07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 15, 2013

என்னை எழுத வைத்த எழுத்தாளர்கள்...

வணக்கம் வலைச்சர நண்பர்களே, என்ன ஒரு நாள் கேப் விழுந்துருச்சோ? சரி அத எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிரலாம்.. திருநெல்வேலி டூ அமெரிக்கா பயணம் இனிதே முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு பத்திரமாக திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்.. நான் இதுவரை அறிமுகப்படுத்திய ப்ளாக்கர்கள் அனைவருமே என்னிடம் பழக்கத்தில் இருப்பவர்கள் தான்.. யாரென்றே தெரியாத ப்ளாக்கர் யாரையும் நான் இது வரை அறிமுகப்படுத்தியதில்லை.. இனியும் அப்படி செய்வேனா என்பது கொஞ்சம் சந்தேகமே.. எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே சொல்லிவருகிறேன்.. அந்த வகையில் இன்று, எனக்கு எழுத ஊக்கமும், என்னை எழுத வைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் ப்ளாக்கர்களை பற்றி சொல்லலாம் என்றிருக்கிறேன்.. இவர்கள் அனைவருமே எனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானவர்கள்.. ஆனால் மிக மிக நெருக்கமானவர்கள்..

முதலில், என் அப்பா போல் நான் மதிப்பு வைத்திருக்கும் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள்... இவரை தெரியாதவர்கள் ப்ளாக் உலகிலும் ஃபேஸ்புக்கிலும் மிக மிக சொற்பம். ஐயா அவர்கள் எனக்கு ஃபேஸ்புக் மூலம் தான் முதலில் அறிமுகம் ஆனார். அப்போதே நான் ப்ளாக்கில் எழுதி வந்தாலும், ஐயா அவர்களின் அறிமுகத்திற்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு கவனமும் நிதானமும் மெனக்கெடலும் வந்தது.. அந்த அளவுக்கு என் எழுத்தை என்னையே ரசிக்க வைத்தவர். என்னை விட என் மேலும் என் எழுத்தின் மேலும் அக்கறை கொண்டவர். ஃபேஸ்புக் நட்பு ஒரு குடும்ப உறவு போல் இருக்கும் என்பதை இவர் மூலம் தான் உணர்ந்து கொண்டேன்.. சென்ற மாதம் அண்ணன் பிரகாஷின் (ரத்னவேல் ஐயாவின் இளைய மகன்) திருமண வரவேற்புக்கு சென்றதும் ஒரு இனிய அனுபவம், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்..

ஐயா அவர்களின் பெரும்பாலான பதிவுகள், பகிர்வுகளாகத்தான் இருக்கும்.. யார் எந்த நல்ல கருத்தை சொன்னாலும் அதை வாழ்த்தி பகிர்ந்துவிடுவார்.. யாழ்ப்பாண பேச்சுத்தமிழ் பற்றி, கிட்டத்தட்ட ஒரு பி.எச்.டி. தீசிஸ் போல் எங்கள் ஃபேஸ்புக் நண்பர் ராம்குமார்.G.க்ரிஷ் அவர்கள் எழுதியதை ஐயா பகிர்ந்திருப்பதை பாருங்கள்.. கிட்டத்தட்ட யாழ்ப்பாண தமிழும், நெல்லை, தூத்துக்குடி, குமரி பகுதி தமிழும் பேச்சில், நடையில் ஒரே மாதிரி இருப்பதை நீங்கள் அறியலாம்...

வாழ்வில் நாம் ஒவ்வொருவரையும் பார்த்து ஒவ்வொரு வகையில் பொறாமைப்படுவோம்.. ஒன்னாம் கிளாஸில் பென்சிலின் அடியில் ரப்பரும் இணைந்திருந்த புது வகை பென்சிலை வைத்திருந்தவன் மீது ஆரம்பித்த பொறாமை, இப்போது என் வயதில் என்னை விட அதிக சம்பளம் வாங்குவனை பார்க்கும் போது வரை தொடர்கிறது.. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு ஸ்பெசல் விசயம் இருந்து கொண்டே இருக்கிறது.. தெரிந்தோ தெரியாமலோ அது நம்மை பொறாமைப் பட வைத்துக்கொண்டே இருக்கிறது.. அப்படி ஐயா அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படும் விசயங்கள் ரெண்டு.
1. தலைவர் சுஜாதா, தன் கைப்பட ஐயாவுக்கு எழுதியிருக்கும் நன்றிக்கடிதம்...
2. “ரத்தம் ஒரே நிறம்” கதையை ஆரம்பத்தில் வேறு பெயரில் எழுதிய போது அதில் வந்த நாயகனுக்கு, ஐயாவின் உதவியை மனதில் கொண்டு, “ரத்னம்” என பெயர் வைத்தது.. 
இப்போது கூட மனதை தேற்றிக்கொள்வது உண்டு, சுஜாதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் கதையில் அட்லீஸ்ட் வசந்திடம் பல்பு வாங்கும் ஒரு கப்பி பாத்திரத்திற்காவது என் பெயரை வைக்கும் அளவிற்கு ஏதாவது செய்திருப்பேன் என்று..

நம் எல்லோருக்கும் நம் ஊரில் தலை முடி வெட்டுவதில் இருந்து, புதுத்துணி எடுப்பது, பலசரக்கு சாமான் வாங்குவது, கறி எடுப்பது, புத்தகம் வாங்குவது, டீ குடிப்பது என்று ஒவ்வொன்றிற்கும் பிடித்த கடை என ஒன்று இருக்கும்.. என் அப்பா ஒவ்வொரு வருடமும் பள்ளி திறந்த முதல் நாளில் என்னையும் என் தம்பியையும் எங்கள் ஊரில் இருக்கும் “சரோஜினி ஸ்டோர்ஸ்”க்கு தான் நோட்டு புத்தகம் வாங்கித்தர அழைத்து செல்வார்.. மிக மிக சிறிய இடத்தில் அமைந்திருக்கும் அந்த கடையில் தான் அன்று சிவகாசியின் பாதி மாணவர்கள் தங்கள் பெற்றவர்களோடு வந்திருப்பார்கள்.. நாங்கள் எழுதி கொண்டுபோயிருக்கும் லிஸ்டில் எதாவது ஒரு புத்தகம் கண்டிப்பாக ஸ்டாக் இருக்காது. “எப்பா மிஸ் நாளைக்கு கண்டிப்பா புக் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க.. வேற கடைலனாச்சும் வாங்கி குடுங்கப்பா” என்பேன் நான் பாவமாய்.. “தம்பி, ஒங்க மிஸ்ட்ட சொல்லு, சரோஜினி ஸ்டோர்லயே புஸ்தோம் இல்லையாம்.. அடுத்த வாரம் எங்கப்பா வாங்கித்தருவாங்கனு சொல்லு” என்பார்.. அதாவது மற்ற கடைகளில் அந்த புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிக்கூட அவருக்கு கவலை இல்லை. சரோஜினி ஸ்டோரில் இல்லை, அதனால் எங்கும் இருக்காது.. வாங்கினால் அங்கு தான் வாங்க வேண்டும் என்பது அவரின் எண்ணம். அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பலசரக்கு கடை இருக்கிறது ஏ.கே.சி. ஸ்டோர்ஸ் என்று.. தான் எப்படி அந்தக்கடையில் loyal customer ஆனேன் என்பதில் இருந்து, எப்படி அவர்களால் இந்த மாதிரி ஒரு வெற்றிகரமான கடையை நடத்தி வர முடிகிறது என்பது வரை மிக மிக அழகாக சொல்லியிருப்பார்.

நான் அப்போது, சிவகாசியில் B.Sc., படித்துக்கொண்டிருந்தேன். ஜான்சன் என்றொரு விரிவுரையாளர் இருந்தார். NSSல் இருக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சதுரகிரி மலைக்கு சென்றார். மலை ஏறியதும் அவருக்கு நெஞ்சு வலி.. அங்கேயே சுயநினைவை இழந்து சரிந்து விட்டார். நாங்கள் அனைவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதட்டத்தில் கையை பிசைந்து கொண்டிருந்தோம்.. சிலர் அழவே ஆரம்பித்துவிட்டார்கள்.. அப்போது அங்கு கையில் கம்புடன் பிச்சைக்காரர் போல் ஒருவர் வந்தார். எங்களிடம் எதுவுமே பேசாமல், ஜான்சனின் வாயில் திருநீறு போன்று ஒன்றை போட்டார்.. விரிவுரையாளர் லேசாக கண் திறந்தார். “எப்படி இருக்க?” என்றார் அந்த பிச்சைககாரர். “ஹ்ம் நல்லாத்தான் இருக்கேன்” என்றார் ஜான்சன்.. “இல்ல, நீ அர மந்நேரத்துக்குள்ள எதாவது ஆஸ்பத்திரிக்கு போ” என்று கட்டளையிட்டு விட்டு அந்த பிச்சைக்காரர் தன் வழியில் அமைதியாக போய்விட்டார்.. பயந்து போன விரிவுரையாளரும் வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரை டெஸ்ட் செய்த டாக்டர்கள் பயந்துவிட்டார்களாம், “எப்படி சார் இந்த சிவியர் ஹார்ட் அட்டாக்கில் பைக் ஓட்டிட்டு வந்தீங்க?” என்று.. ஆம், தன் இதயம் வலிப்பதை அவரால் உணர் முடியாத ஏதோ ஒன்றை, உடலில் டக்கென்று சுறுசுறுப்பு வரும் ஒரு வஸ்துவை அந்த பிச்சைக்காரர் இவருக்கு கொடுத்திருக்கிறார். அவர் பிச்சைக்காரரா அல்லது சித்தரா? எங்களுக்கு தெரியாது.. ஆனால் இன்றும் சதுரகிரி மலையில் சித்தர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.. மிகவும் வயதானவர்கள் கூட இந்த மலையில் சர்வ சாதாரணமாக ஏறி சாமியை தரிசனம் செய்துவிட்டு சந்தோசமாக வருகிறார்கள்.. அந்த அருமையான மலையை பற்றிய ஐயாவின் நேரடி ரிப்போர்ட்...

ஏன் என்று தெரியவில்லை, ஐயாவும் இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிஸியாகிவிட்டார்... அவர் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை..

நான் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக இந்த ஆளை காதலித்திருப்பேன். சொல்ல வந்த விசயத்தை காமெடியாகவும் சொல்லத்தெரியும், அதில் இருக்கும் சீரியஸ்னஸையும் புரிய வைக்க முடியும்.. ரஜினி, விஜய் பற்றியும் எழுதுவார், ஜென், திராவிட அரசியலும் எழுதுவார். அவர் தான் நண்பர் டான் அசோக் என்னும் இளவரசன்.. 

நான் ஃபேஸ்புக்கிற்கு வந்த புதிது.. ஒருவரின் நிலைத்தகவலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா, கடவுள் வேண்டுமா இல்லையா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது (எப்போதும் தான்) டான் அசோக் நாத்திகத்திற்கு மிக அழுத்தமாக ஆதரவு கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.. நான் ஆத்திகத்திற்கு ஆதரவு. சரியான சண்டை. அப்போது தான் முதல் முறை இருவரும் அறிமுகமாகிறோம்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேசிப்பழகி நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்..

இவரெல்லாம் சிறுகதை எழுதியதை நிறுத்தியதால் தான் நான் தைரியமாக கதைகள் எழுத ஆரம்பித்தேன். இந்தக்கதையை படித்துப்பாருங்கள்.. சுப்புத்தாத்தாவை உங்களுக்கும் மிக மிக பிடித்துவிடும்.. இவரின் எழுத்து நடையும், எதார்த்தமாக சொல்லிவிட்டு போகும் மிகப்பெரிய விசயங்களும் கதையை தூக்கி நிறுத்தும்.. இவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும்..

பிறக்கும் போது பிள்ளை 3கிலோவுக்கு கம்மியாக இருக்கிறது என டாக்டர் சொன்ன நொடியில் இருந்து ஆரம்பிக்கிறது, இந்த சமூகம் நம் மீது செய்யும் வன்முறை.. சமூகத்திற்காக நாம் ஒவ்வொரு விசயமாக மாற வேண்டியிருக்கிறது.. கால் கிளாஸ், அரை கிளாஸ் - இப்படி சொன்னால் இன்று புரியுமா என தெரியவில்லை - L.K.G, U.K.G படிக்கும் பிள்ளைகளை சொந்தக்காரர்கள் முன் ரைம்ஸ் ஒப்பிக்க வைக்க ஆரம்பிப்பதில் இருந்து, வகுப்பில் முதல் ரேங்க், பத்தாம் வகுப்பில் நல்ல மார்க், பதினொன்றில் நல்ல குரூப், பெண்ணாய் இருந்தால் அழகுப்பிரச்சனை, ஆணாய் இருந்தால் பணப்பிரச்சனை என்று இந்த சமுதாயம் எதிர்பார்ப்பு என்கிற பெயரில் நம்மை நாமாக வாழ விடாமல் நம்மின் சுயத்தை எவ்வாறு கொல்கிறது என மிக மிக அருமையாக சொல்லியிருக்கும் ஒரு படைப்பு...

நம்மிடம் வெகு பரவலாக பேசப்படும் கெட்ட வார்த்தையில் இருந்து, நம் குடும்ப கௌரவம், சினிமா, பிட்டுப்படம் என எங்கும் முதன்மைப்படுத்தப்படுவது பெண்களும், அவர்களின் நடத்தையும் தான்.. பெண்கள் மட்டும் தான் கலாச்சாரத்தின் தூண் என்பது நமக்கு பிறப்பில் இருந்தே சொல்லி வரப்பட்டிருக்கும் ஒரு முட்டாள்தனமான கருத்து... ஒரு ஆண், ஒரு பெண்ணின் காதலை புறக்கணித்தால் அந்த ஆணை யோக்கியன் என சொல்லும் அதே சமூகம் தான், ஒரு பெண் காதலை புறக்கணித்த காரணத்திற்காக ஆசிட் வீச்சிற்கு ஆளாக்கப்படும் போதும் ஆணிற்கே வக்காலத்து வாங்குகிறது. அப்படிப்பட்ட நம் கலாச்சாரத்தையும், அதன் மீதான மக்களின் ஒரு பக்கமான ஆதரவையும் கிழித்து தொங்க விடும் பதிவு..

வாழ்வில் படிக்கும் காலத்திலோ, வேலை செய்யும் நேரத்திலோ, எங்கோ எப்போதோ, அட்லீஸ்ட் ஒரு முறையாவது நமக்கு ஒரு ஒன் சைடு லவ்வாவது வந்திருக்கும்.. அப்படி இருக்கும் போது, அந்த ஒன் சைடு ஆண், தான் காதலிக்கும் பெண்ணிடம் பேசுவதே கெட்ட காமெடியாக இருக்கும்.. அவனின் “அம்பித்தனமான” பேச்சே அவன் காதலுக்கு வேட்டு வைக்கும்.. அடுத்து நண்பர்கள்.. ஒருவன் ஒன் சைடு லவ்வில் இருந்தால் அவன் நண்பர்களுக்கு கொண்டாட்டம். ஆர்மபத்தில் இருந்து காதலை இழுத்து மூடும் வரை ட்ரீட் கேட்டே, அவர்களுக்கு ட்ரீட் வேண்டும் என்பதற்காகவே, ஒன் சைடு லவ்வை டூ சைடாக மாற்றுவார்கள்.. அந்த காதலை பாதுகாக்க நாம் படும் பாடு, அந்த அவஸ்தைகள் என பக்காவாக காதலுக்கு தேவையான அனைத்து ஐடியாக்களும், மிக காமெடியாக சொல்லப்பட்ட பதிவு இது..


நான் MBA படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்போது நான் தமிழ் வலைத்தளங்களை தமிலிஷில் (தற்போதைய இண்ட்லி) வாசிக்க ஆரம்பித்திருந்த காலம் அது.. என் மனதிலும் ‘நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்’ என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்த நேரம். அப்போது நான் படித்த ஒரு சில சிறுகதைகள் என் மனதை விட்டு என்றுமே நீங்காதவைகள்.. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் செல்வக்குமார் வினையூக்கியிடம் நான் அப்போது படித்த இரண்டு சிறுகதைகள் பற்றி மிக மிக சிலாகித்து பேசியிருந்தேன். அவர் இரண்டின் சுட்டியையும் அனுப்பியிருந்தார்.. பார்த்தால் ரெண்டுமே அவர் எழுதிய கதைகள் தான்.. எனக்கு மிகுந்த ஆச்சரியம்.. செல்வகுமாரை அறியுமுன்னே அவரின் கதைகள் எனக்கு அறிமுகமாகிவிட்டன. இன்னொரு முக்கிய விசயம், நான் கதைகள் எழுத ரத்னவேல் ஐயாவிற்கு அடுத்து என்னை அதிகம் ஊக்குவிப்பது இவர் தான்.. படிக்கும் காலத்தில் நான் படித்து வியந்த சிறுகதை ஆசிரியர் ஒருவரே இன்று என்னை ஊக்குவிப்பது உண்மையிலேயே என் பாக்கியம் தான்..

இவரின் கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு மூன்று வரிகளில் மேஜிக் செய்து விடும் சுஜாதா பாணி கதைகள்.. இந்தக்கதையை வாசித்துப்பாருங்கள், நாம் அனைவரும் இதை நம் தினப்படி வாழ்வில் செய்துகொண்டிருப்பது தான்.. அதை அவர் நுட்பமாக கையாண்டிருக்கும் விதம் மிகவும் அழகாக இருக்கும்..

இந்த நாத்திகர்கள் எல்லாம் ஓவராக பேசுகிறார்களே, அவர்களுக்கு பதில் சொல்ல்வாவது கடவுள் வர வேண்டும்.. அல்லது கடவுள் இருக்கிறார் என்பதை நாம் நாத்திகர்களுக்கு உணர்த்தும் வகையிலாவது ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ வேண்டும் என நான் பல முறை நினைத்தது உண்டு.. அதை எப்படி செய்யலாம் என எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு, நாத்திகரான நண்பரே தன் கதையின் மூலம் சொல்லியிருக்கும் அழகான பதில்..  பேண்டஸி கதையும், சயின்ஸ் ஃபிக்சன் கதையும் நான் இந்த அளவு விழுந்து விழுந்து ரசித்து படித்தது இவருக்கு முன் சுஜாதாவை மட்டும் தான்.. இந்த மனுசனுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க வருகிறது என எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது எப்போதும்..

ஃபேண்ட்ஸி, சயின்ஸ் ஃபிக்சன் மட்டும் அல்ல, திகில் கதைகளிலும் அய்யா கில்லி தான்.. இவரின் திகில் கதைகள் எல்லாம் ஃபேஸ்புக்கில் நம் இந்திய நேரப்படி இரவு 12மணிக்கு மேல் தான் பகிரப்படும்.. படித்துவிட்டு அவனவன் இழுத்து போர்த்திக்கொண்டு, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, எல்லா லைட்டையும் பளீர் என எரிய விட்டுக்கொண்டு தூங்க வேண்டியது தான்.. திகில் கதைகளிலும் கடைசி இரு வரிகளில் தான் உச்சபட்ச பன்ச் இருக்கும்..
நான் MBA  படித்த போது வியந்த ஒரு கதை என்று சொன்னேனே அது இது தான்.. தயவு செய்து கொஞ்சம் திடமான மனதுடன் படிக்கவும்.. கடைசி வரியை ஒரு முறைக்கு மேல் மனதில் யோசித்துப்பார்க்க வேண்டாம்...


நான் இன்று குறிப்பிட்ட இந்த மூவரும் ஒவ்வொரு வகையில் என்னை எழுத தூண்டியவர்கள்.. பல நேரங்களில் மறைமுகமாக, நான் டான் அசோக்கையும், செல்வகுமார் அவர்களையும் ஒரு ஏகலைவன் போல் பார்த்து கதைகள்/கட்டுரைகள் எழுத பழகியிருக்கிறேன், பழகிக்கொண்டிருக்கிறேன்.. ரத்னவேல் ஐயா நேரடியாக இருக்கும் ஒரு உந்து சக்தி.. இவர்கள் மூவரையும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.. இருந்தாலும் இப்படிப்பட்ட எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில் இவர்களை சொல்லாமல் இருந்தால், நான் எழுதுவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதால், இவர்களின் பதிவுகளை இன்று பகிர்ந்திருக்கிறேன்.. நாளை அடுத்த சில பதிவர்களோடு உங்களை சந்திக்க வருகிறேன்..

16 comments:

  1. அன்பின் ராம்குமார் - அருமையான அறிமுகங்கள் - அறிமுகங்கள் மேலோட்டமாக் இல்லாமல் பதிவரைப் பற்றியும் பதிவுகள் பற்றியும் விளக்கமான குறிப்புகள் - நீண்டதொரு பதிவு - தங்களின் கடமை உணர்ச்சி சிலிர்க்க வைக்கிறது. அத்தனையையும் சென்று பார்த்து பொறுமையாகப் படித்து இரசித்து மறுமொழிகள் அங்கேயே இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய விதம் புதுமை. இன்னும் நிறைய பதிவர் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்... நன்றி ராம்...

    ReplyDelete
  3. திரு.ரத்னவேல் ஐயா தனக்கு பிடித்த பல பகிர்வுகளை முகநூலில் பகிர்ந்து கொள்வதை பல தளங்களில் பார்த்திருக்கிறேன்... நண்பர் டான் அசோக் தளம் இன்று தான் தெரியும்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    எழுத தூண்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ஒவ்வொரு பதிவைப் பற்றிய விளக்கங்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. எல்லா அறிமுகங்களும் அசத்தல்...அழகான எழுத்து நடை...!

    ReplyDelete
  5. திரு ரத்ணவேல் அய்யா அவர்களை இணையம் வழி அறிவேன் என்றாலும், தர்ங்கள் அவர் பற்றிக் கூறிய செய்திகள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. சுஜாதாவின் கடிதம், சுஜாதாவின் கதையின் ஒரு பாத்திரத்திற்கு ரத்னணம் என்று பெயர். உண்மையில் மெய்சிலிர்க்கின்றேன் அய்யா. நன்றி

    ReplyDelete
  6. இன்று அறிமுகமானவர்கள் மூன்று பேர்தான் என்றாலும் மூன்று முத்துக்கள் என்றே சொல்ல வேண்டும்.
    திரு ரத்னவேல் ஐயா அவர்கள் எங்கு நல்லதைப் படித்தாலும் அதை தன் வலைத்தளத்தில் அந்தப் பதிவரின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்வார். நல்லவைகள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற அவரது கொள்கை மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று.

    மற்ற இருவரின் தளங்கள் புதிது. நிச்சயம் படிக்க வேண்டும்.

    வெறும் இணைப்பு மட்டும் கொடுத்துவிட்டு செல்லாமல் அவர்களுடனான உங்கள் உணர்வு பூர்வமான தொடர்புகளையும் சொன்னது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

    உங்களை பாதித்தவர்களை நினைவு கூர்ந்ததற்கு பாராட்டுக்கள். அவர்களை பெருமைபடுத்தியதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அறிமுகங்களும் பகிர்வுகளும் மிக அருமை, எழுதிய விதம் அசத்தல்.

    ReplyDelete
  8. நெகிழ்ந்து விட்டேன் ராம்குமார். I cannot control my tears. என்ன அருமையான நண்பர்களை, பிள்ளைகளை, மகள்களை பெற்றிருக்கிறேன் இந்த பதிவுலகிலும், முகநூலிலும். எனது திருமுக்குளம் பதிவு மூலம் திரு வெயிலான் திரு ராகவன் சாமுவேலை அறிமுகப்படுத்தினார். திரு வினோத் பாபு ராம்குமாரை, ராம்குமார் மூலம் வைரம் சிவகாசி - ஆஹா அருமை. சீனா சார் மாதிரி மாமனிதர்கள், எல்லாம் நாங்கள் செய்த புண்ணியம். நன்றி & வாழ்த்துகள் ராம்குமார், எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  9. நான் ஒன்னு சொல்லட்டுமா? ”எனக்கு இப்பொழுது உங்கள் மீது பொறாமை...” (எவ்ளோ நல்லா எழுதறீங்க)Super good அறிமுகங்கள்! :)

    ReplyDelete
  10. அனைத்து வலைப்பதிவர்களுமே அறிமுகங்கள் அல்லர்..அருமையானவர்கள்..எனக்குப் புதியவர்கள் அவ்வளவே....அவர்களின் பதிவினைக் குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம் அந்தப் பதிவுகளை உடனடியாக படிக்கும் ஆர்வத்தை அதிகரித்தது... படித்தும் விட்டேன் இன்று தான் முக நூல் அன்பர் ஒருவர் டான் அசோக் அவர்களின் அருமையான பதிவுகள் குறித்துக் கூறி படிக்கச் சொன்னார்..இங்கே வந்தால் அவரின் அறிமுகம்..நன்றி

    ReplyDelete
  11. இவர்கள் நீண்டகாலமாக எழுதி வரினும் எனக்கு புதியவர்கள்! அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. நீங்கள் அறிமுகம் செய்யும் விதமே மிகவும் அழகு. தெளிந்த நீரோடை போன்ற எழுத்து. உங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள்.....

    ரத்னவேல் ஐயாவின் பதிவுகள் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல ஏனோ அவர் முகப்புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.....

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. நல்ல அறிமுகங்கள்.....

    ரத்னவேல் ஐயாவின் பதிவுகள் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல ஏனோ அவர் முகப்புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.....

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்.....

    ரத்னவேல் ஐயாவின் பதிவுகள் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல ஏனோ அவர் முகப்புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.....

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. நன்றி நண்பர்களே.
    இனிமேல் வாரம் ஒரு பதிவு எழுதுகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது