ.கா. வள்ளி. பெரும்பான்மையான பதிவர்களைப் போலவே இவரும் மென்பொருள் துறைக்காரர்தான். தனித்துவமாய் இருப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தன் அனுபவங்களை பதிவுகளாய் இடுகிறார்.

1. தனக்குப் பிடித்தவர்களைப் பட்டியலிடுகிறார் இப்பதிவில்.
2. மென்பொருள் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா என்ற கேள்விக்கான தன் பதில்களைத் தருகிறார் இங்கே. (இதில் எனக்குச் சற்றே மாறுபட்ட கருத்திருப்பினும் அப்போது நேரமின்மை காரணமாக விரிவாகப் பின்னூட்டமிட முடியாது போனது)
3. இவர் அடிப்படையில் விளையாட்டில் ஈடுபாடுடையவர். இவரது பார்வையில் கிரிக்கெட் என்கிற விளையாட்டை விமர்சிக்கிறார்.

பொற்கொடி - பெங்களூருவிலிருந்து வலைப் பதியும் இவர் முதலில் கவிதைகளை தொகுப்பது மட்டுமே செய்து வந்தார். பிறகு சொந்தமாய்ப் பதிவுகளும் எழுத ஆரம்பித்தார். ரொம்ப எளிய எழுத்து நடையில் சொல்ல வருவதை அழகாய்ச் சொல்கிறார். ஒரு மாதத்திற்கும் மேலாக இவரிடமிருந்து இடுகைகளே இல்லை. விரைவில் மீண்டும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

1. பெண்ணியம் பற்றி இவர் முன்வைக்கும் வாதம் இப்பதிவில் காணக் கிடைக்கிறது. எனக்கு உடன்பாடில்லாத வாதமெனினும், அவரது ஒரு முக்கியமான இடுகையென இதைக் கருதுவதால் இங்கே.
2. ஒரு அழகிய மலரும் நினைவுப் பதிவு.
3. ஒரு முனை காத்திருத்தலின் வலியைச் சொல்லும் கவிதை.

இது என்னுடைய வெளி. நம்ப வைத்துள்ள எல்லா மதிப்பீடுகளையும் கட்டுக்களையும் விரும்பாத வெளி. எது குறித்தும் விவாதிக்கலாம் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பற்று சாதாரணமான உரையாடல்கள் தொடரும் - என்று தன்னுடைய தளத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தாரா.

1. சில்லுனு ஒரு காதல் திரைப்படம் குறித்த தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார்.
2. பாலியல் ரீதியிலான வசவு வார்த்தைகள் குழந்தைகளை எப்போது வசீகரிக்கவே செய்யும் - அர்த்தம் புரியாத காரணத்தினால். அதைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.
3. அடர்த்தியான சொற்களாலான இவரது ஒரு கவிதை.
4. மெனோபாஸ் காலகட்ட பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார் இப்பதிவில்.

எல்லோருமே நம்பிக்கையூட்டும் வண்ணம் எழுதுகிறார்கள். ஆனால் பதிவர் பட்டறையின் காரணமாய் நாம் எதிர்பார்த்த அளவு புது ஆட்கள் வந்திருப்பது போல் தெரியவில்லை. அன்று அத்தனை ஆர்வத்தோடு வந்து கற்றுப் போனவர்கள் அனைவரும் விரைவில் நம்முடன் வந்து இணைந்தால் சூழல் இன்னமும் களை கட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும் வாசிக்க...

ஜென்டில்மென் ஸ்பெஷல்

இன்னிக்கு ஜென்டில்மென் ஸ்பெஷல். அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு. இன்னா செய்தாரை ஒறுத்தல் எப்படின்னுதான் நம்ம பாட்டன் பாடம் சொல்லி கொடுத்திருக்காரில்லையா?

மண்டபத்தில் தனியே நின்று புலம்பிக் கொண்டிருக்கும் ஒய்வு பெற்ற பேராசிரியர் - தருமி அவர்கள். கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே என்று பெருந்தன்மையோடு உண்மையை ஒப்புக்கொள்ளும் :) இவரது பதிவுகளின் ஆதாரத்தொனி சமூக அக்கறையும் மனித நேயமும்.

1. நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை பட்டியலிடுகிறார்.
2. பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அப்படியிருக்கையில் பொங்கலை ஜாதி/மத வேறுபாடு கடந்து ஏன் தமிழர் அனைவரும் கொண்டாடக் கூடாதென்று கேள்வி எழுப்புகிறார் இப்பதிவில்.
3. நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் ஒரே மாதிரியான இரு சம்பவங்களைக் கொண்டு விளக்குகிறார் இப்பதிவில்.

இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு பதிவெழுதும் மா.சிவகுமார். பொருளாதாரம், தோல் பதனிடும் துறைசார்ந்த மென்பொருள் நிர்வாகம் என்று பல வகைப்பட்ட விஷயங்களைத் தன் எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். வலைப்பதிவர் பட்டறையின் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர்.

1. தோல் பதனிடும் தொழில் அதற்கான மேலாண்மை மென்பொருள் போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் இந்த இழையில்.
2. வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்களைப் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த இழையில் பதிகிறார்.
3. தனக்குப் பிடித்த புத்தகங்களையும் திரைப்படங்களையும் பற்றி இவர் எழுதும் குறிப்புகள் இங்கே.(இவர் மட்டும் எழுதும்னு நான் போடலை. உடனே அது ஒரு கூட்டுப் பதிவுன்னு வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் யாரும் கிளம்பிடாதீங்கப்பா)
4. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்திலும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

நண்பர் நந்தா - இப்போது தனித் தளத்திலிருந்து எழுதுகிறார். கவிதைகள், கதைகள் என எல்லா வடிவத்திலும் எழுதி வரும் இவர் அவ்வப்போது மொக்கை வகைப் பதிவுகளிலும் கலக்குவார்.

1. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, நம்ம மேல வெக்கிற அளவுக்கதிகமான நம்பிக்கையையும், அன்பையும் தவிர நமக்கு சந்தோஷத்தை தரக் கூடியது வேற எதுவும் இல்லை. என்ன பாக்கறீங்க? இது விக்ரமன் பட டயலாக் ஒன்னுமில்லை. நந்தா சாரோட கண்டுபிடிப்புத்தான். இதுபோன்ற பல காதல் தத்து(பித்து)வங்களை இவரது கதைகளில் காணலாம்.
2. இந்திய வரலாற்றைப் பற்றி எழுதப்போவதாக ரொம்ப நாட்களாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்துவிட்டு ஒருவழியாக இப்போது ஆரம்பித்திருக்கிறார்.
3. பெண்களின் சமத்துவத்திற்கான முதற்படி தன்னையே தான் உணர்ந்து கொள்ளலே என்று அழகாய்ச் சொல்லும் ஒரு கவிதை.
4. தான் ரசித்துப் படித்த புத்தகங்களைப் பகிர்கிறார் இந்தக் கட்டுரையில். (இவர் எழுதியிருக்கிற புத்தகங்களை தேடி கிடைக்கலியே நந்தான்னு சொன்னா, உடனே இவரே கொண்டு வந்து கொடுத்து படிக்கச்சொல்லுவதும் உண்டு சமயங்களில் - ரொம்ப நல்லவருப்பா இவரு)


வவ்வால் - தலைகீழ்விகிதங்கள் எனும் பதிவில் இவர் பல அறிவியல் கருத்துக்களை - குறிப்பாக விவசாயம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்கிறார். இவரது பெரும்பான்மையான பதிவுகள் முக்கியமானவையென நான் கருதுவதால் தனி இடுகைக்களுக்கான சுட்டி தராமல் இவரது வலைப்பூவின் சுட்டியையே இங்கு இடுகிறேன்.

இந்த வரிசைல இன்னும் பலரைப் பற்றி எழுத நினைத்திருந்தேன். சரம் தொடுக்கும் வாய்ப்பு இன்றே கடைசின்றதால அவசர அவசரமாய் சுருக்கிட்டேன். இன்னொரு முறை வேற எங்கயாவது வாய்ப்புக் கிடைச்சா பாக்கலாம். :)
மேலும் வாசிக்க...

Thursday, October 4, 2007

லேடீஸ் ஸ்பெஷல்

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும். துளசியின் எழுத்தில் ஒரு அந்நியோன்னியம் இருக்கும். முதல் முறை படிக்கும் போதே நம் வீட்டிலிருக்கும் உறவுப் பெண்மணி ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வு வரும். இவங்களோட ஸ்பெஷல் பயணக்கட்டுரைகள்தான். சாப்பாட்டு ஐட்டங்கள், வளர்ப்புப் பிராணிகள், தோட்டத்துல பூ பூத்தது, குளிரில் உறைந்து போன நீர்னு இவங்க பதிவுகளுக்கான பேசு பொருள் சூரியனுக்கடியிலிருக்கும் எதுவா வேணும்னாலும் இருக்கும். ஆனா சுவாரசியமா இருக்கும். அதான் இவங்க ஸ்பெஷல்.


1. இவரது சமீபத்திய பயணத்தொடர் - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

2. தினசரி வாழ்வில் தான் சந்தித்த சக மனிதர்களைப் பற்றிய இவரின் எழுத்தோவியம்

3. நியூசியின் வரலாற்றை எளிமையான தொடராக்கித் தருகிறார்.

உஷா வலைப்பூக்களில் மட்டுமல்ல அச்சு ஊடகங்களிலும் வெற்றிகளைப் பெற்றுவரும் எழுத்தாளர். நல்ல கதைகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அப்பப்ப நடுவுல காமெடி கலந்த பதிவுகள்னு எல்லாவிதமாவும் அடிச்சு ஆடுவாங்க. நல்ல தெளிவான சிந்தனைக்குச் சொந்தக்காரர்.

1. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற அருமையான படிப்பினையைத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கும் விழிப்புணர்வுப் பதிவு.
2. பெரும்பாலான வலைப்பதிவர்களின் வாழ்க்கையை வ.ப.மு , வ.ப.பி என்றே பிரித்துவிடலாம் என்பதுதான் யதார்த்தம். இதை அருமையாகப் பகடி செய்கிறார் இந்தப் பதிவில்.
3. இது என்னோட நேயர் விருப்பமா அவர் போட்ட கவிதைப் பதிவு.

மதி என்று சுருக்கமாய் அறியப்படும் சந்திரமதி கந்தசாமி - அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். அவ்வளவுக்குப் பிறருக்கு உதவும் இயல்பும், வலைத் தமிழ் பற்றிய தொழில்நுட்பக் கூர்மையும் உடையவர். மிகப் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர். உலக சினிமாக்கள், ஜாஸ் இசை என்று பல்வேறு விஷயங்களைப் பதிந்து வரும் இவர் இயற்கை விரும்பியும் கூட.

1. வோர்ட்பிரஸ் மற்றும் தனி இணையதளம் நிறுவுதல் தொடர்பாக இவர் அண்மையில் எழுதியுள்ள பதிவு.
2. ஈழத்து இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஒரு சாளரத்தைத் திறக்கிறார்.
3. அவ்வப்போது சமீபத்தில் தன்னைக் கவர்ந்த பதிவர்களின் பட்டியலையும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் வெளியிடுகிறார்.
4. தன்னைச் சுற்றி நடக்கும் தமிழிலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை அக்கறையோடு பதிந்து வைக்கிறார் இந்த இழையில்.
5. உலக சினிமா பற்றிய இவரது பார்வை.
6. தன்னைக் கவர்ந்த இசை நிகழ்வுகளை ஒலி-ஒளிப் பதிவுகளாக்குகிறார் இந்த இழையில்.

செல்வநாயகி - கவித்துவமான எழுத்து நடை கொண்ட இவர் பேசுவது பெண்ணியம் உள்ளிட்ட அனைத்து வகையான ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்களைப் பற்றியும். தொழில் முறையில் ஒரு வழக்கறிஞரான இவர் இப்போது வசிப்பது வெளியூரிலென்றாலும் தன் உணர்வுகளை வலைப்பதிவு மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

1. உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன் என்கிற இவரது கேள்விக்கான அபாயகரமான பதில் ஆமென்பதுதானே?
2. ஒரு கவிதையில் தொடங்கி ஆணித்தரமான வாதங்களுடன் விரியும் இவரது வாதம் - பெண்கள் மூடிக்கொள்ள வேண்டும் என்கிற சர்வமத தத்துவத்தின் மீதானது.
3. ஜிகினாக் கவிஞரென்று அறிவுஜீவிகளால் அறியப்படும், சினிமாப் பாடல் எழுதுவதான கீழான தொழில் செய்வதற்காய் சற்றே தரம் தாழ்ந்ததென்று முத்திரை குத்தப்படும் வைரமுத்துவின் ஒரு அருமையான கவிதையை இங்கே பகிர்கிறார்.
4. மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பக்குவமிக்க தம்பதியினரின் பேட்டியை தன் குறிப்புகளோடு இப்பதிவில் கொடுத்திருக்கிறார்.

பத்மா அரவிந்த், இவரும் அமெரிக்காவிலிருந்து வலைப்பதிபவர். மருத்துவத் துறையில் பணிபுரிந்து வரும் பத்மா உடல் நலக் கல்வி குறித்த ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறார். மனிதநேயமும் சமுதாய நலன் குறித்த அக்கறையும் விரவிய இவரது எழுத்து ஆடம்பரமில்லாத எளிய மனதைத் தொடும் எழுத்து.

1. மணமுறிவுக்கான காரணங்களை அலசுகிறார் இத்தொடரில்.
2. தன் வாழ்க்கைத் துணையை சந்தித்த இனிய் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் இப்பதிவில்.
3. மதங்கள், நாடுகள் என்ற எல்லை கடந்து நிற்பது ஆதிக்க உணர்வு. அதன் பல்வேறு வடிவங்களைப் பற்றிய தனது கருத்தை தொடராக்கித் தருகிறார்.
4. நம் சமூகத்தில் அறிவுரை வழங்காத/வாங்கியிராத மனிதர்களே இருக்க முடியாது. மிகச் சுலபமாய்க் கிடைக்கும் பொருளிது. ஆனால் தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் அறிவுரை எரிச்சலூட்டுவதாய் இருந்து விடக்கூடாது. எப்படி இருக்கலாம் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்கிறார் இங்கே.

இன்னமும் எனக்குப் பிடித்த பதிவர்களின் பட்டியல் பெரிது. இருக்கும் நேரமும் என் பொறுமையும் சிறிதென்பதால் இப்பட்டியலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இங்கே போனால் நீங்களே விடுபட்டுப் போன நன்முத்துக்களை கண்டெடுக்கலாம்.
மேலும் வாசிக்க...

நகைச்சுவைச் சரம்

எப்பவுமே விருந்துன்னா இனிப்புதான் முதல்ல பரிமாறணும்னுவாங்க. அதன்படி அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் சரம் நகைச்சுவைச் சரமா இருக்கட்டுமேன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லைங்க, தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முதலில் எனக்கு அறிமுகமான பதிவும் ஒரு நகைச்சுவைப் பதிவரோடதுதான். அது நெல்லை மாவட்டத்துக்காரரான டுபுக்கு அவர்களின் பதிவுதான்.

நான் ஆன்சைட்டில் இருந்தபோது என் நண்பர் திரு. நட்ராஜ் அவர்கள் இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். நிஜமாவே வெளியூரிலிருக்கும் போது தமிழ் கேட்டாலே காதில் தேன் வந்து பாய்வது போல்தான் இருக்கும். அதிலும் படிக்க புத்தகங்கள் கிடைத்தால் பரம சந்தோஷமாகவும் இருக்கும். மிஞ்சிப் போனால் ஆளுக்கு நான்கு புத்தகங்கள் வைத்திருப்போம். அதையே மாத்தி மாத்தி ரொட்டேஷனில் விட்டுப் படித்து படித்து எல்லா வரிகளும் அனேகமாய் மனப்பாடமாகி விட்டிருக்கும். ஏதேனும் ஒரு தமிழ்ப்படத்தை தரவிறக்கம் செய்யும் பணி வெள்ளி மதியமே ஆரம்பித்து விடும். ஆளுக்கொரு பகுதியாக இறக்கிக்கொள்வோம். மொத்தமாய் ஒருவர் வீட்டில் கூடி மடிக்கணிணியை தொலைக்காட்சியோடு இணைத்து அந்த நாளில் படத்துக்கும் முன்னால் தியேட்டரில் போடப்படும் நியூஸ் ரீலை ஒத்த குவாலிட்டியில் தெரியும் தமிழ்ப்படத்தை பார்த்து எங்கள் தமிழார்வத்தைப் போக்கிக் கொள்ளுவோம். இந்நிலையில்தான் நண்பர் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தினார். அப்புறமென்ன, அங்கிருந்து தேசி பண்டிட்லாம் போயி அப்புறம் எப்படியோ தமிழ்மணத்தைக் கண்டுபிடித்து ஜன்ம சாபல்யமடைந்தேன். அது வேறு கதை.

இப்போது நான் சொல்ல வந்தது டுபுக்குவின் நகைச்சுவை எழுத்துக்களைப் பற்றி. இவரது ஜொள்ளித்திரிந்த காலம் என்ற மலரும் நினைவுத் தொடரானாலும் சரி சாதாரணமாய் ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்த நிகழ்வைப் பற்றிய பதிவானாலும் படிக்கும் போது அதிலிருக்கும் நேட்டிவிட்டி - நம்மால் அட நம்ம கதை போலவேயிருக்கே என்று எண்ணத்தோன்றும். அப்புறம் அப்படியே இதையெல்லாம் கூட இந்த மனுஷனால மட்டும் எப்படி இவ்வளவு நகைச்சுவையோடு எழுத முடியுது என லேசான பொறாமையையும் தரும்.

1. ஜொள்ளித்திரிந்த காலம்
2. இன்ன பிற கொசுவத்தி தொடர்கள்
3. கல்யாணம் - நேரடி ஒலிபரப்பு
4. அப்பாவி அம்பியின் அறிவுப்பசி

அடுத்தது நம்ப வெட்டிப்பயல் பாலாஜி. பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது என்கிற அருமையான கொள்கையோடு பதிவு எழுதி வரும் இவர் வெறும் நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமில்லை ஒரு ஆம்பிளை ரமணிச்சந்திரன் அப்படின்னும் சொல்லலாம். அந்த அளவு உணர்ச்சிகரமான காதல் கதைகளும் எழுதுவார்.

1. பிட் அடிச்சா தப்பாங்க என்று கேட்கிறார் இந்த அ(ட)ப்பாவி
2. இவரையெல்லாம் கட்டி மேய்க்க இவங்க வார்டன் பட்ட பாடு
3. கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு, விஜய், பேரரசு, S.J. சூர்யா என்று பலரையும் கவுண்டமணியின் பாணியில் காலை வாருகிறார்.

அடுத்தது நம்ம கண்மணி டீச்சர். நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா - இதுதான் இவங்களோட குறிக்கோள். இவங்களை வெறுமனே நகைச்சுவைப் பதிவர்ன்ற சின்ன வட்டத்துக்குள்ள் அடைச்சுட முடியாது. குழந்தைகளுக்குன்னு ஒரு தனி வலைப்பதிவு நடத்தறாங்க. பல விழிப்புணர்வு பதிவுகளும் போட்டு கலக்குவாங்க. தன்னோட செல்ல நாய் ச்சுப்பிரமணி, ஆனந்தம் காலனியிலிருக்கும் அம்புஜம் மாமி ஆகியோரின் கொட்டங்களை இவர் வர்ணிக்கும் அழகே தனி.

1. இப்படியும் ஒரு இனிஷியல் பிரச்சனை!
2. மடிசார் மாமியும் பைக்கில் வந்த மர்ம ஆசாமியும்
3. சன் டிவியின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியில் பதிவர்கள்

அடுத்தது அபி அப்பா. சூரியனுக்கே டார்ச் லைட்டா(இது கொஞ்சம் ஓவர்தான்) அப்படின்றா மாதிரி போன வாரம்தான் நட்சத்திரமா ஜொலிச்சுட்டு கீழ இறங்கினவருக்கு நான் ஒன்னும் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. அதுனால எனக்குப் பிடிச்ச சில இடுகைகளோட சுட்டி மட்டும் இங்க தர்ரேன்.

1. அந்த ட்ரஸ்ஸைப் பத்தி மட்டும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அப்படின்னு படையப்பாவில் ஒரு டயலாக் வருமே அதுதான் நினைவுக்கு வருது இவரோட இந்தப் பதிவைப் பார்க்கும்போது.
2. சரி, இந்தப் பதிவு நல்லா இருக்குதான். இல்லைங்கல. அதுக்காக எத்தனை தடவை போடுவீங்க சார்? இன்னொரு தபா போட்டால் அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்பப் படும். ஜாக்கிரதை.
3. ஆனாலும் இவரோட இலக்கிய ஆர்வம் இருக்கே, படிக்கறவங்களுக்கு அப்படியே புல்லரிக்கும்....


இன்னும் நிறைய எனக்குப் பிடித்த நகைச்சுவைப் பதிவர்கள் உண்டு. எனக்கு தட்டச்ச இருக்கும் சோம்பலால்தான் லிஸ்ட் ரொம்பச் சின்னதா இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் என் இதயத்துல இருக்கற லிஸ்டல இடம் கொடுத்துட்டேன். நம்புங்கப்பா.... நம்பி மன்னிச்சு விட்டுருங்க. நன்றி.
மேலும் வாசிக்க...

Wednesday, October 3, 2007

இந்த வாஆஆ.......ரம் , என் வாஆ.......ரம்.

வணக்கம். இந்த வாரம் என்னை வலைச்சரம் தொடுக்கச் சொல்லியிருக்காங்க பொன்ஸ். சொந்தமா பதிவெழுதணும்னாத்தான் நமக்கு கொஞ்சம் சுணக்கம். ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எழுத உட்காரும் ஆள் நான். ஆனா இது வெறுமே கைகாட்டும் வேலைதானே, நம்ம கற்பனைக் குதிரைக்கு ஒரு வேலையும் தர வேண்டியிருக்காதுன்ற துணிச்சலில் நல்லா மண்டைய ஆட்டிட்டேன். இப்ப உட்கார்ந்து யோசிக்கையிலதான் தோணுது இதுவும் கஷ்டமான வேலைதான்னு தோணுது(சாப்புடறது, தூங்குறது, புஸ்தகம் படிக்கிறது இது மூன்றையும் தவிர இந்த உலகத்துல எல்லாமே கஷ்டமாத்தானப்பா இருக்கு. :) ) இருந்தாலும் வாக்குக் கொடுத்துட்டதால (நாங்கல்லாம் நாட்டம பரம்பர இல்ல?), முடிந்தவரை எழுதப்பார்க்கிறேன். என்னமோ போங்க. என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன் அப்படின்னு ஒரு பாண்டியராஜன் படப்பாடல் ஞாபகம் வருது. ஆகையால் தமிழ் கூறும் நல்லுலகாகிய வலையுலகமே, இந்த ஒரு வாரம் மட்டும் பெரிய மனசு பண்ணி என்னோட தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

முதலில் பொன்ஸ்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டேயாகணும். இத்தனைக்கும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அவங்க மின்னஞ்சல் அனுப்பி உறுதிப்படுத்தியிருந்தாங்க. அதான் இன்னும் நாள் நிறைய இருக்கே, அப்பால பாத்துக்கலாம்னு அலட்சியமா இருந்ததுல மறந்தே போயிட்டேன். அதும் மறந்ததோட மட்டுமில்லாம் 4 நாள் சேந்தாமாதிரி விடுமுறை வேறயா, ஊருக்கு மூட்டை கட்டிட்டேன். அதுக்கப்புறம் எப்படியோ என்னைத் தொடர்பு கொண்டு கண்டிப்பா இந்த வாரம் மக்களை நாந்தான் படுத்துவேன்றதை உறுதிப் படுத்திக்கிட்டாங்க. ரொம்ப டென்ஷனாக்கினதுக்கு மன்னிச்சுக்குங்க பொன்ஸ்.

அப்புறம் வலைச்சர வழிகாட்டியின் படி முதல் இடுகை என்னுடைய பதிவுகளைப் பற்றி இருக்கணுமாம். நான் எழுதிய முக்கியமான பழைய பதிவுகளுக்குச் சுட்டி தரலாமாம். நான் எழுதின எல்லாமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைதானே, இதுல நான் எதுக்குன்னு தனியா சுட்டி தர? :) அதுனால இதோ என்னோட வலைப்பதிவின் சுட்டி. அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.

அப்புறம், ஒரு முக்கியமான டிஸ்கி. நான் எழுதின கவிதைகள் தாங்க எனக்குப் பிடிச்ச பதிவுகள்னு சொல்ல முடியும். பாக்கி எல்லாமே, குறிப்பா விவாதங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம். :(

சரி, அறிமுக இடுகை இதுக்கு மேல போனா நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன். அதுனால இத்தோட நிப்பாட்டிக்கறேன்.




அதிமுக்கியப் பின்குறிப்பு : தலைப்பை கே.டிவியின் கொண்டாட்டம் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது