07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 21, 2008

அளப்பது கதை !

வாழ்வில் கவிதை எப்படி ஒரு அங்கமோ, அதே போல கதையும், என்று திடமாக நம்புவர்களில் அடியேனும் ஒருவன்.

பிரியமுடன் பாட்டி சொல்லி நிறைய கதைகள் சிறுவயதில் கேட்டிருப்போம். அம்மாவை, அப்பாவை கதை சொல்லச் சொல்லி நச்சரித்திருப்போம்.

"ஒரு ஊருல, ஒரு ராஜா இருந்தாராம் ..." என்று ஆரம்பிக்கும்போதே, சுத்தி கூட்டமா உட்கார்ந்திருக்கும் பசங்க எல்லாம், இன்னும் கொஞ்சம் கைய, கால இழுத்து கதை சொல்லுபவரின் அருகில் நெருக்கமாகச் சென்று அமர்வோம். ஆரம்பத்திலேயே ஒரு விறுவிறுப்பு இருக்கும் ... அது ஒரு பொற்காலம். இப்ப இந்த மாதிரி யாராவது வீட்டில் கதை சொல்லுகிறார்களா குழந்தைகளுக்கு என்றால், நிறைய புத்தகம் படித்துக் காண்பிக்கிறார்கள். கால மாற்றத்தில் கதை சொல்லலும் கறைகிறது !!!!

குழந்தைகள் கதை என்றில்லை, நம்மைக் கவரும் சில கதைகள் கீழே உங்களுக்காக.



புதிதாய் வலைக்கு வந்து அதற்குள் பல கதைகள் எழுதியிருக்கிறார் வசந்தன். இவரின் கதை எழுதும் ஆர்வம் பின்னூட்டப் பெட்டிகளைப் பார்க்கையில் தெரிகிறது. நீங்களும் வாசித்து மெருகேற்றுங்கள் கதை ஆசிரியரை.

இவரது 'காத்திருக்க நேரமில்லை' என்ற கதையிலிருந்து ...

லதாவின் நச்சரிப்பு பொறுக்கமாட்டாமல்தான் மாணிக்கம் அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தான். ஆனால் அம்மா எடுத்த எடுப்பிலேயே நிராகரித்தாள். அம்மா எப்பவுமே அப்படித்தான். சுர்ரென்று கோபம் வரும். பிறகு வந்த சுவடே தெரியாமல் போய்விடும். ஏன் நாமளும் அப்படித்தானெ? அன்னைக்கி அம்மா கோபப்பட்டதுலயும் நியாயம் இருந்துதே? அப்பா செத்து முழுசா ரெண்டு மாசம் ஆவறதுக்குள்ளதான நிலத்த தாங்கன்னு கேட்டேன்? ...



சின்னக்குட்டி வீடியோவிற்கு வலையுலகில் பேர் பெற்றவர் ஆச்சே எனப் பார்த்தால். ஒரு அருமையான கதையாசிரியரும் கூட. நல்ல எழுத்து நடை, வட்டார வழக்கில் இவர் கதாபாத்திரங்கள் உலவுவது, அந்தக் காட்சியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. நிறைய அரிய தமிழ் சொற்கள் நிறைந்த கதையிது. மற்ற கதைகளையும் வாசியுங்கள்.

'அவள் ஒரு மாதிரி' எனும் கதையிலிருந்து ...

எந்த வித களங்கமில்லாமில் இயல்பாக சிரிப்பதை கதைப்பதை இவர்கள் இவளை ஒரு மாதிரி என்று கூறுவதை கேட்டு சிரித்து அலட்சிய படுத்தியே இருந்தாள் இது நாள் வரையும் ...



பல தகவல்களை தன் தளத்தில் சொல்லிவரும் சின்ன அம்மிணி அவர்களின் இந்த கதை ஒரு நெருடலை, வாழ்வின் எதார்த்தத்தை நம்முள் ஏற்படுத்துவது நிச்சயம்.

நல்ல தாயார் எனும் கதையிலிருந்து ...

'நான் கல்லூரியில் படிச்சப்போ, என் அம்மாவுக்கு நான் நல்லாப்படிக்கறதில்லைன்னு கோவம். ஒருநாள் ஏதோ சண்டையில் அம்மாவைக் கெட்ட வார்த்தைல ரொம்ப திட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வந்தேன். வேற எங்க போறது. ஊர்ல எல்லாரும் சொல்லித்திட்டின "அந்த" வார்த்தைகள் ...



பன்முகக் கலைஞர் கவிநயா. விரல்கள் அபிநயிக்க, கால்கள் கோலமிடும். மனம் அபிநயிக்க, விரல்கள் தட்டச்சிடும். சமீபத்தில் கதைகள் நிறைய எழுதி வருகிறார். இந்தக் கதை, தன் குழந்தையின் பாசம் பற்றி ஒரு தாயின் மனசு குறித்தது ...

அம்மாவின் மனசு எனும் கதையிலிருந்து ...

“என் பிள்ளையை என்னிடமே வர விடாம என்னடி சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கே?” என்று பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாகக் கேட்பாள் ...



வலைச்சரத்துக்காக (உங்களுக்காக) சமீபத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய மான், மன்னிக்கவும் சிங்கம் என்று சொல்லலாம் பதிவர் சரவ் அவர்களை. அதுவும் 'சிறுகதை முயற்சிகள்' என இவர் சொல்லிவருவது, நிஜம் கலந்த இயல்பு வாழ்வை. அற்புதம்.

அணில்கள் கேள்விப்பட்டிருப்போம், அதென்ன செந்தில்கள் ? அந்தக் கதையிலிருந்து சில வரிகள் ...

இப்டி வழி நெடூக பல செந்தில்களோட சேர்ந்து பயணம் செஞ்சிருந்தாலும் இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் அதிகம் இருந்ததில்லை. ஒருத்தன் சாந்து பொட்டு நிறம், இன்னொருத்தன் சந்தனப் பொட்டு நிறம், மற்றொருத்தன் மை பொட்டு நிறம். எடுப்பான பல்லு, இந்திராகாந்தி மூக்கு, சப்பை மூக்கு மேலையும் எப்பவும் கோபம், கப்பைக் காலு, நெட்டைக் கொக்கு இப்டி ஒவ்வொரு செந்திலும் ஒவ்வொரு மாதிரி.

ஆனா, நான் இப்போ சொல்லப்போற சில செந்தில்களுக்குள்ள ஒரு பொதுவான விஷயம் இருக்கு ...



'தங்கவேல் மாணிக்கத் தேவர்', அன்பு மகனுக்கு என்று நாட்டு நடப்புகளைப் பதிந்து வருகிறார். அவரது வலைப்பூவை மேய்ந்த போது, இந்த ஒரு கதை கண்ணில் பட்டது, ரொம்ப சின்னக் கதை. ஆனா ஒரு நெருடல் இதப் படிக்கும் போது ஏற்படத் தான் செய்கிறது.

வளர்ப்பு எனும் கதையிலிருந்து ...

” அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? “
” அப்படி இல்லைப்பா ? ”
” பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? “ ...



ப்ரதீப், நல்ல நடைக்குச் சொந்தக்காரர். நையாண்டி கலந்து, காட்சிகள் விவரிக்கும் விதம், நம்மை அந்த இடத்தில் கொண்டு நிறுத்துவது நிச்சயம்.

தாம்பத்யம் எனும் இவரது கதையிலிருந்து ...

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள் ...



டிஸ்கி: கதை சொல்லிகளின் கதை என்று குமுதத்திலோ, ஆ.வி.யிலோ வெகு நாட்கள் முன்னர் வாசித்த நினைவு. கதை சொல்லல் ஒரு தொழிலாகவும் இருந்திருக்கிறது / இருக்கிறது.

நேரம் இருப்பின் இவர்கள் அனைவரின் மற்ற கதைகளையும் வாசித்து மகிழுங்கள்.

இயன்றவரை வாசித்து உங்கள் கருத்துக்களை கதையாசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான்அடுத்த பதிவ பத்தி யோசிக்கறேன் .....

13 comments:

  1. //"ஒரு ஊருல, ஒரு ராஜா இருந்தாராம் ..." என்று ஆரம்பிக்கும்போதே, சுத்தி கூட்டமா உட்கார்ந்திருக்கும் பசங்க எல்லாம், இன்னும் கொஞ்சம் கைய, கால இழுத்து கதை சொல்லுபவரின் அருகில் நெருக்கமாகச் சென்று அமர்வோம். //

    அப்படியே ஒரு வரியில் எங்களூர் திண்ணைக்கு கொண்டு போய்விட்டீரய்யா... அதுவும் கதை சொல்வதில் மன்னனான ஒருவருக்கு கும்பலில் அனைவரும் சத்தமாக 'ஊங்'கொட்ட வேண்டும். இல்லாவிடில் கதை நின்று விடும். இங்கே பேசுவதை அமைதியாகக் கேட்டு பழகி இழந்தது அந்த ஊங்கொட்டும் கலை. :-)

    ReplyDelete
  2. சதங்கா,

    அருமை அருமை. புதுமை புதுமை

    கதை அளப்பது என்ற கலை கை வரப் பெற்ற சதங்கா

    தேடிப் பிடித்து அத்தனை புதியவர்களையும் அறிமுகப் படுத்திய
    அரிய பணி - அதன் பின்னே உள்ள உழைப்பு - ஈடுபாடு - பாராட்டுகள்

    நன்றி சதங்கா

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. கதை அளக்கும்போது நம்மள கண்டுகிட்டதுக்கு நன்றி சதங்கா. எல்லா கதைகளும் அருமை

    ReplyDelete
  4. சூப்பர். ரொம்ப நேர்த்தியா தொகுத்து இருக்கீங்க. :)

    ReplyDelete
  5. சதங்கா,

    எப்படி இப்படி பின்னி பெடலெடுக்கரீங்க. அருமையா பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கரீங்க. சூப்பர்.


    கதை கேக்கரதுல இன்னொரு விஷயம் இருக்கு. நடு நடுவே கேள்வி வேர கேப்பாங்க, சரியா பதில் சொல்லலைன்னா, சுத்தி இருக்கர அண்ணன் அக்கா மாமா பசங்க, சித்தி பசங்கன்னு எல்லோரும் சிரிச்சு சீரழிச்சுடுவாங்க. அதுக்கு பிறகு கதை சொல்லுன்னு கேட்டா இருக்கு வேடிக்கை.

    பித்தன்.

    ReplyDelete
  6. கவிதையைப் பின்னி, கதையை அளந்து, அசத்தறீங்க. ஒவ்வொருத்தரையும் கவனமா படிச்சு விவரமா அறிமுகம் செய்திருக்கும் விதம் அருமை. "ஊங்" கொட்டிக் காத்திருக்கோம், அடுத்த பதிவுக்கு! (என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி, சதங்கா!)

    ReplyDelete
  7. நாகு,

    உங்க ஊரு உணர்வு கிடைத்தது என்று சொல்கிறீர்கள். ரொம்ப சந்தோசம். 'ஊங்' கொட்டும் கலையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  8. சீனா ஐயா, தவறாது வந்து வாழ்த்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  9. சின்ன அம்மிணி, வருகைக்கும் மற்ற கதைகளும் அருமை என்று சொன்ன கதாசிரியருக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  10. பித்தன்,

    வருகைக்கும், கதை கேட்கும் போது உடன் இருக்கும் உறவுகளை ஞாபகப்படுத்தியதற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  11. அம்பி, பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. கவிநயா,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    //ஒவ்வொருத்தரையும் கவனமா படிச்சு விவரமா அறிமுகம் செய்திருக்கும் விதம் அருமை.//

    இதைக் கவனித்து பாராட்டியது பற்றி மகிழ்ச்சி. அடுத்த பதிவு குறித்து உங்கள் காத்திருப்பு மேலும் ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete
  13. வணக்கம் சதங்கா ...கதாசிரியர்களை அறிமுக படுத்தியதுக்கு நன்றிகள். அதில் இந்த சின்னக்குட்டியையும் சேர்த்து இருக்கிறீர்கள் மிக்க சந்தோசம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது