07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 23, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (1)

பொதுவாக மரபுக்கவிதைகள் புனைபவர்கள், ‘‘வெண்பா எழுதலாம் வாங்க’’ என்ற எனது வலையை அறிந்திருக்கும் வாய்ப்புள்ளது. இவ்வலையின் தோற்றத்திற்குக் காரணம் என்னவென்றால் வெண்பா எழுதத்துடிப்போருக்கும் புதிதாக வெண்பா பயிலத்துடிப்போருக்கும் ஊக்குவிப்பதாகவும், வழிகாட்டியாகவும் அமையவே துவங்கப்பட்டதாகும். இவ்வலையில் சற்றேறக் குறைய நாற்பதிலிருந்து ஐம்பது வரையிலான பாட இடுகைகள் வழங்கப்பட்டு பாடத்தின் முடிவில் வெண்பாவிற்கான ஈற்றடிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பாடங்களைப் படித்துப் பயனுற்றவர்கள் வெகுசிலரே எனினும் எந்தவொரு தொய்வுமின்றி இன்றுவரை ‘வெண்பா எழுதலாம் வாங்க’ வலை தன்பணியை இனிதே வழங்கிவருகிறது.

இக்கட்டுரைக்கான நோக்கங்கள் இரண்டு. 1.வெண்பா எழுதலாம் வாங்க வலைக்குத் தன் பேராதரவை வழங்குவதோடு மட்டுமல்லாது வழங்கப்படுகின்ற ஈற்றடிகளுக்கு புதியபுதிய நோக்கிலும், போக்கிலும் பாக்கள் வடித்து அவ்வலையை மெருகேற்றிவரும் வாசக, மாணவ, மாணவியர்க்கு இக்கட்டுரையின் மூலம் நன்றிநவில்வது. 2.இவ்வெண்பா எழுதலாம் வாங்க வலையைப்பற்றி வலைச்சரத்தில் எழுதுவதால் வலைச்சரத்தை வாசிக்கும் நேயர்கள் ஒருசிலரையேனும் வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு இழுத்து வெண்பாப்பாட வைப்பது. ஆக இவ்விரு நோக்கங்களும் தன்னலம்போல் தோன்றினும் அஃதில் உண்மையில்லை. கவிதைகள் எழுதுகின்ற யாவரும் யாப்பறிந்து எழுதவேண்டும் என்னும் எண்ண மிகுதியாலும் வெண்பா எழுதலாம் வாங்க வலையைப்பற்றி இக்கட்டுரை புனையத்துவங்குகிறேன்.

பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன. தளைகளைப்பற்றி அறிந்து கொண்டால் மரபுக்கவிதைகள் பாடிவிடலாம் என்ற எண்ணமும் பலரிடத்திலும் பரவலாக உள்ளது. அப்படிக்கருதுவதும் தவறேயாகும். ஐயமிருப்பின் எமது வலையின் ஈற்றடிக்குப் பாப்புனையும் அன்பர்களை வினவுவீர்களே யாயின் புரியும்.

சரி. இனி வெண்பா எழுதலாம் வாங்க வலையில் ஈற்றடிகளுக்குப் பாப்புனைந்த, புனைந்துகொண்டிருக்கிற அன்பர்களையுன் நண்பர்களையும் பற்றிய உரைப்பதோடு அவர்கள் வழங்கியுள்ள அளப்பரிய பாக்கள் சிலவற்றையும் கண்டுகளித்து அவர்களின் ஆற்றலை வியக்கவிருக்கிறோம்.

1. உமா!

(மகளிர் முதலில் என்பதாலும், இவ்வொரேயொரு பெண்பாற்கவிஞரே நம்வலையின் ஈற்றடிகளுக்குப் பாப்புனைந்து வருவதாலும் இவரைப்பற்றி முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

சில கவிதைகள் என்ற பெயரிலான வலையமைத்து, புதுக்கவிதைகளும் மரபுக்கவிதைகளும் ஒருசேரக்கற்று சிறப்புற எழுதும் ஆற்றல் படைத்தவர். முதல்முதலாக இவர் வெண்பா எழுதலாம் வலைக்கு அதன் 37வது பாடத்தின்போது புதிய மாணவியாக ‘வணக்கம் திரு அமுதா. வெண்பா என்ற வார்த்தையே என்க்கு மகிழ்ச்சியை தரக்கூடியது.இன்று முதல் உங்கள் மாணவியாக கற்க போகிறேன்.’ என அறிமுகம் செய்துகொண்டு பாடங்களை நன்கு ஆய்ந்துபடித்துப்பாக்கள் புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றார். இனி இவரது கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்.

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.

இதுவே இவரது முதல் வெண்பாவாகும். பால், பால் எனப்பல இடங்களில் வரச்செய்து சொற்பொருட்பின்வரு நிலையணியை எத்துணை அழகாக அமைத்திருக்கிறார் பாருங்கள்! முதலில் தயங்கத்தோடும் நடுக்கத்தோடும் வெண்பா எழுத்தத்துவங்கிய இவர் சொல்லிலக்கணம்1 என்ற தலைப்பிலான இடுகையில் என்னை வியக்கவைக்கும் அளவில் கவிதைபாடும் ஆற்றல் கைவரப்பெற்று சிறந்து விளங்குகிறார். அப்படிஎன்ன கவிதைபாடும் ஆற்றலைப்பெற்றுவிட்டார் என்கிறீரா? கீழ்வரும் கவிதை உரையாடலைப் பார்க்கவும்.

கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நிலமும்பா ழாகக் கறைப்படிந்த
மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
வான மிருக்கே வரண்டு!

எனக்குறிப்பிட்டு சிங்கப்பூரில் பெய்துவரும் மழையைச் சென்னைக்கும் கொஞ்சம் அனுப்பக்கூடாதா என வினவியிருந்தார். ஈழச்சிக்களில் இந்திய அரசின் நடவடிக்கையால் இந்திய அரசின்மேல் வெகுளியுற்றிருந்த நான்

அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
வடவர் அதனால் மழைவாரா தங்கே!
கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!


என்றேன். இக்கவிதைக்குப் பதில்கூறும் முகமாக எனது பாவரிகளையே முதிலிருவரிகளாக்கொண்டு என்னை மடகிய அப்பாங்கினைப்பாருங்களேன்.

ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
மற்றவர் துன்புறலா மோ‘புவியில் நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை’
என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!

என்னை மடக்கினார் எனக்கொள்ளாது கவிதைக்குக் கவிதையாற் பதில் அளிக்கும் அவ்வாற்றலைக்கண்டு சுவைத்தேன், வியந்தேன். வாழ்க அவர். வளர்க அவர் புகழ்.

2. இரா. வசந்தகுமார்.

புதுக்கவிதை, மரபுக்கவிதை, சிறுகதை, நெடுங்கதை மற்றும் கட்டுரைகள் படைப்பதில் ஆற்றல் படைத்த பண்முக வலைஞர் எனலாம். இவர் முதல்முதலாக வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு அதன் 20வது பாடத்தில் இருந்து பயிலத்தொடங்கி அழகிய பல வெண்பாக்களை யாத்திருகிறார். ஒரு கட்டத்தில் இன்பகவிதைகள் எழுதி, என்னால் அன்போடு இன்பகவி என்றழைக்கப்படுபவர். அவரது சில வெண்பாக்களைக் காண்போம்.

எதையெழுத யென்றெண்ணி ஏதும்தோன் றாமல்
கதையாவது வந்துவிழும தற்குமுன் - எதையாவது
நாலுவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!

எனத்தொடங்கிய நண்பர் இரா.வசந்தகுமார் அவர்கள் வெகு விரைவிலேயே ஆசுகவி படைக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுவிளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. ‘தீயிற் கொடியதோ தீ’ என்ற ஈன்றடிக்கு வசந்த் எழுதிய வெண்பா இது.

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"


எனப்பயனிந்து, மிக ஆழமாகவும் எளிமையாகவும் மாறிமாறி எழுதும் ஆற்றலைக் கைவரப்பெற்றவர் வசந்த் ஆவார். எளிமைக்கு ஓர் காட்டைப்பார்ப்போம்.

இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
நாடு மணக்குமா சொல்.

3. திகழ்மிளிர்.

தமிழை இலக்கண ஆழத்தோடு நன்கறிந்த அறியத்துடிக்கிற பாவாணரது எழுத்துக்களை அவ்வப்போது தன் வலையில் இடுகைகளாய் இட்டு வருகிற, தமிழின் கலைச்சொற்களைப் பரப்பும் மனம்படைத்த அருமை நண்பர் திகழ்மிளிர் ஆவார். 31வது பாடத்தின்போது அறிமுகமானார்.

மரபுக் கவிதை புதுக்கவி தையென
அருவியாய் கொட்டும் அழகுத் தமிழே
உன்னழகுக் காண்டுள் ளமுரைத் திடுமே
மனம்மயக்கும் மாயத் தமிழ்.


எனத்தொடங்கி அழகிய பல வெண்பாக்களைப் படைத்திருக்கிறார்.

சுட்டெரிக்கும் சூரியனைக் காட்டிலும் ,தினமிங்கே
வாட்டி வதக்கும் வறுமையைக் காட்டிலும்
நல்லிதயம் அற்றோரின் அம்பாய்த் துளைத்திடும்
சொல்லே மிகவும் சுடும்.

உடையில் சடையில் நடையில் இடையில்
எடையிலேசிந் தித்திடும் கண்மணியே ! உள்ளத்(து)
அழுக்கை அகற்றிடு ! அப்படியே கொஞ்சம்
எழுத்துப் பிழைநீக் கியன்று !

4.இராஜகுரு.

நெடுநாட்களாக எனது அருமை நண்பராகத்திகழும் இவர், இராஜகுரு என்ற பெயரிலான வலையை வடிவமைத்து மரபுப்பாக்கள் மட்டுமே படைத்தும் மரபுப்பாக்கள் எழுதுவோரை ஆதரித்தும் வருகிறார். கவிஞராக மட்டுமே பலருக்கும் அறியப்படுகிற இவர் சுறுங்கச்சொல்வதிலும் சுவைபடச் சொல்வதிலும் கைதேர்ந்தவர். வெண்பா எழுதலாம் வாங்க வலையில் என்னுடன் இணைந்து பாடங்களை நடத்தியும் ஈற்றடிகளுக்குப் பாக்கள் புனைந்தும் வருபவர். இவரது சில பாக்கள்.

என்னோடு கூட்டணியமைத்துப் பாடங்களை நடாத்திவரும் இவர் என்னிடம் உன் கூட்டணி யாருடன் கூறு என வினவும் இலாவகத்தைப் பாருங்கள்…

கழகங்கள் செய்யும் கலகத்தால் இங்கும்
குழப்பங்கள் வேண்டாம் தமிழ்க்கொஞ்சும் பாவலர்நாம்
நாட்டர சைமறந்து பாட்டரசு செய்வோம்உன்
கூட்டணி யாருடன் கூறு


நங்கைக்கு நாணமென்றால் நாயகன் முன்தானே
பொங்குமொரு காதலை இன்னும்கா ணதவன்நான்
செங்கவியில் நங்கையைப் பாடினாலும் பாடறியேன்
நங்கையர் நாண நயம்.

பாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று
காலாடை யேயணியும் பாவை அறிவாளோ?
கச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்
அச்சமடம் நாணம் பயிற்பு!

எனப்பல சீரிய கருத்துக்களைப் பாவில் வழங்கும் ஆற்றல்வல்லார் ஆவார்.

5. மகேஷ்.

சிங்கைப்பதிவராகிய இவர் கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுவதில் பேராற்றல் படைத்தவர் ஆவார். இவரது பல பயணக்கட்டுரைகளைப் படித்து வியந்திருக்கிறேன். குறிப்பாக நிழற்படமெடுப்பதில் வல்லவராகிய இவர் வெண்பா எழுதலாம் வாங்க வலையில் பல வெண்பாக்கள் எழுதிச் சிறப்பித்துள்ளார் அவற்றுள் சில…

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !

கோபமெனும் பெருந்தீ இறையெனக் களித்த
சாபமென் றுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்களால் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !

மண்ணை இழந்து மக்களை இழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்!


வளர்வேன்...
அகரம் அமுதா

26 comments:

  1. அடடா... மிக்க நன்றி அமுதா...மிக்க நன்றி

    ராஜகுரு, உமா, திகழ்மிளிர் வரிசைல போய் என்னையும் வெச்சீங்களே... அவங்க அளவுக்கு ஆளுமையெல்லாம் எனக்குக் கிடையாதே....

    அப்பறம் என் வலைதளம் அந்த சுட்டியில் இருப்பது அல்ல. அது சோதனைகளுக்க்காக வைத்திருக்கிறேன். சரியான சுட்டி : http://thuklak.blogspot.com

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....

    ReplyDelete
  3. தமிழரசி said...

    வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....

    ஆம் அமுதா

    ReplyDelete
  4. மரபுக் கவிதை புதுக்கவி தையென
    அருவியாய் கொட்டும் அழகுத் தமிழே
    உன்னழகுக் காண்டுள் ளமுரைத் திடுமே
    மனம்மயக்கும் மாயத் தமிழ்.


    அருமை

    ReplyDelete
  5. தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
    எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
    என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
    வெண்பா வரைந்தேன் விரைந்து.


    நற்றமிழ் பார்த்தே வெகு நாட்களாயிற்று
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. நான் கண்டிப்பா வெண்பா வரைக்கும் போனதில்லை.

    இனிமே கத்துக்க ஆசையா இருக்கு உங்க பதிவை படிச்ச பின்!

    நல்ல பதிவுங்க..மிக்க நன்றி.

    ராஜகுரு, உமா, திகழ்மிளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
    வெடித்து நிலமும்பா ழாகக் கறைப்படிந்த
    மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
    வான மிருக்கே வரண்டு!


    சொல்ல வார்த்தையில்லை

    ReplyDelete
  8. ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகேஷ்
    இரா. வசந்தகுமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் அமுதா...

    ReplyDelete
  10. அகரம் அமுதா அவர்களே
    தங்களின் அன்பிற்கு
    நன்றிங்க‌

    ReplyDelete
  11. /
    தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
    எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
    என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
    வெண்பா வரைந்தேன் விரைந்து.
    /

    இப்பொழுது தான் வாசிக்கின்றேன்
    இந்த வெண்பாவை
    அற்புதமான‌ வரிகள்

    ReplyDelete
  12. /////Mahesh said...

    ராஜகுரு, உமா, திகழ்மிளிர் வரிசைல போய் என்னையும் வெச்சீங்களே... அவங்க அளவுக்கு ஆளுமையெல்லாம் எனக்குக் கிடையாதே.... /////



    இதற்குப்பெயர்தான் தன்னடக்கமோ? ஹா... ஹா... ஹா...



    /////அப்பறம் என் வலைதளம் அந்த சுட்டியில் இருப்பது அல்ல. அது சோதனைகளுக்க்காக வைத்திருக்கிறேன். சரியான சுட்டி : http://thuklak.blogspot.com//////

    எனது வலையோடு இணைப்புக்கொடுத்துவிடுகிறேன். அப்பொழுதுதான் மறக்காமல் இருப்பேன்.


    ////அடடா... மிக்க நன்றி அமுதா...மிக்க நன்றி////


    நன்றிகள் மட்டுந்தானா? ட்ரீட்டெல்லாம் ஏதும் இல்லையா?

    ((((((அதுசரி நண்பர்களுக்குள் நன்றிகள் எல்லாம் எதற்குங்க?))))))

    ReplyDelete
  13. /

    "கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
    நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
    கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
    தீஇல் கொடி!...அதோ தீ...!"

    /
    அனல்பறக்கும் வரிகள்
    நண்பர் இரா.வசந்தகுமார் அவர்களின் எழுத்து
    நடை என்றுமே என்னைக் கவர்ந்தது

    ReplyDelete
  14. /மண்ணை இழந்து மக்களை இழந்து
    தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
    ஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ
    ஈழத் தமிழர் இடர்!
    /

    சொல்ல வார்த்தை இல்லை

    ReplyDelete
  15. /////தமிழரசி said...
    வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க..../////



    நீங்க இப்படிச் சொல்லலாமா? இப்பொழுதுதான் உங்கள் எழுத்தோசை வலையை முதல்முறையாகப் பார்த்தேன். தங்கள் எழுத்தோட்டமும் சிந்தனை ஓட்டமும் சுட்டுப்போட்டாலும் எனக்கு வராது. ஒவ்வொருவருள்ளும் ஒரு திறமை இருக்கிறது. நானும் உங்களைக் கண்டு வியக்கத்தான் செய்கிறேன். வாழ்க. மென்மேலும் ஆற்றல் பெற்று வளர்க.

    ReplyDelete
  16. வண்ணத்தமிழில்
    வார்த்தை விளையாட்டு
    விளையாடும்
    த‌மிழ‌ர‌சி அவ‌ர்க‌ளும்
    ச‌க்தி அவ‌ர்க‌ளும்
    இந்த‌ வெண்பாவில்
    இணைந்திட‌ வேண்டுகின்றேன்

    அன்புட‌ன்
    திக‌ழ்

    ReplyDelete
  17. sakthi said...
    //////sakthi said...

    தமிழரசி said...
    வாழ்த்துக்கள் அமுதா...இங்க வலைச்சரம் வந்தோம் உங்க பதிவை பார்த்து படித்ததும் ஐய்யோ நானெல்லாம் வாழ்த்து சொல்லக் கூட தகுதியான்னு தெரியலைங்க....

    ஆம் அமுதா //////

    அய்யய்யோ! சக்தி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ எனக்குத்தெரிந்ததை எழுதுகிறேன் அவ்வளவே!

    மேலும், தங்கள் வலைக்குச் சென்று பார்வையிட்டேன். "வீட்டுபுறா" -என்ற தலைப்பில் உள்ள வலையைப் பார்வையிட்டேன். என்னை மிகவும் கவந்துள்ளது. சிறு வேண்டுகோள் -

    தங்கள் வலையின் தலைப்பாகிய "வீட்டுபுறா" -வில் ஒற்றுமிகவேண்டும். அதாவது "வீட்டுப்புறா" என்றிருக்கவேண்டும். திருத்த வேண்டுகிறேன். (தவறுரைத்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.)

    ReplyDelete
  18. //////ரங்கன் said...
    நான் கண்டிப்பா வெண்பா வரைக்கும் போனதில்லை.

    இனிமே கத்துக்க ஆசையா இருக்கு உங்க பதிவை படிச்ச பின்!

    நல்ல பதிவுங்க..மிக்க நன்றி./////



    மிக்க நன்றிங்க இரங்கன் அவர்களே! ஆசையிருப்பின் தள்ளிப்போட்டுவிட வேண்டா. உடனே, "வெண்பா எழுதலாம் வாங்க" வலைப்பக்கம் வரவும். புதியவர்களுக்காக அவ்வலையின் கதவுகள் எப்பொழுதுமே திறந்திருக்கும். நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. /////sakthi said...
    ராஜகுரு, உமா, திகழ்மிளிர் மகேஷ்
    இரா. வசந்தகுமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்//////



    எனது மாணாக்கர்கள் சார்பாக அவர்களுக்குத் தாங்கள் உரைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி உரைக்கிறேன் ஏற்கவேண்டுக! சக்தி அவர்களே!

    ReplyDelete
  20. ////தமிழரசி said...
    உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் அமுதா.../////



    மீண்டும் மிக்க நன்றிகள் தமிழரசி அவர்களே!

    ReplyDelete
  21. /////திகழ்மிளிர் said...
    அகரம் அமுதா அவர்களே
    தங்களின் அன்பிற்கு
    நன்றிங்க‌/////



    தாய்காட்டும் அன்பிற்கு சேய்களாகிய நாம் நன்றிகள் சொல்லியிருக்கிறோமா? இல்லையல்லவா? அதுபோல உற்ற நண்பருக்கு உரிமையோடு அன்பு காட்டும் எனக்குத்தாங்கள் நன்றிகள் சொல்லலாமா?

    ReplyDelete
  22. //////திகழ்மிளிர் said...
    வண்ணத்தமிழில்
    வார்த்தை விளையாட்டு
    விளையாடும்
    த‌மிழ‌ர‌சி அவ‌ர்க‌ளும்
    ச‌க்தி அவ‌ர்க‌ளும்
    இந்த‌ வெண்பாவில்
    இணைந்திட‌ வேண்டுகின்றேன்

    அன்புட‌ன்
    திக‌ழ்/////



    திகழ் அவர்களின் இக்கருத்தை அன்போடு வழிமொழிகிறேன். சக்தி மற்றும் தமிழரசி இருவரும் வெண்பா எழுத வருவீராக. இவர்களை மட்டுமல்ல, இவ்வலையைப் பார்க்கும் அனைவரையும் வெண்பா எழுத வாங்க என அன்போடு அழைக்கிறேன். வருக! ஆதரவு தருக.

    ReplyDelete
  23. அன்பு அகரம் அமுதா...

    பாராட்டியதற்கு நன்றிகள். :)

    /*பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன.
    */

    புதுக்கவிதை எழுதுவது எளிது என்று நினைக்கிறீர்கள் போல! அதிலும் நெளிவு சுளிவுகள் உள்ளன. நாற்கர நெடுஞ்சாலை போல் நேராகப் போவதில்லை. தனி மடலிடுகிறேன். :)

    ReplyDelete
  24. /////// இரா. வசந்த குமார். said...
    அன்பு அகரம் அமுதா...

    பாராட்டியதற்கு நன்றிகள். :)

    /*பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன.
    */

    புதுக்கவிதை எழுதுவது எளிது என்று நினைக்கிறீர்கள் போல! அதிலும் நெளிவு சுளிவுகள் உள்ளன. நாற்கர நெடுஞ்சாலை போல் நேராகப் போவதில்லை. தனி மடலிடுகிறேன். :)//////

    வணக்கங்கள் வசந்த். புதுக்கவிதைகளை நான் குறை கூறவில்லை. தவறாகப்புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். நானும் துவக்கக் காலத்தில் புதுக்கவிதைகள் எழுதிய பிறகுதான் மரபுக்கவிதைகளுக்குத் தாவினேன். ஆதலாம் புதுக்கவிதைகளின் நெளிவுசிளிவுகளை நானுமறிவேன். நான் கூறவந்தது புதுக்கவிதை எழுத ஓரளவு கற்பனை வளம் இருந்தாலே போதும். ஆனால் மரபுக்கவிதை எழுத கற்பனை + சொல்வளம் ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற வேண்டும். இவற்றில் எதுஒன்று இல்லாது போனாலும் பா உயிர்ப்போடிருக்காது என்பதையே. வெளிப்படையாகச் சொல்லவேண்டாம் எனத்தவிர்த்தேன் அவ்வளவே. நன்றி

    ReplyDelete
  25. திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்டார். என்றாலும் ஆசிரியர் தன்னால் இப்படி பாராட்டப் பெறுவது மிக மிக..... இனிமையானதே.
    நன்றிகள் கோடி.

    என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  26. உமா said...
    ////திரு.அமுதா என்னை நாணச் செய்துவிட்டார். என்றாலும் ஆசிரியர் தன்னால் இப்படி பாராட்டப் பெறுவது மிக மிக..... இனிமையானதே.
    நன்றிகள் கோடி.

    என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.////


    மிக்க நன்றிகள் உமா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது