07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2009

எழுத்து ஒரு இனிய விஷம்

ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்கின்றன. அவை நன்கு ஊறிப்போய் நுண்ணிய குமிழ்களை அடக்கிய காகிதங்களாக மாறிவிட்டிருக்கின்றன. பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டேயிருக்கிறேன். முழுவதுமாக அரித்து தீர்ந்த பிறகு ஊறிய அவ்வெழுத்துக்கள் நன்கு உப்பி பெருத்து மிச்சமாய் இருக்கின்றன.

மதுவின் தீவிரத்தைப் பொறுத்து, அரிப்பும் அதன் பெருக்கமும் கணக்கிடப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளும் ஒத்த வலைஞர்கள் இணையத்தில் இருந்து எழுதிவருகிறார்கள். ஒருசிலருக்கு சூழ்நிலைகள் மட்டுமே எழுத்து நேரத்தை நிர்ணயிக்கின்றது. அவற்றுக்குள்ளாகவே வலைஞர்களின் நட்பு நெடுநாள்வரை நீடித்திருக்கிறது. சரி சில கவிதைகளைப் பார்ப்போம்.


டைரிக்குள் பதுக்கி 
வைக்கப்பட்ட ரோஜாப்பூ 
எனும் வாக்கியமானது
ஒரு ரோஜாச் செடியின்
ஆதி உணர்வை அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது..

பிரியத்திற்குரிய
மனுஷியின் கேசத்தில்
தவழ்ந்து திரிந்த ரோஜா
எனும் வாக்கியமானது
அவள் கேசத்தில் வீசும்
இயற்கையின் நறுமணத்தை
அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது...

பழைய டைரிக்குள் 
பதுக்கி வைக்கப்பட்ட
ரோஜா எனும் வாக்கியமானது
இயற்கைக்கு விரோதமானது..


- கவிஞர் ராம்பால் 

"சொல்" எனும் கவிதைத் தொடருள் சொற்களைக் கொண்டே சொல்லாக்கப்பட்ட கவிதைகள் இம்மாதிரி நிறைய கிடக்கின்றன. இவை சிறு சிறு முடிச்சுகளை அங்கங்கே முடிச்சிட்டு அவிழ்த்து காட்டிவிடும் கவிதைகள். சாதாரண விஷயத்தை அசாதாரண மையமாக்கிச் சொல்லுவது.

இக்கவிதையில் வாக்கியம் என்பது வாக்கியமல்ல. அது நிகழ்வுகள். டைரிக்குள் ரோஜா பதிக்கி வைக்கப்படும் ஒரு நிகழ்வு. ரோஜாவின் ஆதி உணர்வை அழிக்கிறது.. இரண்டாவது ப்ரியத்திற்குரிய மனுஷி - காதலி (மனைவியும்) அவளது கூந்தலில் திரிந்த ரோஜாவானது, அவளது கூந்தலின் இயற்கை நறுமணத்தை அழிக்கிறது. மூன்றாவதாக, பழைய டைரிக்குள் காய்ந்து கிடக்கும் ரோஜாவானது, ஒரு மலரைச் சிதைத்த, இயற்கைக்கு இழைத்த துரோகமானதாகிறது. கவிதையில் பெரியதாக ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கவிப்படுத்தலில் கவிஞர் அழகான கட்டமைப்பைக் கையாண்டிருக்கிறார். இக்கவிதையை மேலும் கவனியுங்கள். டைரிக்குள் பதுக்கி எடுத்து வரப்படும் ரோஜாவானது, காதலானால் காதலிக்குத் தரப்படுகிறது. அது காதலியின் கூந்தலில் அமர்ந்த பிறகு அவளது டைரிக்குள் பதுக்கி வைக்கப்படுகிறது.. கவிதை இறந்த காலத்தை நினைவுபடுத்துவதிலிருந்து நிகழ்காலத்திற்குள் உலவுகிறது. 

யாத்ராவின்  தவம் 

தவத்திலிருக்குமென்
விழிகளுக்கு பாலூட்டும்
கனத்து பருத்து மதர்த்து
திமிர்ந்த முலைகள்
தவப் பயண
இளைப்பாறலாய் மடிகிடத்தி
அனல் பறக்க
ஆவி பிடிப்பதாய்
கூந்தலைப் படர்த்தி போர்த்தும்
ஒளி புக முடியாமல் முழுதுமாய்
அடர் கானக இருள் வெளியில்
நாவின் கால்தடம் சரசரக்க
இலக்கற்று கிடந்தலைகிறேன்
யாத்ரீகனாய் வன மேனியெங்கும்
காற்றாய் விரல்களூர மெய் சிலிர்க்க
நரம்புகள் புடைத்து
கூடும் உதிர வேகம்
கரங்களில் இருமலை பிசைந்து
கசிந்து பாயும்
பால்நதியிடை கவிழ்ந்து
மூச்சடைகிறேன் மூழ்கி
மயிர்க்கால்களின் வேர்களை
மென்மையாய் வருடும்
நகத்துணுக்குகள்
திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்
எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
எழுதுகோலை மறுபடியும் ஊர்தலுக்கழைத்து
சற்றே பொறு
எழுதுகோல் விறைக்கட்டும்
உயிர்மை திரளட்டும்
அவிழ்த்தவிழ்த்து வாசித்து
ரசிக்கும் மற்றுமொரு
கவிதையை எழுதுகிறேன்.நன்கு நன்கு கடைந்து விரசத்தைப் பிரித்து, தெளித்து காமக் கடும்புனலின் உட்புகுந்து எழுதிய இக்கவிதையை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். படிக்கும்பொழுது கால்மயிர்கள் எழுந்து உச்சியில் காமம் பிறக்கும். எங்கும் சொற்கள் பிளந்து உறுப்பைக் காண்பிக்காத மொழிவீச்சு. யாத்ராவின் மொழிவீச்சை பலமுறை கண்டு சிலாகித்திருக்கிறேன். இக்கவிதையை எந்த சூழ்நிலையில் அமர்ந்து எழுதினார் என்று தெரியவில்லை. அவரது வார்த்தையைப் போலவே, அவிழ்த்தவிழ்த்து வாசிக்கப்பட பல கவிதைகள் உள்ளன. 

இருத்தல்

எங்கெல்லாமோ திரிந்து
சலித்துப்போய்
இறுதியில் நுழையும்
ஊர் நடுவிலிருக்கும்
காய்கறி மண்டியில் மாடு
உதிர்ந்த தழைகளுக்கும்
அழுகி நசுங்கிய காய்களுக்கும்
ஆசைப்பட்டுச்
செல்லும் நாவில் நீர் வடிய...
அதற்கெனவே
காத்திருந்தது போல் வந்து அடிப்பான்
வாழைத்தாரின் நடுத்தடியால்
கூலிக்கென ஓடும் பையன்
வியாபாரம் ஓய்ந்து
வீடு திரும்பும் வேளையில்
சேகரிக்கத் தொடங்குவான்
உருண்டோடிய காய்கறிகளையும்
உதிர்ந்து
குவியலாகக் கிடக்கும்
தழைகளையும்
யாருக்கும் தெரியாமல்.


கவிஞர் பொன்.வாசுதேவன் கவிதைகள்  கவிதை படித்தபிறகு எழும் நீண்ட மெளனத்தினிடையே இவரது கவிதைகள் சஞ்சரிக்கின்றன. இவரது மொழியாளுமை, கவிதையில் மட்டுமல்லாது, கதைகளிலும் கட்டுரைகளிலும் பரவலாகப் பரவிக் கிடக்கிறது. அசாதாரண விஷயத்தை, நிகழ்வை , உணர்வை கவிதையாக்குவதில் மிகவும் தேர்ந்தவராக இருக்கிறார். "இருத்தல்" எனும் இக்கவிதை 'பையனின் இயல்பான இருப்பைக் குறித்ததாக இருக்கிறது. உருண்டோடிய காய்கறிகளைச் சேகரித்து முடிக்கும் இந்நிகழ்வு, தவறான செயல் என்று சொல்ல முன்வரவில்லை. அது ஒரு இருப்பு. சூழ்நிலையின் நிர்பந்தம். ஒருவகையில் அந்த மாடும் பையனும் ஒன்றுதான்... மாட்டுக்குத் திருப்பியடிக்கத் தெரியாது. அவ்வளவே. இது எப்படி தொடர்பு ஏற்படுத்தலாம்? எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் உள்ளார். அவரது அலுவலகத்தில் வேலை செய்த ஒரு நிர்வாகி தொழிலதிபரின் தங்கையை யாருக்கும் தெரியாமல் மணந்து கொள்ள, ஆத்திரமுற்ற அவர் இருவரையும் ஊரை விட்டே துரத்திவிட்டார். அதே நேர்மையான தொழிலதிபர் ரிஷப்ஸனிஸ்டின் மடியில் இப்போது கிடப்பதை அலுவலகத்தின் ஊழியர்கள் கூறுகிறார்கள்.... இங்கே காமம் என்பது "காய்கறி" ஆகிறது.. மாடு திருட இருந்ததை மனுஷன் திருடியது போன்று!!

மீண்டும் நாளை!!

16 comments:

 1. வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் ஆதவரே.....

  ReplyDelete
 2. பிரியத்திற்குரிய
  மனுஷியின் கேசத்தில்
  தவழ்ந்து திரிந்த ரோஜா
  எனும் வாக்கியமானது
  அவள் கேசத்தில் வீசும்
  இயற்கையின் நறுமணத்தை
  அழித்த கணத்தில்
  ஆரம்பமாகியது...

  அருமை அருமை

  ReplyDelete
 3. இவரது மொழியாளுமை, கவிதையில் மட்டுமல்லாது, கதைகளிலும் கட்டுரைகளிலும் பரவலாகப் பரவிக் கிடக்கிறது. அசாதாரண விஷயத்தை, நிகழ்வை , உணர்வை கவிதையாக்குவதில் மிகவும் தேர்ந்தவராக இருக்கிறார்

  நான் அதிசயித்து வியந்து ரசித்து படிக்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர் ஆதவரே...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ரோஜா சொல்லாடல் அசர வைத்த கவிதை.பகிர்வுக்கு நன்றி ஆதவா.

  மேலும் யாத்ரா,வாசு இவர்களின் கவிதைகளை தவறாமல் வாசிப்பதுண்டு.

  தொடர்ந்து இன்னும் அரிய படைப்புகளை தருவீர்கள் என்ற காத்திருப்புகளுடன்....

  ReplyDelete
 5. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.


  ரோஜவை பற்றியது

  [[ஆதி உணர்வை அழித்த கணத்தில்
  ஆரம்பமாகியது..]]

  அருமை.

  யாத்ரா அதிகம் போனதில்லை, இனி பார்ப்போம்

  நன்றி ஆதவா!

  ReplyDelete
 6. //ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்கின்றன. அவை நன்கு ஊறிப்போய் நுண்ணிய குமிழ்களை அடக்கிய காகிதங்களாக மாறிவிட்டிருக்கின்றன./

  நல்லாயிருக்கு ஆதவா!

  ReplyDelete
 7. பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. /////////

  அழகான வரிகள்

  ReplyDelete
 8. பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. /////////

  அழகான வரிகள்

  ReplyDelete
 9. உங்கள் எழுத்து ரொம்ப பிடிக்கிறது. அறிமுக முன்னுரை அழகான முகம் போல படித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.

  வாழ்த்துக்கள்.

  --வித்யா

  ReplyDelete
 10. ஐந்தாம் நாள் வாழ்த்துகள் ஆதவா.

  ReplyDelete
 11. ஆதவா,
  நான் மிகவும் ரசிக்கும் தனித்துவ மொழி நடை உங்களிடமிருக்கிறது. இதை பல பதிவர்களிடமும் நான் சொல்வதுண்டு.
  000
  என்னைப் பற்றிய அறிமுகத்திற்கும் அன்பிற்கும் நன்றி.

  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 12. அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகளில் வாசு சாரின் கவிதை மட்டுமே முன்பே படித்திருக்கிறேன். மற்றவர்களின் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன். இப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறேன்... அதன் மொழி ஆளுமையால்...
  பகிர்வுக்கு நன்றி ஆதவா...

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஆதவா.

  ReplyDelete
 14. //வலைச்சர ஆசிரியருக்கு ஜந்தாம் நாள் வாழ்த்துக்கள் //

  நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதவா

  ReplyDelete
 15. அன்பின் ஆதவா

  அருமை அருமை - அறிமுகம் செய்டஹ் கவிஞர்களின் கவிதைகள் அருமை

  நலலதொரு அறிமுகம்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 16. ஆதவா! உங்கள் மொழி நடை மேலும் உயர்ந்துள்ளதெனவே நினைக்கின்றேன்.
  படிப்பவைகளை நன்குணர்ந்து அதன் விளக்கம் சிரப்பானது.
  உங்கள் பணி மிக சிறப்பானதாகவே செய்கின்றீர்கள். இன்னும் சிறக்கட்டும்.

  -----------------------

  போன இடுகையில் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்தீங்க எந்தவொரு காரணமுமற்ற சிறு சந்தோசமே துளிர்விடுகின்றது. அதனை நன்றியுணர்வுடனே உணர்கின்றேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது