07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மகேந்திரன் பன்னீர்செல்வம். Show all posts
Showing posts with label மகேந்திரன் பன்னீர்செல்வம். Show all posts

Sunday, October 19, 2014

அம்புலிப் பருவம்!!!








" எந்தச் சேனல் மாத்தினாலும் போட்டதையே போடுறான்.... புதுசா இந்த உலகத்தில எதுவுமே இல்லையா?............"
" ஏங்க புதுசா ஏதாவது மாடல் வந்திருக்கா ... எல்லாம் பழசு மாதிரியே தெரியுதே.."
புதிய தகவல்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.
பொதுவாக, நேரம், தரம்  மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
யாருமே எங்கேயும் காத்திருந்து கிடைக்கும் ஒரு பொருளுக்காக காத்திருக்க விழைவதில்லை. நேரம் காரணமாக இருக்கலாம்? இந்தப் பொருளுக்காக இவ்வளவு நேரம் காத்துக் கிடக்கணுமா ?? என்ற தரம் குறித்த கேள்வியாகவும்.. ஏ..அப்பா... இப்பளவு விலையா இதுக்கு இவ்வளவு கூட்டமா?
ஒரு புதிய பொருளை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம், யாராவது பயன்படுத்திப் பார்த்து, நல்லா இருக்குன்னு சொன்ன பிறகு அந்தப் பொருளுக்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்துக்கிடந்து வாங்குவோம்.
ன்று பல தொலைகாட்சி நிறுவனங்களும், ஊடகங்களும், பள்ளி கல்லூரிகளும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்கிறார்கள். நமக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.








"பழையன கழிதலும்
புதியன புகுதலும் "
என்றைக்கும் அவசியமான தேவையே. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தால் தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நம் நாட்டுக்கு வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும்.

சிறுபனை ஓலையில்
சிலவரிகள் எழுதி
புறாவிடு தூதனுப்பி!
ஒரு திங்கள் காத்திருந்தேன்!
மூன்றுபக்க கடிதத்தில்
முழுமனதை எழுதிவிட்டு
ஒரு வாரம் காத்திருந்தேன்!
தந்தியெனும் நந்தியில்
சில வார்த்தைகள் அனுப்பி
ஒரு நாள் காத்திருந்தேன்.........
நினைத்த நேரத்தில்
குறுஞ்செய்தி அனுப்பி
அடுத்த நொடி பதில்கண்டேன்
வியந்தேன் விஞ்ஞானத்தை
அவசியமான ஆகிருதிகள் என
வாரி அணைத்துக்கொண்டேன்....

=====================================================================



அம்புலிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் அம்புலிப் பருவம். அமுதுண்ணும் போது வாயினுள் இருக்கும் உணவை உதடு வழியாக பிதுக்கி வெளியே கொண்டுவந்து கைகளால் முகம் முழுதும் கோலம் போட்டு அன்னையைப் பார்க்கும் குழந்தை, எனதருமைச் செல்லமே உனக்காகவே இந்த அமுதூறும் உணவென அமுதூட்டும் அன்னையவள் அம்புலியைக் காட்டி குழந்தைக்கு அமுதூட்டுதலே அம்புலிப் பருவமாம். இப்படியான அழகான பருவத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் இளம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசும் பதிவர்களைக் காண்போம்.

=======================================================================


தொழில்நுட்பம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் தங்கம்பழனி அவர்கள். இதோ பாருங்கள், தானியங்கி பண இயந்திரத்தில் பணமெடுக்க பணமெடுக்கும் அட்டை இல்லாமல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறையொன்றை விளக்குகிறார் வாருங்கள் பார்ப்போம்.

தங்கத் தமிழ்மகனே
தருவித்தாய் இனிதாய்
தகவல் தொழில்நுட்பங்களை
உருவிலும் ஏற்றி - எம்
சிந்தனைக்கு விருந்தளித்தாய்
இன்னும்பல நுட்பங்களை
எமக்காய் வழங்கிடவே
வாழிய எம்மானே!!

=========================================================================


புயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி  மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.ரும் இந்த இளம் விஞ்ஞானியை சென்று பார்ப்போம் வாருங்கள்.


மின்சார மின்னனுக்களை
செயல் இழக்கச் செய்திடவே
உபாயம் கண்டெடுத்தீர் - உம்
செயற்கரிய செயலிது
போற்றத் தகுந்ததய்யா!!

=======================================================================


கணினி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம். அதிலும் நொடிக்கு நொடி புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.இதோ நண்பர் சில்வெஸ்டர் சிபி விண்ணரசன் அவர்கள் தனது தளத்தில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பொன்றை விளக்குகிறார்.

செல்பேசி செய்தியை
செல்லமாக சொல்லும் தம்பி
செவ்வனே தொடருங்கள்
செழிப்பான உம் பணியை
களிப்புடனே ஏற்கிறோம்
நீவீர் தரும் செய்தியினை!!!

====================================================================


மாணவப் பருவத்தில் இருக்கும் அறிவுப்பசி அளவற்றது. அத்தகைய பருவத்தில் இன்று உலகமே அனுபவித்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலுக்கு ஒரு உபாயம் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு மாணவர். நண்பர் இளங்கோ தனது வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார் வாருங்கள் பார்ப்போம்.


கரியமில வாயுவை
கரைத்து உருமாற்றிட
கனிவாக வழி சொன்னாய்
கரு சுமந்த வான்மேகம் - உன்னை
கருணைகொண்டு வாழ்த்தட்டுமே!!

===================================================================


குறைந்தபட்சம் ஆறுமாத காலம் காத்திருந்தால் தான் நாம் தங்குவதற்கு வீடு கட்ட இயலும். ஆனால் இங்கே பாருங்க ஒரே நாளில் வீடு தயார் செய்கிறார்களாம். ஆச்சர்யங்களுக்கு அளவே இல்லை.

அஸ்திவாரம் போட்டு
பத்து நாள் தண்ணீர்விட்டு
அதற்கு மேல்கட்டி
உச்சிக்கூரை போட்டு
அன்பகத்தில் குடியேற
ஆறுமாதம் ஆகிடுமே!
ஒரு நாளில் அதைச்செய்யும்
புண்ணியவாளனே
எங்கய்யா நீ இருக்க.....

=====================================================================




இயந்திரந்துறையில் ஒரு அரிய சாதனை படைத்து  அரசின் "இளம் விஞ்ஞானி விருது" பெற்ற திரு.செந்தில்குமார் அவர்களை நமக்காக அறிமுகப்படுத்துகிறார்கள் இங்கே. வாருங்கள்  சென்று பார்த்து வாழ்த்தி வருவோம்.
இரு உலோகத் தனிமத்தை
ஓட்டுவதில் நீ புரிந்த
இமாலய சாதனை
இயந்திரத் துறைக்கு
இன்னுமொரு வைரக்கிரீடமே!!

====================================================================

அகண்ட பெருவெளியில்
அடியெடுத்த மனிதனுக்கு
அறிவியலே விடிவெள்ளி....
நிற்காமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள். இன்னும் பெருகும் நித்தமும் நித்தமும். ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கும் நற்பதிவுகளை வாசிப்போம், நேசிப்போம், வளம் பெறுவோம் வாழ்த்துவோம்.




இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுறுகிறது. கடந்த ஏழு நாட்கள் ஒரு பிள்ளையாய் நான் உங்களோடு தவழ்ந்திருந்தேன். அனுபவம் பல பெற்றேன். என்னை ஆசிரியனாய் அமர்த்திய ஐயா.சீனா அவர்களுக்கு மீண்டும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள். அருமையாக கருத்திட்டு என் எழுத்துக்களை மேம்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
 
 
என்றென்றும்
அன்புடன்
அன்பன்
மகேந்திரன்







மேலும் வாசிக்க...

Saturday, October 18, 2014

வருகைப் பருவம்!!!








" ஏம்பா சண்முகம்.. எதுக்காக காலை தாங்கித் தாங்கி நடக்கிற"
" மாடிப்படி ஏறயில கால் தவறி சுளுக்கிடுச்சி முருகேசா..."
" ஏம்பா கொஞ்சம் பார்த்து கவனமா ஏறக்கூடாது........."
================================================================
"ஏன்டா மாப்ள... பாஸ் நேத்து உன்னை ரூம்க்கு கூப்பிட்டு லெப்டு ரைட்டு வாங்கிட்டார் போல... என்ன ஆச்சி..??"
"மாம்ஸ்... நேத்து பாஸ் ஒரு டாகுமென்ட் அனுப்பியிருந்தார். அது மிஸ் ஆயிடுச்சி அதான் திட்டினார்..."
"ஏன் மாப்ள... முக்கியமான டாகுமென்ட் போல தெரியுது கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதா..."
==========================================================

"கவனம்.....கவனம்...கவனம்....கவனம்...."

நிச்சயமாக ஒருநாளைக்கு ஒரு நேரமாவது நம்மைப் பார்த்து வேறொருவரோ, வேறொருவரைப் பார்த்து நாமோ சொல்லும் சொல்.
"அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக்கண்டு மிரளாதே ....." என்ற பாடல் மிதிவண்டி ஓட்டும் போது இருக்கவேண்டிய கவனத்தைச் சொல்கிறது.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் கொஞ்சம் அதிக சிரத்தையுடன் கவனமாக செய்தால் வெற்றியுடன் பாதுகாப்பாக பணி நிறைவடையும்.

பொதுவாகவே அதீத தன்னம்பிக்கை, அலட்சியம், சுயநலம் போன்றவைகளே கவனக்குறைவுக்கு காரணமாக அமைகின்றன. இதில் உயர்வு மனப்பான்மை (Superiority Complex) என்ற ஒன்று உள்நுழைகிறது. இது வந்துவிட்டால் அவ்வளவுதான். தான் இருக்கும் நிலையை பாதுகாத்துக் கொள்வோமே தவிர செய்யும் செயலை மறந்துவிடுவோம். ஆகவே உயர்வு மனப்பான்மையும் கவனச் சிதறலுக்கான முக்கியமான காரணி.
இந்த நொடி கடந்து போனா
அடுத்த நொடி கதவைத் தட்டும்..
இப்போது தோற்றிடினும்
வெற்றியது வெகு அருகில்..
காலம் போயிடினும்
கலக்கம் வேண்டாம்
செயலும் சுழியானால்
கலக்கம் வேண்டாம்...
கவனம் மட்டும் கைகொள்
காலமே உனது கையில்......

==============================================================






வருகைப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் வருகைப் பருவம். பலவாறு சேட்டைகளை செய்யும் குழந்தை தனக்குப் பிடித்தவர்களைக் காண்கையில் இரண்டு கைகளையும் விரித்து வாரி அணைத்துக் கொள்ளும்படி நம்மை அழைக்கும் பருவம். இத்தகைய அழகான பருவத்தில் கவனம் பற்றிய பதிவுகள் இயற்றிய பதிவர்களைக் காண்போம்.

==============================================================







கவனம் என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது சாலை விபத்து தான். எத்தனை பாதுகாப்பு கவசங்கள் இருந்தாலும் கவனச்சிதறல் இருந்தால் விபத்து நிச்சயம். விபத்துக்கள் பலவிதம் ஆகையால் கவனம் தேவை என்று சொல்கிறார் நண்பர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள்  தோத்தவண்டா தளத்தில்.,

வேகம் நன்று தான் எப்போதும்
விவேகமற்ற வேகம் மூடத்தனம் முப்போதும்
விபத்து வரும்வழி தெரியாது - ஆனால்
நாம் செல்லும்வழி அடைத்திருக்கும்....
கவனம் அவசியம் கவனம் அவசியம்- நமக்கோ
பிடரியிலும் கண்கள் அவசியம்!!

===================================================================





அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்து விடுகிறோம். சிலபல நேரங்களில் எதிர்பத விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கவனமின்மை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட அதிக கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் இந்த தளத்தில்.


சிறுகுஞ்சென்று நினைத்து
அவிழ்த்து விட்டால்
சிறகு முளைத்ததும்
பறந்து போய்விடும்!
நிலைக்கும் என்ற
அதீத நம்பிக்கையில்
கவனமின்றி இருப்பின்
கவளம் கூட உனக்கில்லை
கபாலத்தில் ஏற்றிடு!!

===============================================================




அதே ஆசிரியர் தான் உனக்கும் பாடம் நடத்துகிறார். கணிதத்தில்  நல்ல மதிப்பெண்கள் பெற்ற நீ ஏன் ஆங்கிலத்தில் எடுக்கவில்லை? மாணவப் பருவத்தில் உண்டான பிரச்சனை இது. பெரும்பாலும் மாணாக்கர்கள் ஒருசில பாடத்தில் கவனமும், ஒருசில பாடத்தில் கவனமின்மையும் கொள்வார்கள். அதற்கான விளக்கத்தையும் மார்க்கத்தையும் இங்கே சொல்கிறார்கள். சென்று பார்ப்போம் வாருங்கள்.
ஒன்றிருக்க ஒன்றுவந்தால்
என்றும் அமைதியில்லை - என்பதை
தவறாகப் புரிந்துகொண்டாயோ...??
உன் பருவத்தில் அனைத்தும்
நன்றாக வரவேண்டுமய்யா.....
கவனம் கொள்
புவனம் வெல்....

================================================================





மாணவப் பருவத்தில் படிப்பு ஒன்றே கண்ணாக இருக்க வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அதற்காக நீண்ட நேரம் கவனத்துடன் படிக்க வழிமுறைகள் சொல்கிறார்கள் இங்கே, வாருங்கள் படித்துப் பயன்பெறுவோம்.

தோள் நிமிர்த்து தோழனே
நாளைய புவனத்தை - உன்
தோளில் சுமக்கவேண்டும்
இன்றே ஆயத்தமாகு
இனிதே பிரயத்தனமாகு
கவனமுடன் செயலாற்று
குவலயம் உன் காலடியில்!!

===============================================================




 பார்த்தல் என்பது  வேறு கவனித்தல் என்பது வேறு.... பார்க்கும் காட்சியெல்லாம் மூளையில் பதியாது. கவனிப்பவை என்றும் கனிந்த கனியாக நினைவில் நிற்கும் என கவனத்திற்கான புதிர்கள் போட்டு விளக்குகிறார் நண்பர் முத்துராமன்.

விழிகள் நோக்கினால்
வழிகள் திறவாது
முயற்சியும் வேண்டும்...
வெறும் காற்று வெட்டவெளியில்
மூங்கிலுக்குள் நுழைந்து
மனம் நொந்து வந்தாலும்
ஏழு ராகங்களுடன் பயணிக்கும்...
வலிகள் தான் வாழ்க்கை...
கவனம் சிரமேற்று
அகிலம் உனதாக்கு.....


=================================================================


இதற்கெல்லாம் ஆரம்பமாக கவனம் என்பது வளர்ப்பு முதல்  வேண்டும்..பசுமரத்தாணி போல குழந்தைகள் நெஞ்சில் பதிபவை மிகவும் ஆழமாக பதிந்துவிடும். கவனம் எனும் வாழ்வின் சூத்திரத்தை குழந்தையின் வளர்ச்சியிலேயே விதைத்திடுவோம் என்கிறார்கள் இங்கே.

விதை பரப்பிடல்
ஒரு செயலாமோ?
நன்னிலத்தில் பரப்பிடுதல்
நற்செயலாமே!!


==============================================================



கையில் எடுத்த செயலை நிறைவாக வெற்றிகரமாக முடிப்பதே நம் எல்லோருடைய நோக்கமும். அப்படி ஒரு இலக்கினை அடைந்திட கவனம் எனும் பாதுகாப்பு கவசம் மிகவும் அவசியம்.
கவனத்துடன் செயல்படுவோம்
புவனத்தில் நிலைபெறுவோம் !!!





அன்பன்
மகேந்திரன்
மேலும் வாசிக்க...

Friday, October 17, 2014

முத்தப் பருவம்!!!









"என்னப்பா தங்கராசு இன்னைக்கு ஆள் எடுத்தாகளா... ஆலமரப் பக்கம் போனேன் யாரையும் பார்க்க முடியல. எல்லோரும் சோலிக்கு போயட்டாகளோ ...."
"அட போய்யா முத்துராசு ... காலம்பர ஆறு மணிக்கே போய் காத்துக்கிடந்தேன்... கண்காணி வந்து இன்னைக்கு சோலி குறைவுதான் னு சொல்லிபுட்டு நிறைய பேத்த கழிச்சிபுட்டார் ..."
தினக்கூலிக்கு வேலைசெய்ய இங்கே ஆட்கள் இல்லையென்று வடமாநிலங்களில் இருந்து பணியாளர்களை இறக்குமதி செய்கிறார்கள்.ஆனால் இங்குள்ள நிலைமையோ, தினமும் வேலை கிடைக்காது அடுத்த வேலையை நாடி ஓட வேண்டிய நிலை. கழிவு என்ற ஒரே வார்த்தையில் நம்மை புறந்தள்ளிவிட்டு குறைந்த சம்பளத்தில் வேறு மாநிலத்தோரை பணியில் அமர்த்திக்கொள்கின்றனர்.
 

இதை முதலாளி வர்க்க ஆதிக்கம் என்பதா? இல்லை செய்யும் தொழிலில் சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள் என  எடுத்துக்கொள்வதா? சிக்கலான விஷயம்  தான், ஆனால் ஒன்றுமட்டும் உறுதி தினக்கூலி வேலைக்கு அழைந்து கண்டுபிடித்து பணிக்குச் செல்வதற்குள் பொழுதடைந்து விடுகிறது.
இதுபோன்ற தருணங்கள் தான் நம்மை சிறுதொழில் வணிகம் பற்றி சிந்திக்க வைக்கிறது. எனக்கே எனக்கான வேலை. நானே முதலாளி நானே தொழிலாளி.
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான்  ஒரு தொழிலாளி ...."
என்ற பாடலுக்கேற்ப... கடவுளை முதலாளியாக ஏற்று பணத்தைப் போட்டு பணம் எடுக்கும் தொழில்.
 
நாலுகாசு போட்டாலும்
சொந்தக்காச போட்டு
சிறுசா செஞ்சாலும்
சொந்தத்தொழில செய்யணும் ....
இப்படி தாரக மந்திரத்தோடு செயல்படும் தோழமைகளுக்கான பதிவு இது.
எந்தச் செயல் செய்தாலும்
காந்தப் புலம் போல
சொந்த நம்பிக்கை வேணுமய்யா
சிந்தையில் இதை நிறுத்திக்கோய்யா.....
 
========================================================
 
 

முத்தப் பருவம்: இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் முத்தப் பருவம் ஆகும். கைகொட்டி சிரித்து மகிழ்ந்த குழந்தை எண்வகை மெய்ப்பாடுகளையும் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் போது அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அதனிடம் முத்தம் வாங்கிக்கொள்வதே முத்தப் பருவமாம். இத்தகைய அழகான பருவத்தில் சிறுதொழில் பற்றி எழுதியிருக்கும் பதிவர்கள் சிலரைக் காண்போம்.
 
==========================================================
 
 

சிறுதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள், எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.அதற்கான பயிற்சியை யார் தருவார்கள் என அதீத தகவல்கள் தருகிறார் நண்பர் கோவிந்த் ராஜ்.
இதுதான் பாதை என
இயைபாய்க் காண்பித்தாய்!
இனிமேலும் நின்றிலேன் - நானும்
இன்றே தொடங்கிடுவேன் நற்தொழிலை...
 
============================================================
 
 
மனிதன் எதைநோக்கிச் செல்கிறான் என்று பலவாறு வினா தொடுத்து அதற்கான விடைகளையும் அவரே கொடுக்கிறார் நண்பர் சுந்தரமூர்த்தி. நம்பிக்கை விடாமுயற்சி ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு சிறுதொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்கிறார் ஒரு பதிவில்...

பெருத்துப்போன மக்கட்செறிவில்
சிறுத்துப் போச்சி வேலைவாய்ப்பு....
யாரையும் நோக்காதே
ஊரையும் பார்க்காதே
உன் வாழ்க்கை உன் கையில்
தொடங்கிடு ஒரு தொழிலை
நம்பிக்கையுடன் இன்றே...
நலமாய் வாழ்வாய் நன்றே....
 
============================================================
 
 
அறிந்ததும் அறியாததும் என்று சொல்லிக்கொண்டு நாம் அறிந்திடாத பல செய்திகளை நமக்கு விருந்தளிக்கிறார் நண்பர் செல்லப்பா. பெண்களுக்கான சிறுதொழில் வாய்ப்பு மற்றும் அதன் வழிகாட்டுதலுடன் முதலீடு இல்லாமல் செய்வது எப்படி என்று அவர் எழுதிய இப்பதிவினைக் காணுங்கள்.

சிக்கனமா முதல்போட்டு
சிக்கென்ற லாபமுடன்
சிரித்தே வாழ்ந்திட
சிறப்பான வழிசொன்ன
சீர்மிகு படைப்பாளியே - நின்முன்
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்...
 
=============================================================
 
 
பெண்களின் பார்வையில் உலகம் என்று நான்கு பெண்களின் தளத்தில் சகோதரி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள் சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினைப் பொருட்கள் வேலைப்பாடுகள் பற்றி உரைத்தும் கற்றும் கொடுக்கிறார்.

மாநிலம் போற்றும்
மாதவ மங்கையே - எம்
மனதை குளிர்வித்தாய்
மங்காத பொக்கிஷமாய் - எமக்கு
மட்காத வாழ்வளித்தாய்....
 
===========================================================
 
 
சிறுதொழில் முன்னேற்றம் எனும் தளத்தில் நண்பர் ஹாஜா மொஹைதீன் அவர்கள் சிறுதொழில் எப்படி ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முறை என்ன. எந்தெந்த தொழில்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன என்பதை  சொல்கிறார். வாருங்கள் படித்து பயன்பெறுவோம்.

அறியாத செய்திகளை
அச்சில் கோர்த்து சொன்னீங்க
அழகழகா விடயங்களை
அடுக்கடுக்கா சொன்னதற்கு
அன்பார்ந்த நன்றிகள் ஐயா
அருமையான அண்ணாச்சி......
 
========================================================
 
 
நம்மால் முடியுமென்று நம்பு என்று என் கண்கள் தளத்தில் நண்பர் பக்ருதீன் அலி அவர்கள் அருமையான பதிவொன்றை இட்டிருக்கிறார். மூலதனம் இதுவே முதல் தனம். அப்படியான மூலதனத்துக்கு கடன் வசதி, அதாவது சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நிதித்துறை நிறுவனங்கள் வங்கிகள் அதற்கான முறை வழிகாட்டல் என தகவல்கள் நிரம்பி வழிகிறது.

வெத்து கையா இருந்தா
எவன் மதிப்பான் இவ்வுலகில்
தொழில் தொடக்கி சம்பாதிக்க
வழியொன்னு தெரியாம
விழிபிதுங்கி நின்னேன்
அழகான பதிவைச் சொல்லி
எம் மனசில பால் வார்த்த ராசா
நல்லா இருக்கனுமய்யா...
 
==========================================================
 
 
இனிக்க இனக்க கூவிய இணையக்குயில் நீண்ட நாட்களாகக் காணவில்லை. நண்பர் துரை டேனியல் அவர்கள் தனது தளத்தில் சிறுதொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்குகிறார்.

பரணிக் கரையில்
பிறந்த மன்னவனே
பதுசாக நீங்க சொன்ன
பக்குவத்தை நாங்களுமே
மனசுக்குள்ள போட்டுவைச்சி
நிம்மதியா தொழில் செய்வோம்...
 
==============================================================
 
ளரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் வேலைவாய்ப்பு என்பது அருகிப் போய்வருகிறது. இந்நிலையில் நமக்கு நாமே நம் வாழ்வினை நல்வழியில் நடத்திட பொருளாதார சிக்கல் இல்லாமல் இனிதே வாழ்ந்திட சிறுதொழில் அவசியம்.

ப்படி நாம் ஒருபுறம் நம் பொருளாதாரத்தை நாமே சரி செய்ய சிறுதொழில் செய்ய முன்வர... மத்திய அரசாங்கமோ மீண்டும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை திரும்பவும் கொண்டுவருகிறதாம். கேட்கவே மனம் வேதனைப்படுகிறது. இரும்புக்கோட்டை கொண்டு தடுப்போம் அந்நிலையை.
 
 

அன்பன்
மகேந்திரன்
மேலும் வாசிக்க...

Thursday, October 16, 2014

சப்பாணிப் பருவம்!!!








" வரவு எட்டணா
செலவு பத்தணா ........"
கவியரசரின் காவியமான வரிகள். வரவுக்கு மிஞ்சிய செலவு தான் நம்மில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் நிதர்சனம். ஆயினும் அந்த செலவையும் தாண்டி நமக்கான வருமானத்தில் இருந்து ஓரணா காசாவது எடுத்து நாளைக்கு வேண்டுமென்று சேர்த்துவைத்தல் அவசியமென்று சிறுவயதில் இருந்து நமது மூளைக்குள் திணிக்கப்பட்ட தாய்வழிச் சொத்து.
" சிறுதுளி பெருவெள்ளம்"
"சிறுதுரும்பும் பல்குத்த உதவும்.."
இப்படியாகச் சில பல பழமொழிகளைச் சொல்லி நம்மில் ஆழமாக சிறுசேமிப்பு எனும் ஆணிவேரை பதித்து விடுகின்றனர்.
மேலும்...
"கையில வாங்கினேன்
பையில போடல
காசு போன இடம் தெரியல ...." எனவும்... பாடல்களால் நம்மில் பணத்தின் குணத்தையும் அவற்றைக் கட்டுபடுத்தும் சாமர்த்தியத்தையும் வளர்த்து வைத்திருக்கின்றனர் முன்னோர்.







கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு பாடலில் " திருப்பதி உண்டியலில் சேர்ந்து போனாயோ திருவண்ணாமலை குகை புகுந்தாயோ.." எனப் பணத்தை தேடி கடைசியில் பணமே பணமே பணமே என்று புலம்புவார்... உற்றுக் கவனித்தால் அங்கே பணமென்பது சிறகு முளைத்த பறவை விட்டால் பறந்துவிடும். சிறகு முளைத்தபின்னும் பறக்கவிடாது கூண்டிலே அடைத்து வைத்திருத்தல் மிகுந்த சாமர்த்தியம் எனப் புரிகிறது.

பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தால் ஒன்று கிடைக்கும் வருமானத்தில் சிறுபகுதியைக் கூட செலவு செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள் இவர்களைப் பொதுவாக நாம் கஞ்சன் என்று அழைக்கின்றோம். இரண்டாவது குடும்பத்தை சிக்கனமாக நடத்தி சேமித்து வைப்பவராக இருப்பார். மூன்றாமவர் நல்ல செலவாளியாக இருப்பார் இவர்களை நாம்  ஊதாரி என்று பெயரிட்டு அழைக்கின்றோம். இதில் நாம் எந்த பிரிவினர் என்பதை நாமே உணர்ந்து சரியான பாதையில் செல்தல் அவசியம்.
சிறுகச் சிறுகச்
சேர்த்து வைத்த - சிறுசேமிப்பு
குறுகக் குறுக
உன்னை வளர்த்து - நாளை
குறுநில மன்னனாக்கும்!!

கடந்த 2008 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிவைத்தது ஒரு வகையான பொருளாதாரச் சரிவு. பங்கு வர்த்தகங்கள் அடியோடு மாறிப்போயின. சில நாடுகள் அடுத்த அடி எங்கு வைப்பது என்றுகூட தெரியாமல் திக்குமுக்காடிப் போயின. ஆனால் அந்த நிலையிலும் நம் இந்தியத் திருநாடு நிலைத்து நின்றதற்கு காரணம் தெரியுமா?? நம் மக்களின் சேமிப்பு பழக்கமே அது. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் நம் மக்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்ட பணம் தான் அந்த சரிவில் இருந்து நம் திருநாட்டை காத்தது.

சேர்த்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னகண்ணு
அவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லகண்ணு...

==================================================================






சப்பாணிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் சப்பாணிப் பருவம் ஆகும். குழந்தை இரு கைகள் கொட்டி சிரித்து கைகள் நீட்டி அழைத்து கொண்டாடி மகிழ்வதே சப்பாணிப் பருவம் ஆகும். "சப்" என்ற ஓசையுடன் "பாணி"-கைகள் கொட்டி சிரிப்பது சப்பாணிப் பருவம்.  அப்படி ஒரு அழகான பருவத்தில் இருந்துகொண்டு சிறுசேமிப்பு பற்றி பதிவுகள் புனைந்திருக்கும் பதிவர்கள் பற்றிக் காண்போம்.

===============================================================






தகவல்களைத் தேடித்தேடி அலைந்து அவற்றைத் தொகுத்து நம் கண் முன் பதிவுகளாய்த் தரும் தமிழ்க்காரன் இவர். இதோ சிறுசேமிப்புக்கான 100 எளிய வழிகளை நமக்காகத் தருகிறார். இவற்றில் சிலவற்றைக் கடைபிடித்தாலே சிறுசேமிப்பு பெருகும்.

எங்கெங்கு தேடினாயோ
ஏற்றுமானூர் மன்னவனே!
எமக்காக தந்தனையோ
எளிய பல வழிகளையே
சிலவற்றை கைகொண்டாலே
சிறுசேமிப்பு பெருகுமைய்யா!!!


=========================================================


வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று முழங்கிக்கொண்டே நண்பர் சக்திசுமி தனது அடேங்கப்பா வலைத்தளத்தில். சிறுசேமிப்பில் திட்டமிட்டு வெற்றிபெறுதல் அவசியம்  என்கிறார், மிகநீண்ட கட்டுரை. அவசியம் நாம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். படிப்போம் பயன்பெறுவோம்.

சக்கர வியூகம்
உடைக்கத் தெரிந்தவன்
உடைத்தான்!
வெளியே வர இயலவில்லை
போதாத திட்டமிடல்!
மாண்டான் அபிமன்யூ!
திட்டமிடல் அவசியமய்யா
திட்டமிட்டால்
திக்கெட்டும் நம் வசமே!!



=====================================================




என் மனதில் எழும் உணர்வலைகளை மடலாக எழுதுகிறேன் என்று விளம்பும் சகோதரி பவியின் தளம். சிறுசேமிப்பும் சிக்கனமும் இரண்டறக் கலத்தல் அவசியம் என்கிறார். சிக்கனம் மூலம் செய்யப்படும் சிறுசேமிப்பு நம்மை மலையேற்றி வாழவைக்கும் என்கிறார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையென
ஓங்கிச் சொல் பெண்ணே!
ஒன்றும் ஒன்றும் இணைந்துவிட்டால்
ஓராயிரம் யானை பலம்....


==============================================================





நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் தனது ஜோதிட சுடரொளி தளத்தில் எது மாதிரியும் இல்லாது புது மாதிரியாக சிந்தித்து பதிவியற்றி இருக்கிறார். நம் நாட்டில் சிறுசேமிப்பு அக்கறை ஓரளவுக்கு எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது என்றே சொல்லலாம், ஆனால் அதிக சிரத்தையுடன் சிறுசேமிப்பில் ஈடுபடுவோர் சரிவர விசாரிக்காமல் சிலபல தனியார் நிறுவனங்களில் பணத்தை போட்டுவிட்டு ஏமாற்றப்படுகிறார்கள். அகலக்கால் வைத்தாலும் பார்த்து வைக்கவேண்டும் என்கிறார்.

ஆழமாக யோசித்து
அரையடி வைத்தாலும்
அரைக்காசு பிரயோசனம்!
நீளமாக யோசித்து
அகலக்கால் வைக்காதே
இருக்கும் காலும் நொடிபடுமே
இதை நீயும் மறக்காதே!!


===============================================================




அட.. சேமிப்பு என்றதுமே மலைக்காதீங்க. சேமிப்பு சின்ன விஷயம் தான் எனச் சொல்லி பதிவு ஏற்றியிருக்கிறார் தங்கை அனன்யா. இயக்குனர் சங்கர் அந்நியன் திரைப்படத்தில் போட்ட கணக்கு போல ஒரு கணக்கு போடுகிறார். அட... இதுவும் சரிதானோ என்று தோன்றுகிறது.

ஊத்துபட்டி போகப்போறேன்
உண்டியலு வாங்கப்போறேன்!
செலவுகளில் தொங்கிநிற்கும்
உதிரியான காசையெல்லாம்
உண்டியலில் போடப்போறேன் - நானும்
கோடீஸ்வரி ஆகப்போறேன்!!


==============================================================






இந்தச் செய்தியைப் பார்த்ததும் மனசுக்கு இனிமையாக இருக்கிறது. சிறுசேமிப்பு எனும் பழக்கம் பள்ளிப் பருவத்தில் இருந்து தோன்றவேண்டும் என்ற என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டது இந்தச்  செய்தி.ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தில் உறைந்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் உதவியுடன். போற்றத்தகுந்த செயல்.

ஆஹா!! ஆசிரியரே
உமது தாழ் பணிகின்றேன்!
உம்மால் தானன்றோ
இச்செயல் சாத்தியமாயிற்று
உம்மைப்போல் வேண்டுமய்யா
உலகெங்கும் ஆசிரியர்கள் ......


==========================================================

சிக்கனம் வீட்டைக் காக்கும், சிறுசேமிப்பு நாட்டைக்காக்கும் எனும் பழமொழி பலமுறை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. உறுதியாக நெஞ்சினில் உரமேற்போம். சிக்கனத்துடன் சிறுசேமிப்பை உலகெங்கும் விதைத்து வைப்போம்.


மாடக்குள சந்தையில
மஞ்ச கிழங்கு வாங்கப்போனேன்!
மஞ்சளு இல்லேனுட்டான் - என்ன செய்வேன்
மக்கா நாளு வரச்சொன்னான் - போகணுமே!!
வன்கேட்ட முன்பணத்துக்கு
முட்டாப்பய எங்கபோவேன்
கைல காசு வாய்ல தோசை - என்றானே
நானும் கையாளா ஆகாமத்தான் நின்றேனே!!
கையில காசுமில்ல
கால்வயித்துக்கு சோறுமில்ல
கண்ணம்மா என் கிளியே - நில்லம்மா
என்னிலைக்கு வழியை கொஞ்சம் சொல்லம்மா!!
ப்பனாத்தா பேச்சைக்கேட்டு
சிக்கனமா இருந்திருந்தா
சிக்கலொன்னு வந்திருக்குமா - சொல்லய்யா
சிக்கனம் தான் நல்லதின்னு இப்போ சொல்லய்யா!!

சேமிச்ச காசையெல்லாம்
பக்குவமா வைக்காம
ஊதாரியா விதைச்சிபுட்டா - செல்லப்பா
ஊரிங்கு மதிக்காதய்யா கண்ணப்பா!!
ல்லாவே புரிந்ததடி
நாலுமிங்கு தெரிந்ததடி
நாளைமுதல் தொடங்கப்போறேன் - பக்குவமா
சேமிப்பை தொடங்கபோறேன் சிக்கனமா..............
(வெளிநாடு வாழ் இந்தியன் என்கிற வகையில் இங்கே ஒரு செய்தியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய நாட்டோர்கள் மத்தியில், தாங்கள் சம்பாதித்த பணத்தை 99% தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முதல் வரிசையில் முதல் ஆளாகா நிற்கிறார்கள் இந்தியர்கள். பெருமைகொள்ளவேண்டிய செய்தி.)








அன்பன்
மகேந்திரன்









மேலும் வாசிக்க...

Wednesday, October 15, 2014

தாலப் பருவம்!!!






"இந்த ஜென்மத்துக்கும் எனக்கு ஒரே ஒரு ஆசை தான் யா ...." இப்படி பலர் வாய்மொழிகளை தினம் தினம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும் நமது முழுமூச்சான வாழ்வின் குறிக்கோளே அதுதான்.


அந்த ஆசை... வாழ்வின் குறிக்கோள் எல்லாமே ..

வீடு....வீடு....வீடு...வீடு...
.
ற்கால மனிதர்கள் காடுகளில் இலைதழைகளை சுற்றிக்கொண்டு வேட்டையாடித் திரிந்தாலும் பொழுதடைந்ததும் தமக்கென குடிசை அமைத்துக்கொண்டு அங்கே வசிக்கத் தொடங்கினான். காலங்கள் செல்லச்செல்ல தங்குமிடத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டான். ஓலைக்குடிசை... சுட்ட ஓடு... காரை வீடு இப்படியாக படிப்படியாக வளர்ந்து இன்று வானளாவ கட்டிடங்கள் கட்டி குடியேறும் அளவுக்கு முன்னேற்றம்.



ந்த வர்க்கத்தினராயினும் அவரவர்கள் நிலைக்கேற்ப வீட்டுக்கனவுகள் வாழ்வில் நிலைகொண்டு இருக்கும். பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் தமக்கான வீடு கட்டுவதற்குள் படும் பாடு அப்பப்பா... சொற்களால் அடங்காது அந்த நிலை.

"எலி வளையானாலும் தனி வளை வேணும் ....."
"இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு...."

இப்படி பல பழமொழிகள் வீடுகளை மையப்படுத்தி நம்மிடையே வலம்வருகின்றன.





ந்த நேரத்தில் ஒரு முக்கியமான நபரை சொல்லியே ஆகவேண்டும். அவர் ஒளிவேந்தர் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள். நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் மேல் உள்ள தாகத்தையும் அதற்காக அவர்கள் பாட்டையும் " வீடு " என்ற மிகப்பெரும் திரைக்காவியத்தின் மூலம் நமக்கு படம்பிடித்துக் காட்டினார்.

காலம் கடந்துபோச்சி
காதோரம் நரைச்சி போச்சி!- இந்தக்
கட்டைய சாத்திடத்தான்
குச்சி வீடேனும் கட்டனும்யா .......


ஏனைய மனிதர்களின் ஏகோபித்த புலம்பல்கள் இது.

===============================================================




தாலப் பருவம்!
இன்றைய வலைச்சரப் பிள்ளைத்தமிழில் தாலப் பருவம். "தால் " என்பது நாக்கு... நாக்கை ஆட்டி பாட்டிசைத்து தன் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாடலே தாலாட்டு எனப்பட்டது. அப்படி தாலாட்டு கேட்டு தூங்கும் பருவமே தாலப்பருவம். இப்படியொரு அழகான இன்னிசைத் தாலப்பருவத்தில், நம்மிடையே வீடுகள் பற்றி எழுதியிருக்கும் பதிவர்களைப் பற்றி காண்போம்.
=============================================================




வீடு  வாங்குவது என்பது குதிரைக் கொம்பாகி வரும் இந்தக் காலத்தில், அதில் இருக்கும் ஏமாற்று காரணிகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. அப்படி சிரமப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து வீடோ அல்லது மனையோ வாங்கச் செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை இங்கே விளக்குகிறார்கள். நாமும் தெரிந்துகொள்வோம்.


ஏமாளியாய் நான் ஆனால்
தூற்றாதோ இவ்வுலகம்!
சிறுகச் சிறுக நான் சேர்த்தது
பெருங்காற்றில் போய்விடுமோ?!
உம்மைப்போல் புண்ணியவான்
போட்டுவைத்த பதிவுகள் - எம்மை
விழித்தெழச் செய்கிறதே!!


===================================================================

தோ இந்தியன் குரல் எனும் வலைத்தளத்தில் பாலசுப்ரமணியன் எனும் நண்பர் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பற்றிய காணொளியைப் பகிர்ந்திருக்கிறார். வீடு மனை வாங்கும் பொழுது ஏமார்ந்து போகாமல் இருக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள என விளக்குகிறார். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.


பூக்களால அபிஷேகம் - உமது
பூமலர் பாதத்துக்கு...
புல்லுருவிகள் ஏமாற்றுதலுக்கு
பலியாடு ஆகாமல் - எமை
தடுத்தாட் கொண்டமைக்காக....


=====================================================================





மது ஆருயிர் அண்ணன் திரு.சி.பி.செந்தில்குமார் அவர்கள் தனது அட்ராசக்க தளத்தில், நமக்கு வீடு கட்டும்போது ஏற்படும் சட்ட சிக்கல்களை கேள்வியாக கணைவிடுத்து அதற்கான பதிலையும் தகுந்த நபர்களிடமிருந்து பெற்று நமக்காக பகிர்ந்தளிக்கிறார்.

கூலிங் கிளாஸ்
போட்ட அண்ணே!
கும்பிட்டு வணங்குகிறேன்!
குலசாமி போல நீங்க
குலம்காக்க வந்தீக!
புத்திகெட்டு போகாமல்
புரிந்து நடந்துகொள்ள
புதினமாய் பதிவு தந்து
புண்ணியம் சேர்த்தீக!!!


=============================================================

ட பாவிகளா... இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க என்று சொல்லும் அளவுக்கு  சம்பவங்களை இங்கே நமக்காக கொடுத்து, அப்படி ஒரு ஏமாற்றத்துக்கு நாம் தள்ளப்படாது இருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள் அதிரை கடிதம் எனும் தளத்தில்.

மனமிங்கு புழுங்குது
இதயம்கூட குலுங்குது!
இதயமில்லா மனிதர்களை
இயல்பினில் பார்க்கும்போது!
இடுகாடு சேரானோ என
உள்ளமும் ஏங்குது!!


===============================================================



இளவேனில் எனும் தளத்தில் தமிழ்நதி அவர்கள் அற்புதமான பதிவொன்றை இயற்றியுள்ளார். அந்தரத்தில் இருக்கிறது வீடு. என்னடா இது திரிசங்கு சொர்கமாக இருக்குமோ என்று சற்றே பதைப்புடன் தான் படித்தேன். ஆனால் படிக்க படிக்க... புலம்பெயர் உள்ளங்களும், வெளிநாடு வாழ் உள்ளங்களும் தங்கள் வீட்டின் மேல் வைத்திருக்கும் பற்று மற்றும் தனது சொந்த வீட்டினை நெருங்கும் சமயம் என வார்த்தைகளால் நம்மை மயக்க வைக்கிறார்.
மச்சான் எங்க இருக்கீக...
இதோ இங்கே வந்திட்டேன் புள்ள...
மச்சான் எங்க இருக்கீக..
இன்னும் பத்து நிமிஷத்தில வருவேன் புள்ள....
நீளாண்டுகளுக்குப் பின்
சந்திக்கும் மனதுகள் - அந்த
சுகமான வீட்டில்...........

=============================================================

ங்கள் நெல்லைச்சீமையில் பிறந்த நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன் திரு. வண்ணதாசன் எனும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது தளத்தில் வீடு எனும் தலைப்பில் ஒரு குறுங்கவிதை கொடுத்திருக்கிறார். வரிகள் தான் ஆறு ஆனால் உணர்வுகளோ நூறு.
எங்க ஊர்க்காரர் என
சொல்லுவதில் பெருமை ஐயா...
உமது கவிதைகளின்
சொல்லபடாத மீதங்களே
நாங்களாக இருந்திட ஆசை ஐயா...

==============================================================




நிழலுடன் வாழாதே, நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற முகவரியுடன் கசியும் மௌனம் எனும் வலைத்தளத்தில் திரு.ஈரோடு கதிர் அவர்கள் பிறந்த  மனிதர்களை அடைகாக்கும் கருவறை என்கிறார் வீட்டை.  அழகான உணர்ச்சி ததும்பும் கவிதையை இங்கே காணுங்கள்.
நிழலென்ன நிழலடா
நிஜம்தானே வாழ்க்கையடா...
பிறக்கும் முன்னர்
அடைகாத்தல் தொழிலே!
பிறந்த பின்னும்
அடைகாத்தால் உணர்வே!
அவ் உணர்வினை அழகாய்
கவி புனைந்தீர் மன்னவனே!!

===========================================================

ண்களுக்கு எப்படியோ, ஆனால் பெண்களுக்கு வீடே கோயிலாக மதிப்பர். அதிலும் பெற்ற தாய் தந்தை உடன்பிறந்தோருடன் தாய்வீட்டில் வாழ்ந்த அந்தத் தருணங்கள் அவர்கள் நெஞ்சில் எப்போதும் மாறாத மணம் வீசும் மல்லிகையாய். அப்படித்தான் இங்கே சகோதரி ஆனந்தி தனது அன்புடன் ஆனந்தி எனும் தளத்தில் எங்கள்வீடு என்று கவிதையில் மனம் குளிரச் செய்கிறார்.
எந்த வீடு சென்றாலும்
அந்த வீட்டுக்கு இணையில்லை!
சொர்க்கமே என்றாலும்
அதுவும் என் வீட்டு
புழக்கடைக்கும் அப்புறம் தான்!!

===============================================================




"வீடு" எனபது ஒவ்வொருவர் நெஞ்சிலும் குடிகொண்டிருக்கும் மந்திரச்சொல். அதற்கான பிரயத்தனம் நம் வாழ்நாளில் முக்கால் பாகம். அப்படிப்பட்ட வீடு பற்றி கணக்கில் அடங்காத பதிவுகள் கொட்டிக்கிடக்கின்றன வலைப்பூக்களில். சிலரை இங்கே அடையாளம் காட்டியிருக்கிறேன்.
சுங்குடி சேலை கட்டி
இடுப்பு குலுக்கி போற புள்ளே
மனசு கசங்குதடி - செல்லம்மா
உன் கொசுவத்தில முடிஞ்சிக்கோடி - பொன்னம்மா!!
ன்னங்கருத்த மச்சான்
கொசுவத்தை உருவாதே
வெட்கம் பிடுங்குதய்யா - செல்லையா
பொழுது சாயட்டுமே - பொன்னையா!
நாளெல்லாம் ஏர்பிடிச்சி
நரம்பெல்லாம் வலிக்குதடி
நான்கண்ட சுகமென்ன - செல்லம்மா
நாலுகாசு சேர்க்கலியே - பொன்னம்மா!!
னசு கலங்காதய்யா
நான் கொஞ்சும் செல்ல மச்சான்
நஞ்ச விளையட்டும் - செல்லையா
நாலுகாசு கைக்குவரும் - பொன்னய்யா!!
ந்த நாளைத்தானே
நானும் பார்த்திருக்கேன்
குளத்துக்கு பக்கத்தில - செல்லம்மா
குடிசையொன்னு போடவேணும் - பொன்னம்மா!!
 
 


நாளை அடுத்த பருவத்துடன் சந்திக்கிறேன் அன்பர்களே.....

அன்பன்
மகேந்திரன்












மேலும் வாசிக்க...

Tuesday, October 14, 2014

செங்கீரைப் பருவம்!!!







"ஏலே! மருதமுத்து என்னலே வாய திறந்தா கொட கொடன்னு மடத்தண்ணி பாஞ்சாப்புல தகரக் குரல் ல பாடுவயே. எங்கவே போச்சி அந்த குரலு?"
"அட போய்யா சின்னக்காளை, விளைஞ்சிருக்கிற வெள்ளாமைய பார்த்தா தொண்டையில எச்சில் கூட ஊறல, இதில எங்கிட்டு பாட்டு பாட"...........

ழவுத் தொழிலு
உசிரப்பா!
உழவன் எமக்கு
சிரசப்பா!!

ஏனப்பா! தேனப்பா!
இடக்குமடக்கு உனக்கேம்பா!!
என் வழியில நான்போக
விடுவதில்லை நாடப்பா!!


விதைச்ச காசு
விளைஞ்சிடுமா!
வேரிலே அழுகி
பிறந்த இடம் புதைஞ்சிடுமோ!!


விவசாயத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. விவசாயத் தொழிலில் கட்டுண்டு செங்கழுநீர் பூசிய முகத்துடன் பூமித்தாய் பச்சைப்பட்டு மேனியுடன் சிரித்திருப்பதை உழவன் உடல் களைப்புடன் இருந்தாலும் மனம் இனிக்க பார்த்திருந்த காலம் கனவாகிப் போனது.

நமக்கெல்லாம் வரமாகக் கிடைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். கரிம விவசாயமுறையில் சிறந்த மகசூல் கிடைக்க கணக்கில் அடங்காத ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவரின் மறைவும் நமது விவசாயத்திற்கு பேரிழப்பே.




" கட்டு களம் காணும்

கதிர் உலக்கு நெல் காணும்..."
"மாடுகட்டி போரடித்தால் மாளாதென்று
யானைகட்டி போரடித்த
மரபில்
வந்தவனல்லவா நீ.........."

இப்படி விவசாயம் செழித்தோங்கி இருந்த காலமும் உண்டு.
பின்னர் கூட்டுறவு விவசாயம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை வஞ்சகமாக அபகரித்து அதோடு நில்லாது உழவர்களை அடிமையாக்கி தட்சனாட்சி செய்த முதலாளி பண்ணையார்கள் இருந்தது ஒரு காலம். அப்போதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்கள் செவியில் தேன் பாயத்தது மட்டுமில்லாது நம்மை உசுப்பியும் விட்டது...

" மாடா உழைச்சவன் வாழக்கையில
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?!!"........
"அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்தினில்
சேர்வதனால் வரும் தொல்லையடி..."""


இப்படியாக காலம் புரண்டு இன்றோ விவசாயம் அரிதான தொழிலாகி அருகி வருகிறது. வானத்தை அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிப்போய், போதும்டா சாமி... இருக்கிற நிலத்தை வித்து பிள்ளைகளை நல்லா படிக்கவைச்சி பட்டணத்தில் குடிபோகனும் என்று இடம்பெயரும் உழவர்கள் ஆயிரமாயிரம்.

=====================================



இன்றைய வலைச்சரத்தில் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவம், தனது பொக்கைவாய் திறந்து வித்தியாசமாக ஒலிகள் பல எழுப்பி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி.. இருகைகளையும் ஊன்றி கீரை கடைவதுபோல ஆடும் பருவம்.... அந்த பொன்னான பருவத்தில் நம் பொன்னான தொழிலாம் விவசாயம் பற்றி சொல்லும் பதிவர்கள் பற்றிய அறிமுகம்.
=====================================





ன்பிற்குரிய நண்பர் ரகுபதி. இவரின் இயற்கை விவசாயம் எனும் வலைத்தளம் முழுக்க முழுக்க விவசாய செய்திகளை தாங்கி நிற்கின்றன.
இதோ பாருங்கள் மண்ணை வளர்த்த மாமனிதர்கள் எனும் தலைப்பில் மண்புழுக்கள் பற்றிய செய்திகளைத் தருகிறார்.
தந்தான தாளம்போட்டேன்
தலைகீழா நடந்துவந்தேன்!
தவத்தொழிலு விவசாயத்தை
தரமாய் உயர்த்திடவே
தங்கமான பதிவு தந்த
ரகுபதி ராசாவுக்கு
தலைப்பாகை கொண்டுவந்தேன்!!!

==========================================================




யற்கை உரங்களும் இயற்கை மருந்துகளும் தான் பயிர்களை செழுமையாக வளமையாக வளர்ந்திட முழுமூச்சாய் செயல்படுகிறது. அதனை நாமும் பின்பற்ற அருமையான இயற்கை மருந்து கலவைகள் பற்றி இங்கே சொல்கிறார்கள் இயற்கை மருந்துகள் பயிர்களைக் காக்கும் என்று.

மேலுரம் கீழுரம்
அடியுரமென
ஆயிரம் நீ போட்டாலும்
அத்தனையும்
மண்ணுக்கும் பயிருக்கும்
கேடு தானய்யா!
இயற்கையை நம்பிடு
இனியிங்கு நோயில்லை என
இனிதாய் வளர்த்திடு!!

===================================================

 
வரது தளத்தின் முதல் வரவேற்பு வரிகளே நெஞ்சைத் தாலாட்டுகிறது. நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம் ..இதுவே அந்த வரவேற்பு வரிகள். பல பரிமாணங்களில் பதிவுகள் நிறைத்திருக்கும் நண்பர் மு.சரவணக்குமார் அவர்கள் 2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம் பற்றி எடுத்துரைக்கிறார். வாருங்கள் நாமும் அந்த ஒருங்கிணைந்த விவசாயத்தை கண்டு இன்புற்று வருவோம்.

மாடக்குள செல்லையா
தலையில் என்ன புல்லா அய்யா!
இறக்கிவைச்சி வாருமய்யா
இங்கினக்குள்ள சேதியுண்டு!
கூட்டுறவு என்பதெல்லாம்
கூறு கூறாய் பிரிந்தபின்னே...
நமக்கான இடத்துக்குள்ளே
ஒருங்கிணைந்த விவசாயமாம்
வாருமய்யா போய்வருவோம்
கம்பங்கஞ்சி குடிச்சி வருவோம்!!

====================================================




ந்த வலைப்பூ பக்கம் போனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் கிராமப்புற படப்பிடிப்பு பக்கம் போனதுபோல ஒரு உணர்வு.... அருமையான தகவல்கள், அசத்தலான நடையில் எழுதியிருக்கிறார் பண்ணையார் என்ற பெயருடன் ஒரு நண்பர். ஒரு காலத்தில் கிணற்றில் இருந்து நீர் இறைக்க பயன்படுத்தப்பட்ட பறி என்னும் ஒரு வகையான பொருளை நமக்கு அடையாளம் காட்டுகிறார் பார்த்து வருவோம் வாருங்கள்.

தீர்ப்பு சொல்ல வந்தவரே
தெற்குசீமை மன்னவரே!
காலம்போன காலமதில்
காஞ்சி கிடக்கும் நிலங்களிலே
சிறுதுளி நீரேனும்
உம் பதிவு தெளித்துவிட்டால்
மகிழ்ச்சி கொள்வேனய்யா!!

=================================================================




பொதுவாகவே சர்க்கரை நோய் வந்தால் தான் கோதுமை கேழ்வரகு என்ற தானியங்களை நாடிச் செல்கிறோம். இதில் கோதுமை இன்று அன்றாட தானியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆயினும் கேழ்வரகு மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. சிறந்த ஊட்டச்சத்து மிக்க இந்த தானியத்தை பற்றி வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு என்று இங்கே பதிவினைக் கண்டேன். அறிந்திராத தகவல்களைப் பெற்றேன்.

கொல்லிமலை திரவியமே
ஆழ்கடலின் நித்திலமே!
உமக்கெல்லாம் மிஞ்சிய
மதிப்பிட இயலாத
மங்காத பொன்மணியாம்
வரகு காண்பீரோ?
அதன் புகழ் கேளீரோ!!

========================================================

தேசத்துக்கு முதுகெலும்பு போல விளங்கும் விவசாயம் பற்றி எத்தனை எத்தனயோ பதிவர்கள் நிறைய எழுதி இருப்பார்கள். சிலரை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
வானம் பொய்ச்சிதுன்னா
மானம் போச்சுதடி!
வாழ்வே இருள்தானா - தங்கமே கட்டழகி
நான் வாழும் நாள் ஏதோ
குங்கும பொட்டழகி!!
டல் போல் கரைபுரண்டு
வானம் இடியிடிக்கும்!
கீழ்வானம் கருத்துருச்சி - ஆச மச்சானே
உன் வாழ்வில் வெண்ணிலவு
நேச மச்சானே!!

ழவே எம்பொழப்பு
செங்கழனி என் வீடு!
வேறு சோலி தெரியாது - தங்கமே கட்டழகி
வெள்ளாம விளைஞ்சிடுமா
குங்கும பொட்டழகி!!
போட்ட விதை வீறுகொண்டு
விருட்சமாகும் நாளும் வரும்
அன்னைக்கு நானும் வாரேன் - ஆச மச்சானே
அதுவரை நெல்லுக்கு நீர் விடய்யா
நேச மச்சானே!!!
 
 


அன்பன்
மகேந்திரன்












மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது