07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 1, 2012

கதம்ப முறுக்கு




இன்றைய ஸ்பெஷல்
DISPASSIONATED DJ
மரகதம்
நித்திலம்
கே.பி.ஜனா...
உயிரோடை
தமிழ் உதயம்
kashyapan



    சிரிய நண்பர் அரசன் அறிமுகப்படுத்தியது, டிசேயின் வலைப்பூ.

இலங்கைத் தமிழர் பற்றி உரையாடும் பொழுதெல்லாம் இங்கிருக்கும் சில புலம்பெயர் நண்பர்கள் காட்டமாக ஏதோ சொல்வார்கள். ரத்தம் கொதிக்கும். உள்ளம் விழிக்கும். எனினும்.. நான் இவர்களை அறிந்தப் பனிரெண்டு வருடங்களாக சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் பியான்சே ஹசர்சன் அடெல் என்று கலந்து, கிழக்கின் கொழும்பு வீதிக்கதைகள் எல்லாம் முகம் மறந்தத் தாத்தாக்களின் நிழல்ஜாலம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தபின்னும்... சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாரிசுகளுக்குப் பாரம்பரியம் ஒரு சட்டை போல. எனக்கும் தான். உடை மாற்றுவது தவறில்லை என்பது மட்டுமல்ல, அவசியமும் கூட என்று நினைக்கிறேன். எனினும் பாட்டனின் நிழல்ஜாலங்கள், உயிர்வருடலாக அமைவதையும் உணர்ந்திருக்கிறேன், மதிக்கிறேன்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர் பதிவுகள் இணையத்தில் நிறைய உள்ளன. டிசேயின் பதிவை மேல்தட்டில் வைப்பேன். இவர் பதிவின் பல இடுகைகள் நிழல்ஜால உலகத்துக்கான ஓபன் டிகெட். மனம் விரும்பியபடி கொழும்பு நினைவுகளில் தொலைந்து போகலாம். விடுதலைப்புலிகளை வைத்து இலங்கையைப் புரிந்து கொண்டிருப்போரின் கண்களைத் திறக்கும் பல இடுகைகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்: யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?, புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்....

இவர் எழுதும் கவிதைகளுக்குப் பெரும்பாலும் தலைப்பு வைக்காதது சுவாரசியம். எண்ணங்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்?
    "மிக இயல்பாய் உரையாடத்தொடங்கும் இவர்களில் யாரேனும் ஒருவர்
    காதலியாகவோ தோழியாகவோ
    நமக்கு வாய்க்கக்கூடும் நாளை"
ரசமான கவிதை வரிகளுக்கு முன்னும் பின்னும் கலாசார அதிர்வு இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

எதைப் படிக்க முடியாமல் போனாலும், ஐந்து நிமிடங்கள் இந்த இடுகையில் செலவழியுங்கள்:
"உலக வரைபடத்தை விரித்து வைத்தால் அதிலொரு சிறு தீவாக மிதக்கும் இலங்கை, பலருக்கு இதமான காலநிலையுள்ள கடற்கரைகள் கொண்ட ஒரு நாடாகத் தெரியலாம். .ஆனால் இதைப் பூர்வீகத் தாயகமாய்க் கொண்ட -என்னைப் போன்றவர்களுக்கு- இலங்கை விதைக்கும் நினைவுகளோ வேறுவிதமானவை. அது போர் என்கின்ற, எதைக் கொண்டு கரைக்கவோ அழிக்கவோ முடியாத, சிவப்பும் கறுப்புமான வர்ணங்களைக் கொண்ட மாபெரும் துயரச் சித்திரம்" எனத் தொடங்கும் சில அரசியல் பிரதிகள் இடுகையில் இலங்கைத்தமிழர் பற்றிப் புத்தகங்கள் வாயிலாக bite size cultural knowledge தருகிறார். படித்து முடிப்பதற்குள் வலி விதைகள் முளை கண்டிருக்கும்.

இதயவருடல் என்றது இதையே.



    "மன்னார்குடியில் யார் வீட்டுக்குச் சென்றாலும் இட்லிக்குக் கொத்சு தான் செய்வார்கள்"
'ஆ! இட்லிக்குக் கொத்சா?' என்று நினைத்தேன் இதைப் படித்தவுடன். கொத்சுடன் இட்லி சாப்பிட்டதே இல்லை.

கொத்சு ஏறக்குறைய சாம்பார் போலவே இருப்பதைப் பார்த்தவுடன் என் அம்மாவுடனான சமையல் விவாதங்கள் நினைவுக்கு வந்தன.
    : இன்னிக்கு என்னம்மா சமையல்?
    : பொறிச்ச குழம்பு, தொட்டுக்கக் கூட்டு
    : பொறிச்ச குழம்பு இருக்கு.. கூட்டு எங்கேமா?
    : இதோ..
    : அம்மா.. இது பொறிச்ச குழம்புமா..
    : அதாண்டா.. இது பொறிச்ச குழம்பு.. இதோ பொறிச்ச கூட்டு (காய்களை மட்டும் வடித்தெடுத்து)
குரோம்பேட்டையில் யார் வீட்டுக்குச் சென்றாலும் கூட்டுதான் செயவார்கள்.

புவனேஸ்வரி ராமநாதனின் 'மரகதம்', நான் விரும்பும் சைவப் பதிவுகளில் ஒன்று :). கோவில், தேவாரம், மெல்லிசை, சமையல் என்று நிறைய எழுதியிருக்கிறார். 'கதம்ப முறுக்கு', 'முந்திரி அமிர்தம்' என்றால் என்ன தெரியுமா? இவருடைய சமையல் குறிப்பு இடுகைகளை படியுங்கள், தெரியும். சமையல் குறிப்பைப் படித்துக் கொண்டே வருகிறீர்கள்.. திடீரென்று கேழ்வரகு அல்வா, கொள்ளுத் துவையல், வெந்தயக் கஞ்சி என்றெல்லாம் வரும், அஞ்சேல், அது விருந்தினருக்காகச் சமைக்க வேண்டியவை.

மெல்லிசைப் பிரியர் போல. இவருடைய என்றும் இனியவை-ஏ.எம்.ராஜா இடுகையில் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன். வாணி ஜெயராமின் பாடல்களைத் தொகுத்து ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறார். தேடிப் பிடித்து ரசியுங்களேன்?

கோவில்கள் பற்றி எழுதுவதைத் தன்னுடைய சாதனையாக நினைக்கிறார் - என்று நான் நினைக்கிறேன். உழைப்பும் முனைப்பும் உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழ்ப் பதிவுகளின் மிக நேர்த்தியான "கோவில்" பதிவு என்று தயங்காமல் சொல்வேன். விவரங்களும், படங்களும், தலப்பாடல்களும் சேர்த்து extremely well presented. சமீபத்தில் படித்த இவரின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் பதிவு என்னை நெகிழ வைத்தது. என் அம்மா ஊரில் என் அம்மா பெயரில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்களே? about time!



    ல்லமை இதழின் பொறுப்பாசிரியராகவும் நித்திலம் பதிவின் ஆசிரியராகவும் வியக்க வைக்கிறார் பதிவர் பவள சங்கரி.

    "நான் என் 'சுயம்' என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆள் காட்டி விரலைத் திருப்பி என் மீதே காட்டுவதா? இல்லை தத்துவ ஞானிகளை நாடுவதா?".
அருமையான கேள்வி. தன்னுடைய ஆன்மீகப் பதிவு ஒன்றில் விளக்கியிருக்கிறார், படியுங்கள்.

நித்திலம் பதிவில் வந்திருக்கும் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் அவசியம் படிக்க வேண்டியவை. பெண் சாதனையாளர்கள் பற்றிய இவருடைய பதிவுகளில் எளிதில் கிடைக்காத விவரங்களைச் சேர்த்திருப்பது சுவை. அன்னி பெசந்ட் அம்மையார் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த விவரம் ஒரு உதாரணம். பெண்களைக் காந்தியவாதிகள் என்று வித்தியாசமான பார்வையோடு இவர் சொல்வதை ஓரளவுக்கு ஏற்க முடிகிறது.

தமிழ் மொழி எத்தனை தொன்மையானது? அ) 10,000 வருடங்கள் ஆ) 25,000 வருடங்கள் இ) 50,000 வருடங்கள் ஈ) 100,000 வருடங்களுக்கும் முந்தையது.
விடையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இவர் எழுதியச் சிறுகதைகளில் வித்தியாசமான 'பொதுவில் வைப்போம்' பாணிச் சிறுகதை. யதார்த்தமான கதை.

தொடர்கதை எழுதுவது, சிரமத்தின் உச்சியில் ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேல் நிற்பது போல. முனைப்போடு எழுதுவது nearly impossible. பொதுவாகக் கதைகளை யாரும் படிப்பதில்லை; தொடர்கதை என்றால் கேட்கவே வேண்டாம். 'அருமையான தொடர்' என்று விழும் பின்னூட்டங்களை நம்பி எத்தனை நாள் எழுத முடியும்?. ஒரு வேகத்தை வெளிப்படுத்த எழுதினாலும், மனதோரமாக "..த்தா.. எவனாச்சும் படிக்கிறானா?" என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். தொடர்கதை எழுதி முடிக்கத் தீவிர உறுதி வேண்டும். கற்பனை, கரு, நடை எல்லாம் secondary.

அந்த வகையில் பதிவர் எடுத்த செயலை முடித்தச் சாதனையாளர். முப்பத்து நான்கு தொடர்களாக இவர் எழுதிய 'வெண்ணிலவில் ஒரு கருமுகில்' எனும் தொடர்கதை குறுநாவலாக வெகுஜனப் பத்திரிகையில் வந்ததைப் படித்ததும் நிறைவாக இருந்தது.



    ட்டினிக் குழந்தைகள் பளீரென்று சிரிக்கும் புகைப்படத்துக்கு இந்தக் கவிதை:
    "ஆதரவில்லை, ஆனாலும் கண்களில் ஒளி!
    அடுத்த வேளை சோறில்லை,
    ஆனாலும் முகத்தில் நம்பிக்கை!"
"இல்லீங்க, அவங்க சிரிக்கச் சொன்னாங்க போட்டோவுக்கு!"
சுருக்கென்று தைக்கும் இது போன்ற கவிதைகளை கே.பி.ஜனாவின் வலைப்பூவில் படிக்கலாம்.

நிறைய அரைப்பக்க ஒருபக்கச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அப்பா ஒரு நாளும் என்ற இந்தப் பரிசுச் சிறுகதையின் நெறிச்சிக்கல் யதார்த்தமானது. மோதிரக்கையின் எதிர்பாரா திருப்பம் ரசிக்க வைக்கும்.

'பாடாத பாடல்கள்' எனும் பதிவில் திரைப்படத்துடன் ஒன்றிப்போனப் பாடல் காட்சிகள் பற்றி எழுதுகிறார். சுவாரசியமான ஆக்கம். தொடர்ந்து எழுதுவாரென்று நம்புகிறேன்.



    நாள்பட்டுத் தெரிந்து கொண்ட ஒரு சிறுகதைப் போட்டி வழியாக அறிமுகமான மேல்தட்டுப் பதிவு, உயிரோடை.

பெரும்பாலும் கவிதைகள். மயனின் மாளிகை போல ஜாலக் கொக்கி போட்டு இழுக்கும் வரிகள். கானல் போலிருக்கிறதே கவிதை வரி என்று கால் வைத்தால், கடலினும் ஆழம் கவிதைக் கரு. பின் வரும் கவிதைகளைப் படியுங்கள். பிறகு, இருவரிக் கவிதை பற்றி எத்தனை நேரம் சிந்திக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள்.
    "கால் தழுவ வரும் அலையாய் என் காதல்
    எட்டி உதைக்கும் சிறுபிள்ளையாய் உனது..."
    "கரை புரண்ட வெள்ளமாய் காவேரி
    கடக்க கிடைப்தென்னவோ கொள்ளிடம் மட்டுமே..."
    "உனது குடை விரிப்புகளில் சட்டென
    அடங்கியது எனக்கான வான்.."
என்ன நான் சொல்வது?

கட்டுரைகளும் கதைகளும் அப்படித்தான். வளவளவென்று எழுதுவதில்லை. பயணக்கட்டுரை உட்பட! சொல்ல வந்ததை சுருங்கச் சொல்லிப் போகிறார். படித்த பிறகு நாம் தான் மணிக்கணக்கில் உருட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. படுத்தும் எழுத்தைப் படித்துப் பாருங்களேன்?: ஊர்மிளையின் புலம்பல், பொம்மலாட்டம்.

live as or live in? அகக்கண்ணாடி பார்க்கச் சொல்லும் பெண்ணியம் பாராட்டுக்குரியது. படித்தபின் இயல்பாக வரும் மென்னகையைக் கட்டுப்படுத்த முடிந்தால் நீங்கள் விசுவாமித்திரர்.

க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா?, எனக்குப் பிடித்த இன்னொரு கட்டுரை. gotta love it, of course.

சொல்லாட்சி பற்றி இவரது எழுத்திலிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இலக்கிய mood வந்தால் நான் படிக்கும் பதிவுகளில் ஒன்று. 'தமிழ்த்திமிர் பிடித்தவள்' என்ற இவரின் சுய அறிமுகம் is an intellectual turn-on.



    கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிறுகதை, கொஞ்சம் சமூகம், கொஞ்சம் தன்னலசல், கொஞ்சம் உட்பார்வை, கொஞ்சம் சினிமா என்று 360° சுற்றும் எழுத்துக்குச் சொந்தமான 'தமிழ் உதயம்' இடுகைகளைப் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன்.

இவருடைய சிறுகதைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியானதில் ஆச்சரியம் இல்லை; பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானவற்றைச் சேமித்து வைத்திருக்கிறாரே என்பதில் உண்டு! பத்திரிகை சிறுகதை வெளியீட்டில் பத்து வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள முடிந்தது. என்னைக் கவர்ந்த சிறுகதைகள் சில:
அகதி: கணையாழியில் வெளிவந்த கதை. உண்மைக்கதை என்கிறார் பதிவர்.
காயங்கள்: சாவியில் வந்த கதை. கதை வெளிவந்த (1994) இதழுடன் சாவி நின்றுவிட்டதாம். உபரி விவரம் சுவாரசியம்.
எதுவரை..: கல்கியில் வந்தக் கதை. நான் மிகவும் ரசித்த காதல் மஸ்லின் கதை.

சமூகம் மற்றும் உட்பார்வைப் பதிவுகளில் யதார்த்தச் சிக்கல்கள் பலவற்றை அலசியிருக்கிறார். "நினைத்த வாழ்க்கை கிடைத்தால் சந்தோஷமா... கிடைத்த வாழ்க்கையில் மகிழ்வதில் சந்தோஷமா?" என்ற பதிவை என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள் பார்வைக்குச் சில:
நீயா... நானா...?: வாழ்க்கைப் பயணத்தில் இந்தப் போராட்டம் எந்த வயதில் தொடங்குகிறது? எப்போது முடிகிறது?
கோபத்தைக் கொன்றுவிடு: எத்தனை பேர் எப்படிச் சொன்னால் என்ன? 'உங்களுக்கு அசாத்திய கோபம் கண்ட நேரத்தில் கண்டதற்கும் வருகிறதா? அரை மாத்திரை கோபஸ்வா சாப்பிட்டால் பூரண குணம்' என்று யாராவது விளம்பரம் செய்கிறார்களா என்று நானும் ஏழு வயதிலிருந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
செகன்ட் இன்னிங்கஸ்: விளையாட்டில் மட்டுமா இரண்டாவது இன்னிங்க்ஸ்? அற்புதமான கட்டுரை.
குடும்பம் ஒரு கதம்பம்: ஒரு கோடை ஞாயிறில் நான், என் மகன், அவனுடைய நண்பர்கள் எல்லாரும் இந்தப் பட்டியை நிறைவு செய்தோம். உங்கள் குடும்பம் எத்தனை பெரிது? உங்கள் பிள்ளைகள் அண்ணாந்து பார்த்தால் குடும்ப மரத்தில் எத்தனை குரங்குகளைக் காண்பார்கள்? (ஓகே, புலிகளை).



    திவுகளைப் படிக்கும் பொழுதும் சரி, எப்பொழுதாவது இவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தாலும் சரி.. இவர் எதற்கும் யாருக்கும் அஞ்சாதவர் என்பது தெரியும்; அதே நேரம், எல்லோரைப் பற்றியும் கவலைப்படுபவர் என்றும் புரியும். 'உலக உபாதைகளுக்கு அமெரிக்காவே காரணம்' posture தவிரப் பெரும்பாலும் sophism தாண்டிய சிவப்புச் சிந்தனை.

முற்போக்கு எழுத்தாளர் காஸ்யபனின் இடுகைகள், பல விதங்களில் இன்றைய தலைமுறைக்குப் பயன்படுவதாக நம்புகிறேன். அந்த நாள் அரசியல், பொருளாதாரம், கட்சிகள், கடன்கள், தந்திரங்கள் என்று பலவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ள ஒரு அவசரக் காலங்காட்டி. உதாரணமாக:
மின்சார இலாகாவும் மின்சார வாரியமும்
தென் இந்திய ரயிலும் செட்டிநாட்டு முதலாளிகளும்
1967ம் ஆண்டு தேர்தல்
அரசியல் தலைமையும் நிர்வாகத் தலைமையும்.

காட்டமான அரசியல் மற்றும் சமூகச் சாடல்களுக்கு இடையில் மதம், கடவுள், வெளி, உயிர், மொழி, நாத்திகம் பற்றிய அறிவார்ந்த பதிவுகள் எழுதுகிறார். இவருடைய பட்டறிவு என் போன்றவருக்குப் பாடசாலை.

சிறு கதை என்றால் என்ன? என்ற இடுகை, சிறுகதை எழுதுவோருக்கு மட்டுமல்ல, படிப்போருக்கும் பயன்படும்.

இவருடைய சிறுகதைகள் are in a different plane. துணிச்சலான, எதிர்பார்க்க முடியாத, சில சமயம் நடுங்க வைக்கும் கருத்துக்கள். இபிகோ 375 என்றச் சிறுகதையைப் படியுங்கள். இருபது இருபத்தைந்து வரிகள் தான். ஆயுள் முழுதும் நினைவில் நின்று பாதிக்கும். இது உண்மையாக இருக்குமா? சாத்தியம் உண்டா? அரைச் சாத்தியம் இருந்தாலும் எப்படி வழி வழியாக அரைச் சாத்தியத்தை ஏற்றோம்? என்ன துணிச்சல் இவருக்கு? முற்போக்கு என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?... என்று பலதரப்பட்ட சிந்தனைகள் படிப்பவரின் பக்குவத்துக்கேற்ப ஓடும். மெள்ளத் தெளிவேற்பட்டு இந்தக் கதையின் சிக்கலான யதார்த்தம் சிலருக்கு மட்டுமே உறைக்கும் என்று நினைக்கிறேன். எத்தனை முறை படித்திருக்கிறேன், எத்தனை சபாஷ்கள் போட்டிருக்கிறேன் என்று கணக்கே கிடையாது. அவசியம் படியுங்கள். சிறுகதையைப் படித்துவிட்டு, மீண்டும் இவரின் 'சிறுகதை என்றால் என்ன?' இடுகையைப் படியுங்கள்.

பிற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்று தொடங்கலாம் என்றிருக்கிறேன். யாராவது சேருவார்களா?



    திரா பார்வைகள் பதிவில் இலக்கியத்தில் மருத்துவம் என்ற தலைப்பில் அருமையான கட்டுரைகள் எழுதிவந்த (வரும்?) ஆதிரா முல்லைக்கு இன்றைய shout out.



➤➤6. கைக்குள் இலக்கியம்

26 comments:

 1. படிக்காத நிறைய நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் தேடலுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அப்பாதுரை அவர்களே! 1936ல் பிறந்தேன். 76 முடிந்து 77 நடக்கிறது அதற்காக "கிழவன்" என்று குறிப்பிடுவது கொஞ்சம் அதிகமில்லையா! மிகச்சிறப்பாக என்னை அறிமுகப்படுத்தியுள்ளதற்கு நன்றி.உம்முடைய "மேதமை" ,அதன் நுண்ணிய அறிவியல் கலந்த வெளிப்பாடு,வாசிப்பு சுகம் அருமை.வாழ்த்துக்கள்---கஸ்யபன்.

  ReplyDelete
 4. காஸ்யபன் ஐயா, ஏற்புடைய term of endearment என்று எண்ணி அப்படி எழுதினேன். நீங்கள் விளையாட்டாக ஆட்சேபிக்கிறீர்களா அல்லது புண்பட்டக் கேள்வியா என்பது புரியவில்லை. நீக்கிவிட்டேன். உங்களைப் புண்படுத்தும் எண்ணமே இல்லை. என் தவறை மன்னிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 5. அருமையான பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்துள்ளீர்கள். காச்யபன் அவர்களையும், பவள சங்கரியையும் மட்டுமே படித்திருக்கிறேன். பவளசங்கரி குழுமத்திலும் இருப்பதால் அநேகமாய் அவருடைய பதிவுகள் அனைத்துமே படித்திருக்கிறேன். மங்கையர் மலர், அவள் விகடன் போன்றவற்றிலும் அவருடைய எழுத்துகள் வந்திருக்கின்றன. திறமையானவருக்கு நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
 6. இப்போக் கொஞ்சம் வம்பு: :)))
  இட்லிக்குக் கொத்சு நல்லா இருக்கும். சாம்பார் வேறே, கொத்சு வேறே. அப்புறம் பொரிச்ச குழம்புக்குப் புளி விட்ட கீரை நல்ல காம்பினேஷன். அதே பொரிச்ச கூட்டு என்றால் குழம்புக் கருவடாம் போட்ட குழம்பு, அல்லது ஏதேனும் வற்றல் போட்ட வற்றல் குழம்பு. புளி விட்ட கூட்டு என்றால் மோர்க்குழம்பு.

  ReplyDelete
 7. பொக்கிசமாக பதிவுகளை கொடுகிரீர்கள் வர்ணனைகள் உவமைகள் கூட தனிதன்மையை மிளிர்கிறது வாழ்த்துக்கள் .......

  ReplyDelete
 8. அப்பாதுரை சார். மிக்க நன்றி.
  ஏனைய அறிமுகங்களும் பெருமைக்குரிய அறிமுகங்கள். வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 9. அப்பதுரை அவர்களே! ஒரு கிண்டலுக்கு எழுதினால் ----77 வயசுக்காரன கிழவன்னு சொல்லாம எப்படி கூப்பிடுவாங்க..சென்னையில நான் "பெரிசு"..நெல்லாயில நான் "தாத்தா".நாகபுரில நான்"சாசா"..---காஸ்யபன்

  ReplyDelete
 10. கதம்ப முறுக்கு',

  முறுக்கான அறிமுகங்கள்..

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. கதம்ப முறுக்கு நல்ல சுவை. அறிமுகமான அனைத்து முத்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அறிமுக மான அனைவருக்கும் , தங்களிற்கும் நலவாழ்த்து. மிக மிக அருமை. புதிய தளங்கள் எனக்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. பல பதிவர்கள் புதியவர்கள் எனக்கு ! நன்றி சார் !
  அறிமுகமான அனைத்து புதியவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. அன்பின் அப்பாதுரை சார்,

  மனமார்ந்த நன்றிகள். என் வலைப்பூவைப்பற்றி நல்ல அறிமுகம் கொடுத்துள்ளீர்கள். ஆரம்பத்தில் பல நண்பர்கள் என் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. நானும் அவர்களுடன் அவர்களின் வலைப்பூக்களினூடே பயணித்துக் கொண்டு சுகமாக பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்ததன் மூலம் நட்புக்களை தக்க வைத்துக் கொண்டிருந்தேன்.. காலத்தின் கட்டாயம், பணிச்சுமையின் காரணமாக நண்பர்களின் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்தாலும், பின்னூட்டம் ஒழுங்காக போட முடியாமல் போய்விட்டது.. மெல்ல, மெல்ல என் நட்பு வட்டம் சுருங்க ஆரம்பித்து விட்டது. இந்த சூழ்நிலையிலும்,தங்களைப் போன்ற பரந்த மனம் கொண்ட சிலர் என்னை உற்சாகம் கொடுத்து ஆதரித்து வந்தீர்கள். இந்த நேரத்தில் அதற்கு எம் சிரம் தாழ்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதிபலன் எதிர்பாராத தங்களின் நட்பு அனைவருக்கும் ஒரு வரம் சார்.. பணிவான வணக்கங்கள் நண்பர்கள் அனைவருக்கும்..

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 15. பல அறிமுகங்கள் கிடைத்தன.

  நன்றி அப்பாதுரை சார்..

  ReplyDelete
 16. தங்களால் அறிமுகம் செய்யப்பட்டதை மிகவும்
  பெருமையான விஷயமாகக் கருதுகிறேன். அதுவும் இவ்வளவு விரிவாக, பல்வேறு பதிவுகளைச் சுட்டிக் காட்டி, குறிப்பாக கோவில் பதிவுகளைப் பற்றி தாங்கள்
  குறிப்பிட்டு எழுதியிருந்த விதம், மனதை மிகவும் நெகிழச் செய்தது. மேலும் தாங்கள் அறிமுகம் செய்வித்த அனைத்துப் பதிவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். மீண்டும் மிக்க நன்றி அப்பாதுரை சார்.

  ReplyDelete
 17. உங்களின் வாசிப்பு தளங்களின் தேர்வுகளை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இன்றைய ஸ்பெஷலும் அருமை.

  ReplyDelete
 18. இதை எல்லாம் சேமித்துக் கொண்டு அப்புறம்தான் பார்க்க முடியும். நிறைய நல்ல தளங்கள் என் சுவாரஸ்யத்துக்குட்பட்டு.... எனவே உங்கள் அறிமுகங்களில் என் ரசனைக்குரியதைப் பொறுக்கி எடுத்து சேமித்துக் கொள்கிறேன். அந்தந்த நாளில் உட்கார்ந்து மொத்தமும் பார்க்க முடியவில்லை!

  அதென்ன இட்லி கொத்சு எல்லாம் மன்னார்குடியில் மட்டும்தானா....வேறெங்கும் செய்வதில்லையா என்ன..!

  ReplyDelete
 19. சரியாச் சொன்னீங்க ஸ்ரீராம்.. என்னோட பதிவுகளை எனக்கு முன்னால எழுதுற ரெண்டு பேர்ல ஒருத்தர் நீங்கனு மறுபடி நிரூபிச்சுட்டீங்க.

  என்னா.. இட்லிக்கு கொத்சு மத்த ஊர்லயும் செய்றாங்களா, அடப்பாவமே! மன்னர்குடி ஒரு ஊர் தானேனு பாத்தா.. சாம்பார், சட்னி, மிளகாய்ப்பொடி ஊர் ஊரா தூக்கிட்டு அலையமுடியாது ஸ்வாமி!
  (கணேஷ்..மோகன்ஜி.. இங்க வாங்க.. கொத்சுக் கழகக்காரங்க ஏதோ சதி செய்யுறாங்க...)

  எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அனந்தபூர்/குண்டக்கல் அருகே ஒரு இடத்தில் தங்கிய போது நண்பர் வீட்டில் இட்லிக்கு தக்காளித்தொக்கு கொடுத்தார்கள். இட்லிக்கு ஊறுகாய்! எனக்கு அழுகையே வந்துவிட்டது.

  ReplyDelete
 20. //இட்லிக்கு ஊறுகாய்! எனக்கு அழுகையே வந்துவிட்டது. //

  அடக் கொடுமையே... எனக்கும் அழுகை வரும் போலத்தான் இருக்கிறது!

  ReplyDelete
 21. கதம்ப முறுக்கு.... குணம் மணம் நிறைந்த நல்ல மொறு மொறு.....

  நிறைய புதியன..... அறிமுகத்திற்கு நன்றிகள்...

  இலக்கிய மருத்துவம்.... ஆதிரா அவர்களின் தமிழ் உழைப்பு அசாத்தியமானது....

  ReplyDelete
 22. //அரை மாத்திரை கோபஸ்வா சாப்பிட்டால் பூரண குணம்' என்று..//

  தப்பித் தவறி 'கோபஸ்வா' முழுமாத்திரை சாப்பிட்டு விட்டால், இன்னொரு அரைமாத்திரை போட்டுக் கொள்ளணுமோ? இல்லே, அடுத்த தடவை கோபம் வரும் போது முன்னாடி போட்டுக் கொண்ட அரை மாத்திரையே போதும்ன்னு இருந்துடறதா?.. ஏதாவது விளம்பரம் வந்தா, அதையும் பார்த்து வைத்துக் கொண்டு சொல்லிடுங்க, அப்பாஜி..

  //தொடர்கதை எழுதுவது சிரமத்தின் உச்சியில் ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேல் நிற்பது போல//

  அதற்கும் மேலே இன்னொரு ஸ்டூல் போட்டு சிரமப்பட்ட மாதிரியான எழுத்துக் கோலம்! வாத்தியார் நினைவில் பளிச்சிட்டுப் போனார்!

  //கோவில்கள் பற்றி எழுதுவதைத் தன்னுடைய சாதனையாக நினைக்கிறார்..//

  பு.ரா. பற்றி நீங்கள் சொல்லும் பொழுது ஏனோ இராஜராஜேஸ்வரி மேடம் பதிவுகளும் நினைவில் நிழலாடின!

  அப்புறம், பொறிச்ச குழம்புக்கு பெஸ்ட் சாய்ஸ் எனக்குத் தெரிஞ்சு புடலங்காய் தான்!

  கதம்ப பஜ்ஜி கேள்விப்பட்டிருக்கேன்; கதம்ப முறுக்கு கூடவா?..

  இபிகோ 375-ஐப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

  சும்மாச் சொல்லக்கூடாது, இன்றைய கச்சேரி சொக்கச் செய்திருக்கிறது! நன்றி, அப்பாஜி!

  ReplyDelete
 23. ஹா ஹா ஜீவி சார்.. முழுமாத்திரை கோபஸ்வா சாப்பிட்டால் புத்தனாகலாம்.. அப்புறம் ரௌத்ரம் பழக முடியாமப் போயிடுமே?

  இராஜராஜேஸ்வரியோட பதிவுகள் இன்னொரு orbit. அவங்களோட பதிவு நினைவுக்கு வராம கோவில் கடவுள் பக்தி பதிவுகள் எழுதுவதும் படிப்பதும் கஷ்டம். உண்மை தான்.

  புடலங்காய் கறியா கூட்டா? தேங்காய் கலந்தா இல்லை பயத்தம்பருப்பு நிறையக் கலந்து செய்வாங்களே அதுபோலவா? இருந்தாலும் இட்லிக்கு கொத்சுன்னது தாங்கலிங்கோ.

  ReplyDelete
 24. டி.சே.தமிழனின் பதிவுகள் வாசித்திருக்கிறேன். மற்ற பதிவுகள் எல்லாமே எனக்கு புதிதுதான். நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 25. என்னுடைய படைப்புக்களை அழகுற விமரிசித்து பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. மனதில் எழும் மகிழ்ச்சியையும் குறிப்பிடவேண்டும் நான்....

  ReplyDelete
 26. காஷ்யபன் அய்யா பற்றிய தங்கள் பகிர்வு- என்னையும் பெருமிதப்பட வைத்தது. ஏனென்று தெரியவில்லை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது