07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 16, 2010

அந்நி(யா)யன்

இடம்: மனநல மருத்துவர் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பன் கிளீனிக்!

நாற்காலியா கட்டிலா என்று பார்த்தால் புரிபடாத ஒரு வஸ்துவின் மீது சேட்டைக்காரன் உட்கார்ந்து/படுத்துக் கொண்டிருக்க, பக்கத்தில் ஊதினால் பறப்பாரா பறக்க மாட்டாரா என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ஒல்லியான டாக்டர் நின்றபடி பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். எதிரே இருக்கிற சுவற்றில் கொசுவத்தியைப் போல ஜொய்ங் ஜொய்ங் என்று சுத்துகிற பல வட்டங்கள் கொண்ட படம் மாட்டப்பட்டிருக்கிறது.

டாக்டர்: சேட்டை! அதோ எதுத்தாப்புலே சுவரைப் பாரு! அதுலே என்ன தெரியுது?

சேட்டை: ஒரு பல்லி தெரியுது டாக்டர்!

டாக்டர்: அதை யாரு கேட்டாங்க? பல்லிக்குக் கீழே என்ன தெரியுது? வால் தெரியுதுன்னு வழக்கம்போல நீ மொக்கை போட்டா நான் கிளீனிக்கையே மூடிட்டு ஓடிருவேன்.

சேட்டை: இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலே டாக்டர்? நீங்க ஆளில்லாத கடையிலே டீ ஆத்திட்டிருக்கிறது தெரியாம என்னோட அடுத்த 'சுக்குக்கஷாயம் with சேட்டை’ நிகழ்ச்சியிலே கலந்துக்க வர்றீங்களான்னு கேட்க வந்தா, பம்பரத்துலே கயித்தைச் சுத்துறா மாதிரி என் மண்டையிலே வயர் சுத்தி படுக்க வச்சிட்டீங்களே...!

டாக்டர்: சத்தம் போடக் கூடாது! உன்னோட "ஜீரகசிந்தாமணி" படிச்சதுமே என் வீட்டுக்காரி சொல்லிட்டா, ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் என்னைத் தேடி நீ வருவேன்னு. மரியாதையா நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு! சுவத்துலே என்ன தெரியுது?

சேட்டை: ஒரு படம் மாட்டியிருக்கு டாக்டர்! அதுலே கொசுவத்தி மாதிரி படம் தெரியுது!

டாக்டர்: அந்தக் கொசுவத்தியையே கண்ணிமைக்காம உத்துப் பார்த்திட்டேயிரு! லைட்ட்...ட்ட்டாத் தூக்கம் வர்றா மாதிரி இருக்கும்!

சேட்டை: கனவுலே ஸ்ரேயா வருவாளா டாக்டர்?

டாக்டர்: நீ திருந்தவே மாட்டியா சேட்டை? இதோ பாரு, காலையிலே போட்ட கோட்டையும் மாட்டுன ஸ்டெதாஸ்கோப்பையும் இன்னும் கழட்டலே! எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டிருக்கேன். நீயும் கொஞ்சம் ஒத்துழைச்சாத் தானே உன் மூளையிலே என்ன கோளாறுன்னு கண்டுபிடிக்க முடியும்?

சேட்டை: அப்படீன்னா மூளைன்னு ஒண்ணு இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா டாக்டர்? அந்த எக்ஸ்-ரே, ஸ்கேன் படத்தையெல்லாம் மறக்காம கொடுத்திருங்க! என் கிட்டே வெறே எவிடன்ஸே இல்லை! ரூமுலே ஃபிரேம் போட்டு மாட்டணும்.

டாக்டர்: மரியாதையா அந்தப் படத்தை உத்துப்பாக்கறியா? இல்லேன்னா என் கிட்டே காண்டாமிருகத்துக்குக் போடுற காலரா தடுப்பூசி இருக்கு; அதை உனக்குப் போட்டிருவேன்.

சேட்டை: சரி டாக்டர்! கொசுவத்தியைப் பார்க்கிறேன். தூக்கம் வர்றா மாதிரி இருக்கு டாக்டர்...!

டாக்டர்: அதுக்காக குறட்டையெல்லாம் விடப்படாது! கவனமாக் கேளு! இப்போ உன் வாழ்க்கையிலே ஒரு மணி நேரம் பின்னாடி போ! போயிட்டியா? இப்போ சொல்லு! என்ன பண்ணிட்டிருக்கே?

சேட்டை: வெளியே உங்க ரிஸப்ஷனிஸ்ட் கிட்டே கடலை போட்டுக்கிட்டிருக்கேன்.

டாக்டர்: அடப்பாவி! சரி வுடு! இப்போ உன் வயசுலே ஒரு நாளைக் குறைச்சுக்க! சொல்லு, ஒரு நாளைக்கு முன்னாலே நீ என்ன பண்ணிட்டிருந்தெ?

சேட்டை: ஆபீசிலே எம்.ஐ.எஸ்.ரிப்போர்ட் ரெடி பண்ணறேன்னு ரீல் விட்டுட்டு "நவரசநாயகி"ன்னு என் வலைப்பதிவுலே மொக்கை போட்டிட்டிருந்தேன் டாக்டர்.

டாக்டர்: ஓ! நீ உட்கார்ந்து யோசிக்கிற இடம் ஆபீஸ் தானா? அதை விடு! இப்போ..உன் வயசுலே ஒரு வாரத்தைக் குறைச்சுக்கோ! இப்போ என்ன பண்ணிட்டிருக்கே...?

சேட்டை: அப்போ.."சுறா’வுக்குப் போன சூடாமணி"-ன்னு ஒரு இடுகை எழுதிட்டிருந்தேன்.

டாக்டர்: ஹை! அது நீ எழுதினது தானா? கைகொடு! நீ அந்த இடுகையைப்போட்டதுக்கப்புறம் எங்க ஆஸ்பத்திரியிலே ஒரே கூட்டம்! படம் பார்த்து வந்தவங்க பாதி; உன் இடுகையைப் படிச்சிட்டு வந்தவங்க மீதி!

சேட்டை: ஏதோ என்னாலான சமூக சேவை டாக்டர்!

டாக்டர்: சரி, இப்போ...இன்னும் கொஞ்சம் பின்னாலே போகலாமா?

சேட்டை: இதுக்கு மேலே பின்னாலே போனா மண்டை சுவத்துலேதான் முட்டும் டாக்டர்!

டாக்டர்: ஐயோ சேட்டை! அதைச் சொல்லலே! இப்போ இன்னும் ஒரு மாசம் பின்னாடி போகச் சொன்னேன்! சொல்லு...ஒரு மாசம் பின்னாடி..! என்ன பண்ணிக்கிட்டிருக்கே...?

சேட்டை: ஹூம்! ஒரு மாசத்துக்கு முன்னாலே...ப்ரீத்தி ஜிந்தா சொன்னாங்களேங்குறதுக்காக "லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்குப் போய் சந்திச்சிட்டு வந்தேன்."

டாக்டர்: ஓஹோ! உனக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு இப்போத் தான் புரியுது எனக்கு! சரி, இன்னும் ரெண்டு மாசம் பின்னாடி போகலாமா?

சேட்டை: டாக்டர்! ஏன் எல்லா மனோதத்துவ டாக்டருங்களும் நோயாளிங்களை சும்மா பின்னாடி போங்கன்னு ரிவர்ஸுலேயே போகச் சொல்லுறீங்க! கொஞ்சம் லெஃப்டுலே ரைட்டுலே போகக் கூடாதா?

டாக்டர்: அப்படியெல்லாம் போக விட்டா நீ 'நோ என்ட்ரி’யிலேயே போயிருவேன்னு எனக்குத் தெரியாது?

சேட்டை: மெய்யாலுமெ நான் ஒன்-வேயிலே போனவன் தான் டாக்டர்! என்னோட "ஒருவழிச்சாலைகளில்..." இடுகையைப் படியுங்க தெரியும்.

டாக்டர்: ஏன் சேட்டை? அதெல்லாம் வேறே யாரோ எழுதிக்கொடுத்து நீ போட்டிருந்தா மாதிரி இருந்ததே! அதுலேயும் "ஜலமஹாத்மியம்" னு ஒரு இடுகை போட்டியே? உண்மையிலேயே அது நீ எழுதினது தானா?

சேட்டை: ஏன் டாக்டர் எல்லாரும் இதையே கேட்கறீங்க? உங்க ரிஸப்ஷனிஸ்ட் மேலே சத்தியமா நான் தான் எழுதினேன். சந்தேகம் இருந்தா அந்த இடுகையை இன்னொருவாட்டி படிச்சுப்பாருங்க! எத்தனை பேரு சாவி கொடுத்து என்னை எழுத வைச்சாங்க தெரியுமா?

டாக்டர்: சேட்டை! என் கையைப் பாரு! இது எத்தனைன்னு எண்ணிச் சொல்லு!

சேட்டை: ஒரே ஒரு கைதான் டாக்டர்

டாக்டர்: சேட்டை, இம்சை பண்ணாதே! எத்தனை விரல்னு நம்பர் சொல்லு!

சேட்டை: ஏன் டாக்டர், என் பார்வையைப் பத்தித் தான் நான் ஏற்கனவே "ராஜபார்வை"ன்னு இடுகை போட்டுட்டேனே?

டாக்டர்: என்னாலே நம்ப முடியலே சேட்டை! "ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே"ன்னு 'கானா’ பாட்டு எழுதின நீ எப்படி அப்பப்போ படுசீரியசாகவும் இடுகை போடுறே? டாக்டர் கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்லக் கூடாது தெரியுமா?

சேட்டை: தெரியுமே, அவங்க எவ்ளோ வேண்ணா சொல்லலாம்கிறதும் தெரியும்.

டாக்டர்: சேட்டை! உனக்கு என்ன வந்திருக்குன்னு தெரியுமா? ’சந்திரமுகி’யிலே ஜோதிகாவுக்கு எது வந்ததோ, 'அந்நியன்’லே விக்ரமுக்கு எது வந்ததோ, அது இப்போ உனக்கும் வந்திருக்கு!

சேட்டை: எனக்குத் தெரிஞ்சு ரெண்டு படத்துலேயும் அவங்களுக்கு நிறைய சில்லறை வந்தது. எனக்கு சல்லிக்காசு கூட வரலியே டாக்டர்?

டாக்டர்: ஏன் எப்பப் பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி சில்லறை பத்தியே பேசுறே?

சேட்டை: பேசுறது இன்னா வாத்யாரே? பிச்சைக்காரங்களைப் பத்தி ஒரு இடுகையே போட்டிருக்கேனே? இன்னாண்ணறே நீ?

டாக்டர்: நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு! உனக்கு வந்திருக்கிற வியாதியோட பேரு "மல்டிப்பிள் முன்சிபாலிட்டி டிஸார்டர்"..சாரி, "மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸார்டர்!"

சேட்டை: ஐயையோ! வியாதி பேரையே தப்புத்தப்பா சொல்றாரே? உண்மையிலேயே நீங்க MBBS படிச்ச டாக்டர் தானா?

டாக்டர்: நான் MBBS இல்லை; M.A.B.F.I.A.S தெரியுமா?

சேட்டை: அப்பாடியோ, ரொம்பப் பெரிய படிப்புத் தான் டாக்டர்! இப்போ கன்டின்யூ பண்ணுங்க ட்ரீட்மெண்டை!

டாக்டர்: நல்ல வேளை, M.A.B.F.I.A.S-ன்னா என்னான்னு நீ கேட்கலே! இல்லாட்டி அது 'Matriculation Appeared But Failed In All Subjects'னு நான் உண்மையைச் சொல்ல வேண்டி வந்திருக்கும். தேங்ஸ் சேட்டை!

சேட்டை: நோ மென்ஷன் டாக்டர்! நான் வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்குக் காரணமே 'கானா’ பாடல்கள் மேலே இருக்கிற ஈடுபாடு தான்!ஷேர் ஆட்டோவே கானா தவிர "தீ.நகர்"னு நான் தி.நகர்,பாண்டிபஜார் பத்தி எழுதின கானாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

டாக்டர்: அது போகட்டும், நீ அடிக்கடி அனுபவம்கிற பேருலே ஏன் நாய்,பூனை,காக்காயைப் பத்தியே எழுதுறே?

சேட்டை: என்னோட "வல்லான் வகுத்ததே வழி" பத்தி கேட்கறீங்களா? அது அனுபவம் டாக்டரே! நல்ல அனுபவம் கிடைச்சா நாய்,பூனையென்ன, உங்களைப் பத்திக் கூட எழுதுவேன் டாக்டர்!

டாக்டர்: அப்புறமா, "நாய் வளர்ப்போமாக!" ன்னு இன்னொண்ணு எழுதினே இல்லே?

சேட்டை: ஆமா, பணக்காரன் வூட்டுலே ஒரு நாயாவாச்சும் இருந்திருக்கக் கூடாதான்னு சில சமயங்களிலே ஏக்கம் வர்றதில்லையா?

டாக்டர்: இப்பவே உன் ஏக்கத்துலே பாதி நிறைவேறிடுச்சுன்னுதான் தோணுது! ஒரு பணக்கார வீடு மட்டும் கிடைச்சிட்டா முழுசா நிறைவேறினா மாதிரி தான்! அப்புறம், சமீபத்துலே கூட "மனிதநாயம்"னு ஒரு இடுகை போட்டிருந்தே இல்லியா? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். அதுலே வர்ற பைத்தியக்காரன் நீ தானே?

சேட்டை: நீங்க ஏன் இப்படிக் கேட்கறீங்கன்னு எனக்குத் தெரியும்? என்னோட "பராசக்தி-ரிப்பீட்டேய்" இடுகையைப் படிச்சிட்டீங்க தானே?

டாக்டர்: சேட்டை! நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லு, சின்ன வயசிலே........

சேட்டை: என்னோட சின்ன வயசு பத்தித் தான் "சின்னஞ்சிறு வயதில்....!"ன்னு டீட்டெய்லா எழுதிட்டேனே டாக்டர்?

டாக்டர்: ஓ.கே! கடைசியா ஒரு கேள்வி! உன்னோட "பயணத்தில் ஓர் நாள்!" இடுகை தான் பல புதிய பதிவர்களோட உனக்கு நட்பு கிடைக்க உதவியா இருந்தது இல்லையா? அதை நீ தான் எழுதினேன்னு நம்பவே முடியலேன்னு வாசிச்சவங்களே சொன்னாங்களா இல்லியா?

சேட்டை: எத்தனை தடவை டாக்டர் சொல்றது? அது சத்தியமா நான் எழுதினது தான். கொஞ்சம் தலையைக் குனியுங்க! (டாக்டர் உலகப்பனின் தலையில் ஓங்கியடித்து சத்தியம் செய்து) சத்தியமா..சத்தியமா..நான் தான் எழுதினேன்.

சேட்டை தலையில் அடித்ததும் டாக்டர் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்.

சேட்டை: ஐயோ டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு!

(நர்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்ததும், டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் கண்விழிக்கிறார்)

டாக்டர்: நான் யாரு? எங்கே இருக்கேன்? இது எந்த இடம்?

நர்ஸ்: ஐயோ, எங்க டாக்டருக்கு என்னவோ ஆயிருச்சு! டாக்டரைக் கூப்பிடுங்க! டாக்டரைக் கூப்பிடுங்க!

சேட்டை: சிஸ்டர், பயப்படாதீங்க, நானே டாக்டர் தான்! டாக்டர், அதோ அந்தப் படத்தைப் பாருங்க! அப்படியே 'ஃபாஸ்ட் ஃபார்வார்ட்' பண்ணி ஒரு பத்து வருசம் முன்னாடி வாங்க!

நர்ஸ்: நீங்க டாக்டரா?

சேட்டை: என்னம்மா இப்படிக் கேட்கறீங்க? பதினாலாம் தேதி வலைச்சரத்துலே போட்ட இடுகைக்காக எனக்கு பெண் பதிவர்களெல்லாம் சேர்ந்து "டாக்டர்" பட்டம் கொடுத்திருக்காங்கம்மா! என்ன, உங்க டாக்டர் சைக்காளஜிஸ்ட்! நான் பொய்க்காளஜிஸ்ட்!

நர்ஸ்: ஐயையோ!

சேட்டை: நம்பிக்கை வரலியா? உங்க தலையிலே அடிச்சு சத்தியம் பண்ணட்டுமா?

நர்ஸ்: ஐயா சாமி, ஆளை விடுங்க! ( தலைதெறிக்க ஓடுகிறார்)

(திரை)

அன்புடையீர்,

மதிப்புக்கும் அன்புக்குமுரிய சீனா ஐயா அவர்களின் ஆசியுடன், சகபதிவர்களின் உறுதுணையுடன், உங்கள் அனைவரது பேராதரவுடன், இந்த எழு நாட்களும் 'வலைச்சரம்’ மூலம் உங்களில் ஒருவனாய் இருந்தது குறித்து மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.


இந்தப் பொன்னான வாய்ப்பை எனக்களித்த வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கும், வாசித்ததோடு பெருமளவில் பின்னூட்டங்களிட்டு ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

என்னால் இயன்ற அளவு இந்த ஒரு வாரத்தில் பல வலைப்பூக்கள் பற்றி இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். நான் குறிப்பிடாமல் விட்ட பதிவுகள் ஏராளம் என்றாலும், அவர்களும் எனது விருப்பத்துக்கும் அபிமானத்துக்கும் உரியவர்களே!

வலைச்சரம்-புதிய பதிவர்களை அறிமுகம் செய்வதோடு நின்று விடாமல், என் போன்ற மிகக்குறைவான அனுபவமே உள்ள பதிவர்களிடமும் ஆசிரியர் பொறுப்பை வழங்கியதன் மூலம், ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல புதுமுகங்களுக்கு இப்பொறுப்பை இனிவரும் காலங்களில் அளித்து அவர்களையின் திறமையை வெளிக்கொணர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

மீண்டும் ஒரு முறை இருகரம் கூப்பி, சிரம்தாழ்த்தி உங்களுக்கு உளமாற நன்றி தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

வலைச்சரத்தில் சேட்டை முடிந்தது! :-)


நன்றி!! வணக்கம்!!!!


சேட்டைக்காரன்

33 comments:

 1. நன்றி சேட்டை ஒரு வாரத்தய் மிக கல கலப்பாக கொண்டு சென்றதுக்கு.

  ReplyDelete
 2. சான்சே இல்ல நண்பா.. செம செம செம.. கலக்கி இருக்கீங்க.. வாழ்த்த்கள்..:-)))

  ReplyDelete
 3. ஒரு வாரமும் கலக்கிவிட்டீர்கள் சேட்டை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. You have set a very high standard for valaichcharam Chettai. ரொம்ப நாள் பேசப்படும் உங்கள் ஆசிரியப் பணி. ஹாட்ஸ் ஆஃப் டு யூ. வாழ்த்துகளும் நன்றியும்.

  ReplyDelete
 5. உங்கள் சேட்டைக்கு நிறைவான வாழ்த்துகள்.மனசை இலேசாக்கிய வாரம் இது.நன்றி.

  ReplyDelete
 6. நன்றி சிவா..புதுமையான முறையில் எழுதி அசத்திட்டீங்க.. ஒளவை வேறு எனக்கு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க..பேரைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன்...
  நன்றீ உங்களுக்கும் சீனா சாருக்கும்

  ReplyDelete
 7. படிச்சிட்டு வரேன்.....

  ReplyDelete
 8. சேட்டை உண்மையிலேயே இந்த வாரம் இனிமையா போச்சு. வித்தியாசமாக இருந்துச்சி. வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 9. அதுக்குள்ளே முடிஞ்சு போச்சா? ஏழும் ஏழு விதமா அருமையா இருந்திச்சு.... நான் முன்னமே சொன்ன மாதிரி அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு + மனசு...

  இத்தனை பேரை அறிமுகப்படுத்துவது ஒன்றும் சாதாரணம் அல்ல...

  ReplyDelete
 10. கலக்கல் சேட்டை..

  ReplyDelete
 11. வாரமுழுவதும் வலைச்சரத்தில் கலக்கி ஓய்வு எடுத்து தனது வலைச்சரத்தில் கலக்க இருக்கும் சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  ReplyDelete
 12. வாரமுழுவதும் வலைச்சரத்தில் கலக்கி ஓய்வு எடுத்து தனது வலைச்சரத்தில் கலக்க இருக்கும் சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  ReplyDelete
 13. வலைச்சரத்தில் ஒரு மைல் கல்லை அடைந்துவிட்டேங்க! மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ஹா ஹா முடியல,சிரிச்சு மாளலை...1 வாரம் கலக்கிட்டீங்க சேட்டை!!

  ReplyDelete
 15. ஒரு வாரமும் நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. படிச்சு முடிக்க மாதமாகும் போலிருக்கு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சேட்டை...கலக்கிட்டீங்கன்னா, சும்மா பின்னிட்டீங்க இந்த ஒரு வாரமும்...Hats off..!

  ReplyDelete
 17. வாழ்த்துகள் சேட்டைக்காரரே!!

  :-)

  ReplyDelete
 18. இந்த வாரம் சிறப்பாக இருந்தது!!
  வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 19. இந்த வாரம் சேட்டை வாரமாகவே இருந்தது
  நன்றி

  ReplyDelete
 20. எடுத்த பணியை அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள்.

  ஒருபுதிய பாணியை உருவாக்கை இருக்கிறீர்கள் .

  வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 21. கலக்கல் சேட்டை..

  இத்தனை அறிமுகங்களைக் கொடுத்ததே ஒரு தனி சாதனைனு நினைக்கிறேன்.

  கடுமையான உழைப்பு. உழைப்பிற்கு என்றுமே பலன் இருக்கும்.

  உழைப்பு வீண் போகவில்லை. வாழ்த்துகள்!!

  ReplyDelete
 22. அட்டகாசமான,ஆர்ப்பாட்டமான, அருமையான வாரம். எல்லா இடுகைகளுமே சூப்பர்!


  எல்லாவற்றையும் மிகவும் ரசித்துப் படித்ததோடு நம்ம கோபாலுக்கும் பரிந்துரைத்தேன்!

  மனமார்ந்த இனிய பாராட்டுகள், டாக்டர் சேட்டை!

  ReplyDelete
 23. ரொம்ப நல்லாவே இருந்தது ஒரு வாரம் முழுவதும்... அசத்தல் சேட்டை.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 24. ஒரு வாரம் ஓடியதே தெரியலெ....

  கலக்கல்.

  ReplyDelete
 25. பாராட்டுக்கள் சேட்டைக்காரன்:)!

  ReplyDelete
 26. அன்பு சேட்டை நண்பா!

  கலக்கல், கலக்கல், கலக்கல்!

  வேறென்ன சொல்ல! வார்த்தைகள் இல்லை! வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.

  பிரபாகர்...

  ReplyDelete
 27. ஒரு வாரம் முழுக்க நல்லா என்சாய் பண்ணி படிச்சேன் சேட்டை. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 28. ஒரு வாரமாக சிரிக்கவும் வைத்து, பல வலைப்பூக்களை அறிமுகமும் செய்வித்து, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய சேட்டைக்காரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! முயற்சியும் முனைப்பும் இரண்டறக்கலந்த அப்பழுக்கற்ற உழைப்பை ஒரு வாரமாக வெளிப்படுத்திய சேட்டைக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்!

  ReplyDelete
 29. சிரிப்பூசி போட்டு மனசை லேசாக்கிய டாக்டர் சேட்டைக்கு பாராட்டுக்கள். ஒரு வாரம் போனதே தெரியலை.

  ReplyDelete
 30. ’வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு
  போகும் என்பார்கள்’

  சிரிப்பு மழையில் நனைந்தோம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. டாக்டர்!சான்ஸே இல்ல ன்னா என்னங்க?

  ReplyDelete
 32. அதுக்குள்ளே ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?
  நல்ல கலக்க்கல்.

  ReplyDelete
 33. அச்சச்சோ, அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா? வாரம் முழுவது கலக்கலான பதிவுகளை கொடுத்ததற்கு நன்றி சேட்டை.

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது