07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 23, 2009

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!


தமிழுக்கு வணக்கம்!

மெல்லிய மலர்களின் இதழ் தொடுத்த பூச்சரமாம் வலைச்சரத்தில் என்னையும் அழைத்து சரம் தொடுக்க, வலைச்சரத்தில் வளைய வந்து வகைப்படுத்த ஆசிரியப்பணி என்னும் அரும்பணி தந்த பேரன்புமிக்க பெருமை சான்ற, அருமை ஐயா வலைச்சரம் சீனா அவர்களுக்கும், பதிவுலகத்தின் பட்டாம் பூச்சிகளாக மிளிர்ந்து கொண்டிருக்கும் வலையுலகத்தின் வற்றாத நதிகளாம் பதிவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும், வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

வலைச்சரத்திற்கு எனது தமிழ் மாலை

வலையில் விளைந்த வித்து

வலைச்சரம் பதிவர்களின் சொத்து

வலைப்பதிவர்கள் நனைத்த ஈரம்

வகைப் படுத்த முடியுமோ அதன் தூரம்

முளைகொட்டி அரும்பிய தமிழ் வாசம்

முச்சந்தியாம் வலைச்சரம் வீசும்

தெள்ளிய தமிழ் மண வாசம்

மெல்லிய தென்றல் இங்கு வீசும்

அரும்பிய அழகு மலர் மொட்டு -அது

விரும்பிய பதிவர்களின் மெட்டு

இதழ் விரிக்க இசைந்து தொடுத்த சரம்

இன்பத் தமிழ் தேன் பருக வரம்

தமிழ் மக்கள் தரணி எங்கும் கோடி

தங்கத் தமிழ் வலைச்சரம் சூடி

புகழ் மாலை சூட்டுவார் தாய்த்தமிழுக்கு

புகட்டுவார் செந்தமிழ் இப்புவியோர்க்கு...!

என் கடன் பணி செய்து கிடப்பதே! என்று தனது அழகிய தமிழ் மலர்களை வலைச்சரத்தில் அழகாகக் கோர்த்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் சீனா ஐயாவிற்கு முதற்க்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த முக்கூடல் நகராம் மதுரையில் இருந்து தெ(தே)ன் மதுரத் தமிழ் மணம் வீச செய்வது ஒன்றும் வியப்பல்ல. அவருடைய தமிழ்ப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

வலைச்சர ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருக்கும் கயல்விழி முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா மற்றும் சிந்தாநதி ஆகியோருக்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

எனக்கு முன்னர் பொறுப்பேற்று நேர நெருக்கடியிலும் அழகாக ஆசிரியப் பணியாற்றி வலைச்சரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கும் அன்பு உடன் பிறப்பு நாம(மாந)க்கல் சிபி அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது. அதற்கும் முன் வலைச்சரத்தில் மலர் தொடுத்த உறவுகளும் சிறப்பாகவே தொடுத்திருந்தார்கள் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எனது எண்ணங்களை தமிழில் எழுதவேண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற தாகம் எப்போதும் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. 1999-ல் சிங்கை நூலகத்தில் தமிழில் ஒலி வழி தட்டச்சு கற்றுக்கொண்டேன். வலைப்பூக்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அதைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும், அதற்கான நேரம் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். வலையில் தேடியே 2007 நவம்பரில் வலைப்பக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். நான் முதலில் தேன்கூடு திரட்டியிலும், பின்னர் தமிழ்மணம், திரட்டி, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைத்துக் கொண்டேன்.

எனது தேடலில் வலைச்ச்சரமும் கிட்டியதில் ஒன்றும் ஐயமில்லை. வலைப்பக்கம் தொடங்கிய நாள் முதலே வலைச்சரத்தைப் பற்றி அறிந்திருந்தேன். அவ்வப்போது வந்து அதன் வா()சம் நுகர்ந்தும் சென்றேன்.

நான் பதிவுலகில் நுழையும் போது, திரட்டிகள் கிடைப்பதற்கு முன்பு எனக்கு கிடைத்த வலைப் பக்கங்கள், வினையூக்கி, ஸ்னாப் ஜட்சுமென்ட், பிகேபி பேட்டிகள், பிரகாஷ் குரோனிகள், சுப்ரா தமிழ்ப்பக்கம்,குப்பைத் தொட்டி, தமிழ் சசி இன்னும் பல. இன்று வரை இந்த பக்கங்களும் தரமாக செயலாற்றி வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

வலைச்சரத்தில் எனது வலைப்பக்கத்தை திருமதி துளசி கோபால் அவர்கள் அறிமுகப் படுத்தியிருந்தார்கள். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் முதன்முதலாக சந்தித்த பதிவர் திரு கோவி கண்ணன் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்கவேண்டும். தமிழ் ஆர்வலர் திரைப்பட இயக்குனர் சீமானின் உரை பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதாகத் தெரிவித்ததிருந்ததைப் பார்த்துவிட்டு, தானும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக பின்னர் தொலையாடிய போது தெரிவித்தார். அதன் பிறகு எதேச்சையாக சிங்கை குட்டி இந்தியாவில் சந்தித்தேன். பிறகு பதிவர் ஜெகதீசனும் வந்து கலந்து கொண்டு பதிவர் சந்திப்பாக்கிக் கொண்டோம்.

தன் வரலாறு

நான் யார்?
"ஆறு தன் வரலாறு கூறுதலில் இருந்து அறிவாளி தன் வரலாறு கூறுதல் வரை" என்று வேடிக்கையாக நான் கூறுவதுண்டு. அந்த வரிசையில் நானுமா?! கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். தன் வரலாறு கூறுகிற அளவுக்கு எனது வரலாறு பெரிய புத்தகம் அல்ல. இது சிறிய புத்தகம் தான். அதிலும் திறந்த புத்தகம் தான். இருப்பினும், தன்வரலாறு கூறும் கடமையை கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் சுருங்கக் கூறி விளங்க வைக்க முயற்சிக்கிறேன்.

நான் பிறந்தது, சோழர்கள் ஆண்ட(ஆம். ஆயிரம் காலத்து பயிர்தான் நான்) தஞ்சை தரணியில், காவிரி பாசனப் பகுதியான கடை மடைப் பகுதி, கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணைக் கால்வாய் இறுதியாக வந்து எட்டிப் பார்க்கும்(காவிரி தண்ணீருக்கே எங்க ஊருக்கு வர பயம்) வீரம் வெளஞ்ச மண்ணு அத்திவெட்டி(இப்போதெல்லாம் நெல்லு வெளையிறதில்லை, காவிரித் தண்ணீர் தான் கானல் நீராகிக் கொண்டிருக்கிறதே). பாட்டுக் கோட்டையாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பிறந்த கிராமத்துக்கு பக்கத்து கிராமம்.

பள்ளிப் படிப்பையே நான்கு இடங்களில் படித்தேன். அதுவே பெரிய அனுபவம். எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அப்போதே இருந்தது. அது என் தந்தையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுவும் ஒரு முறைசாராக் கல்விதான். வாசிப்பு என்பது அவரைப் பார்த்து அவரிடம் கற்றுகொண்டதுதான். அவருடைய இலக்கிய ஈடுபாடும் வாசிப்பு பழக்கமும் தமிழ் மீது பற்று கொள்ள வைத்தது. அதற்காக பெரிய வாசிப்பாளன் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. பலதரப்பட்ட சிந்தனைகளையும் வாசிக்கும் பக்குவமும், உவப்பானவற்றை அடையாளப் படுத்தி உள்வாங்கிக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது பதிவுகளைப் படித்த சிலர், என்னிடம் கருத்து தெரிவிக்கும் போது நான் சீரியஸ் பதிவர் என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் இல்லை, மொக்கையிலும் நகைச்சுவையை பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

பட்டுக்கோட்டையில் படிக்கும் போது, அங்கு நான் மற்றும் இரு நண்பர்கள் இணைந்து பங்காற்றி "இளைய தென்றல்" என்னும் கையெழுத்து மாதமிருமுறை நடத்தினோம். (வார இதழாக ஆரம்பித்து பின்னர் பனம்பழத்தை சுமந்த சிட்டுக்குருவிகளாய்த் தவித்து, மாதமிருமுறையாக மாற்றிக்கொண்டோம்) நகைச்சுவை,
கவிதை,சிறுகதை,விமர்சனம்,தொடர்கதை,கருத்துப்படம், துணுக்குகள், நாட்டு நடப்புகள் இன்னபிற பிற செய்திகளை உள்ளடக்கி இருப்போம். அதற்கு நல்ல வரவேற்பும் ஊக்குவிப்பும் இருந்தது. அப்போது இளைய தென்றல் என்னும் நற்பணி இயக்கத்தில் இருந்ததால் இதைச் செய்ய எங்களுக்குக் கொஞ்சம் எளிதாக இருந்தது. அந்த காலங்களில்! பட்டுக்கோட்டை காந்தி பூங்காவும், அண்ணா நூலகமும் களமும் அவையுமாய் களிப்பூட்டியது.

இவை தவிர்த்து, அத்திவெட்டியில் நடைபெறும் திருமணங்கள் என்றாலே கவியரங்கங்களைப் போல் தான் இருக்கும். இங்கு நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் தமிழறிஞர்களை அழைத்து தமிழ்த் திருமணமாக நடத்துவது வழக்கம். இதனால் பிரலமான பேச்சாளர்கள்,இலக்கிய வாதிகள், கவிஞர்களின் பேச்சுக்களை செவிமடுக்கும் வாய்ப்பு இளமையிலேயே கிடைத்தது. அப்ப நீங்கள் வயதானவரா? என்று கேட்டால், ஆம் வயதானவர்தான். முப்பத்தைந்து வயதானவர்.

"திரைகடலோடியும் திரவியம் தேடு", இதுபோல பல பழமொழிகளை சாக்கு போக்காக சொல்லித்தான் நாமெல்லாம் தப்பித்து பிழைக்கிறோம். அந்தவகையில் நானும் (அந்த குட்டையில் ஊறிய மட்டைதான்) 1996 -நவம்பரில் இருந்து சிங்கப்பூரில் வாசம் செய்கிறேன். (சென்னை வாசமும் செய்திருக்கிறேன்) சிங்கையில், செஞ்சிலுவைச் சங்கத்தில் பகுதி நேர தன்னார்வ உறுப்பினராக பணியாற்றியிருக்கிறேன். தற்போது சிங்கையில் ஒரு நிறுவனத்தில் மின்னணுவியல் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நடைபெறும் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
கவிஞன்
உருவாக்கப்படுவதில்லை!
காரணம்....
அவன்
களிமண் பொம்மையில்லை!

கவிஞன்
பிறப்பதுமில்லை!
ஏனெனில்,
எந்தக் கருப்பையும்
அவனை
அசுத்தப்படுத்திவிட முடியாது!

அவன்
தோன்றுகிறான்!
தன்னிலிருந்து இன்னொன்றாய்
தானே தோன்றுகிறான்!

என்ற வைர வரிகளை பலமாக நம்புகிறேன். கண்ணீரால் கரைந்து போகும் கவிதைகள் எத்தனை ஆயிரம்? எழுதாத வரிகளைக் கொண்ட உணர்வுகளும், ஏக்கங்களும், ஆனந்தமும், அன்பும் கூட கவிதை என்பதால் ஒவ்வொரு மனிதனுள்ளும் கவிதை என்னும் காலச்ச(க்க)ரம் இருக்கிறது. அது அவ்வப்போது இயல்பாக வெளிப்படுகிறது. வரி பிடிக்க வக்கணையாக அமர்ந்து எழுதுவது உணர்வுகளைத் தேடிப்பிடித்து வரிக்குள் அமிழ்த்துவது போன்ற செயற்கைத் தன்மையைத் தான் கொடுக்கும் என்று நம்புகிறேன். பொறியில் ஏற்படும் சிந்தனை கருவாகி, பின் உருவாகி, வலியோடு பிரசவித்து வெளிப்படும் கவிதைகள் உணர்வுள்ள உயிருடன் என்றும் வாழும்.

நான் இப்படியும் எழுதிப் பார்த்தேன்!

வாட்? -ன்னு கேக்குறீங்களா?
பொறுங்கள், கீழே படியுங்கள்!

ஒரே வரியில் கவிதை தீட்டினேன்
அதற்கு வாட் என்று தலைப்பிட்டேன் -ஆம்
மதிப்பு கூட்டப்பட்ட வரி(VAT - Value Added Tax)

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இன்னும் தமிழை வாசிப்பவனாகவும், நேசிப்பவனாகவும் சுவாசிப்பவனாகவுமே என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
இதுதான் தமிழாய்ந்த பெரியவர்களிடம் இருந்து தப்பிக்க வழி.கவிதைகளின் உணர்வலைகளை உணர்ந்து பார்ப்பதில் விருப்பம் உண்டு. நான் எழுதிய படைப்புகளை திண்ணை, கீற்று, வார்ப்பு,சிபி தமிழ், முத்துக்கமலம், பதிவுகள், எழில்நிலா போன்ற இணைய இதழ்களில் வாசிக்கலாம்.

அத்திவெட்டி அலசல் என்றொரு வலைப்பக்கத்தைத் தொடங்கி, அத்தி (அத்து மீறி) வெட்டியாக அலசிக்கொண்டிருக்கிறேன். உள்ளக்கிடங்கையில் எழும் உணர்வுகளை ஒப்பிக்காமல் கொட்டிவைத்திருக்கிறேன். அதில் அள்ளிக் கொடுக்க வேண்டியதில்லை சிலவற்றை கிள்ளியாவது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். (நான் கஞ்சன் இல்லை!)
நான் புனையாத உணர்வுகளை ஜோதிபாரதியின் கவிதைகள் என்ற பக்கத்தில் இட்டு நிரப்பி இருக்கிறேன்.

என்னுடைய இடுகைகள் சிலவற்றை அறிமுகப் படுத்துகிறேன். அவைகள் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லும் என்று நம்புகிறேன். இடம்,பொருள்,ஏவல் தெரியும். நான் கொஞ்சம் பதறிப் போய் காரம் சாரமாக எழுதிய பதிவுகளை வலைச்சரத்திற்கு பதராகக் கருதி சேர்க்கவில்லை. வலைச்சரம், பூச்சரம் அதில் மென்மையானவற்றை மட்டுமே தொடுப்பேன் என்று புரிந்துணர்வோடு உறுதி கூறுகிறேன். அவைகள் மென்மையனவையா? மேன்மையானவையா? இரண்டுமா? அல்லது இரண்டும் இல்லையா என்று அன்பிற்கினிய வலையுலகின் வற்றாத நதிகளாகிய பதிவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

) ஆடிப்பெருக்கல்ல ஆனந்தப்பட...!

இரவெல்லாம் மழை -ஆம்
இடியும் கூட

இரக்கம் இல்லை இந்த வானுக்கு
உறக்கமில்லை எனக்கு
தொடர்ந்து வாசிக்க...


) தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!

வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து
தொடர்ந்து வாசிக்க...


) ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்

ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் அவர்கள் தன்னிச்சையாக சொந்த முயற்சியில் முன்னெடுத்துச் செல்லும் அளவில் தான் தற்போது இருக்கிறது. உலக அளவில் எந்த நாட்டிலிருந்தும் அதிகாரப்பூர்வ ஆதரவோ உதவியோ இன்றி சிங்கள இனவெறியை எதிர்த்து ஈழத் தமிழ் மக்கள் போராடிவருகிறார்கள்.
தொடர்ந்து வாசிக்க...


) சிங்கப்பூர் - ஜுரோங் தீவு

சிங்கை ஈன்றெடுத்தக் குழந்தை
சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை

மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்
தொடர்ந்து வாசிக்க...


)எங்க ஊரு பொங்கல்

போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க

இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு
தொடர்ந்து வாசிக்க...


)பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்

விடிவெள்ளி தெரிகிறது
வந்து பார்

உன் நிலத்தின் பொழியை
நீயே அளந்து கொள்வாய்
தொடர்ந்து வாசிக்க...


) நிற்காமல் நின்றுகொண்டு...

பள்ளி விட்டதும்
எங்கும் நிற்காமல்
வீட்டுக்கு வந்துவிடு
அம்மா சொன்னது
மனதில் ஒலித்தது
காத்திருந்தேன் பேருந்துக்காக
தொடர்ந்து வாசிக்க...

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உங்களையெல்லாம் சோதிப்பதற்காக இந்த சோதிபாரதி(எனக்கு முதலில் சூட்டிய பெயரை இங்கு பயன்படுத்தி கொஞ்சம் மன நிறைவு அடைகிறேன்) காத்திருக்கிறேன். ஆதரவு வழங்க அன்பு உள்ளங்களை வலைச்சரத்திற்கு வரவேற்கிறேன்.


அன்பன்,
ஜோதிபாரதி.


ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


62 comments:

 1. வாழ்த்துகள்

  ReplyDelete
 2. /தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உங்களையெல்லாம் சோதிப்பதற்காக இந்த சோதிபாரதி(எனக்கு முதலில் சூட்டிய பெயரை இங்கு பயன்படுத்தி கொஞ்சம் மன நிறைவு அடைகிறேன்) காத்திருக்கிறேன். /


  கண்டிப்பாக

  :)))))))))))))))))))

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  அப்பாலிக்கா படிச்சிட்டு வருவேன் ...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஜோதிபாரதி

  ReplyDelete
 5. ஆசிரியர் ஆனதற்கு முதலில் வாழ்த்துகள்...
  :)

  உங்களை பற்றிய அறிமுகம் அருமை..முன்னரே பலதடவை உங்கள் ஆக்கங்கள் படித்திருந்தாலும்....இந்த பதிவின் மூலம் உங்களை பற்றி அறிய முடிந்தது..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஜோதிபாரதி

  தொடர்ந்து சிறப்பாக எழுதி கலக்குங்க

  ReplyDelete
 7. //Blogger திகழ்மிளிர் said...

  வாழ்த்துகள்

  /தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உங்களையெல்லாம் சோதிப்பதற்காக இந்த சோதிபாரதி(எனக்கு முதலில் சூட்டிய பெயரை இங்கு பயன்படுத்தி கொஞ்சம் மன நிறைவு அடைகிறேன்) காத்திருக்கிறேன். /


  கண்டிப்பாக

  :)))))))))))))))))))//

  திகழ், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
  எனது படிப்பினைக்காக உங்களை சோதித்தால் அது எந்த வகையில் நியாயம்?

  ReplyDelete
 8. //Blogger நட்புடன் ஜமால் said...

  வாழ்த்துக்கள்

  அப்பாலிக்கா படிச்சிட்டு வருவேன் ...//

  ஜமால், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
  கண்டிப்பாக படியுங்கள்!! மறுமொழியில் கருத்துக்களை இடவும்.

  ReplyDelete
 9. //Blogger புன்னகை said...

  வாழ்த்துக்கள் ஜோதிபாரதி//

  புன்னகை, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 10. //Blogger Thooya said...

  ஆசிரியர் ஆனதற்கு முதலில் வாழ்த்துகள்...
  :)

  உங்களை பற்றிய அறிமுகம் அருமை..முன்னரே பலதடவை உங்கள் ஆக்கங்கள் படித்திருந்தாலும்....இந்த பதிவின் மூலம் உங்களை பற்றி அறிய முடிந்தது..//

  தூயா, தாங்கள் வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றி!

  ReplyDelete
 11. //Blogger கிரி said...

  வாழ்த்துக்கள் ஜோதிபாரதி

  தொடர்ந்து சிறப்பாக எழுதி கலக்குங்க//

  தாங்கள் வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றி கிரி!

  ReplyDelete
 12. //ஜெகதீசன் said...

  வாழ்த்துகள்!!//

  தாங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சேகு!

  ReplyDelete
 13. வாழ்த்துகள்

  ReplyDelete
 14. வாழ்த்துகள் அண்ணா கலக்குங்க...

  ReplyDelete
 15. /திகழ், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
  எனது படிப்பினைக்காக உங்களை சோதித்தால் அது எந்த வகையில் நியாயம்?/


































  சும்மா தான்









  மீண்டும் முறை வாழ்த்துகள்

  ReplyDelete
 16. //அமுதா said...

  வாழ்த்துகள்//

  வாழ்த்துகளுக்கு நன்றி அமுதா!

  ReplyDelete
 17. //VIKNESHWARAN said...

  வாழ்த்துகள் அண்ணா கலக்குங்க...//

  வாழ்த்துகளுக்கு நன்றி விக்கி!

  ReplyDelete
 18. //திகழ்மிளிர் said...

  /திகழ், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
  எனது படிப்பினைக்காக உங்களை சோதித்தால் அது எந்த வகையில் நியாயம்?/

  சும்மா தான்
  மீண்டும் முறை வாழ்த்துகள்//

  உங்களையெல்லாம் அந்த அளவுக்கு சோதித்திட மாட்டேன். கொஞ்சம் குறைவாகவே சோதிக்கிறேன். பொறுத்துக் கொல்லுங்க.(No spelling mistake)
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!!
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!!
  :)))))))
  மொக்கையில் சக்கை போட விரும்பினால் அதுவும் போடுவேன்!

  ReplyDelete
 19. அறிமுகப்பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது!

  ReplyDelete
 20. //நிஜமா நல்லவன் said...

  வாழ்த்துக்கள்!//

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பாரதி!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ஜோதிபாரதி!!!

  ReplyDelete
 22. உங்களை பற்றிய அறிமுகம் அருமை.

  இந்த பதிவின் மூலம் உங்களை பற்றி அறிய முடிந்தது.

  ReplyDelete
 23. //நிஜமா நல்லவன் said...

  அறிமுகப்பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது!//

  நன்றி! பதிவை ஒட்டிய கருத்துக்களை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஏதாவது கும்முவதற்கான திட்டம் இருக்கிறதோ?

  ReplyDelete
 24. //
  கொல்லுங்க.(No spelling mistake)
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!!
  நான் சீரியஸ் பதிவர் இல்ல!!
  :)))))))
  மொக்கையில் சக்கை போட விரும்பினால் அதுவும் போடுவேன்!
  //

  போடுங்கள் போடுங்கள் நாங்க நல்லா ரசிப்போம்!!!

  ReplyDelete
 25. வலைச்சரத்தில் மிக நீண்ட அறிமுகம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்....மிகவும் நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
 26. //
  நன்றி! பதிவை ஒட்டிய கருத்துக்களை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஏதாவது கும்முவதற்கான திட்டம் இருக்கிறதோ?
  //

  ஆமா ஆமா இருக்கும் இருக்கும்
  எதுக்கும் உஷாரா இருங்க.

  ReplyDelete
 27. //
  நிஜமா நல்லவன் said...
  வலைச்சரத்தில் மிக நீண்ட அறிமுகம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்....மிகவும் நன்றாக இருக்கிறது!

  //

  நீங்க இங்கே தான் இருக்கீங்களா??
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 28. /RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  வலைச்சரத்தில் மிக நீண்ட அறிமுகம் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்....மிகவும் நன்றாக இருக்கிறது!

  //

  நீங்க இங்கே தான் இருக்கீங்களா??
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா/


  என்னக்கா வில்லத்தனமான சிரிப்பு மாதிரி இருக்கு....:)

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் ஜோதிபாரதி

  ReplyDelete
 30. /RAMYA said...

  //
  நன்றி! பதிவை ஒட்டிய கருத்துக்களை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஏதாவது கும்முவதற்கான திட்டம் இருக்கிறதோ?
  //

  ஆமா ஆமா இருக்கும் இருக்கும்
  எதுக்கும் உஷாரா இருங்க./


  :))

  ReplyDelete
 31. அடேங்கப்பா? எவ்வளவு பெருசு?

  படித்தவரை சூப்பராக இருக்கு. எங்கே என் டேமேஜர் வந்து கழுத்தை நெறிப்பதற்குள் பின்னூட்டமிட்டு விடுகிறேன்.

  அண்ணே, கலக்கிட்டீங்க.

  ReplyDelete
 32. //RAMYA said...

  வாழ்த்துக்கள் ஜோதிபாரதி!!!//

  வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி ரம்யா!

  ReplyDelete
 33. //புதுகைத் தென்றல் said...

  வாழ்த்துக்கள் ஜோதிபாரதி//


  வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி புதுகை தென்றல்!

  ReplyDelete
 34. //கிஷோர் said...

  அடேங்கப்பா? எவ்வளவு பெருசு?

  படித்தவரை சூப்பராக இருக்கு. எங்கே என் டேமேஜர் வந்து கழுத்தை நெறிப்பதற்குள் பின்னூட்டமிட்டு விடுகிறேன்.

  அண்ணே, கலக்கிட்டீங்க.//

  வருகைக்கு நன்றி கிஷோர்!
  அலுவலக நேரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 35. கவித்துவமான ஆரம்பம்...வாழ்த்துகள்...

  ReplyDelete
 36. //டொன்’ லீ said...

  கவித்துவமான ஆரம்பம்...வாழ்த்துகள்...//

  வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி டொன் லீ!
  நேரம் கிடைக்கும் போது முழுவதும் வாசியுங்கள்!!

  ReplyDelete
 37. ஜோபா,

  வலைச்சரம் தொடுக்கச் சொன்னால் மல்லிகைப் பந்தலே போட்டு இருக்கிங்க.

  கலக்கல்

  ReplyDelete
 38. \\
  வலைச்சரத்திற்கு எனது தமிழ் மாலை\\

  உங்களது தமிழ் மாலை

  மாலை தான் படிக்க முடிந்தது

  மிகவும் அழகு ...

  ReplyDelete
 39. கோவி.கண்ணன் said...

  ஜோபா,

  வலைச்சரம் தொடுக்கச் சொன்னால் மல்லிகைப் பந்தலே போட்டு இருக்கிங்க.

  கலக்கல்//

  எல்லாம் உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் வாழ்த்துகள்(ஆசீர்வாதம்) தான்!

  வருகைக்கு நன்றி கோவியாரே!!

  ReplyDelete
 40. \\தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உங்களையெல்லாம் சோதிப்பதற்காக இந்த சோதிபாரதி(எனக்கு முதலில் சூட்டிய பெயரை இங்கு பயன்படுத்தி கொஞ்சம் மன நிறைவு அடைகிறேன்) காத்திருக்கிறேன். ஆதரவு வழங்க அன்பு உள்ளங்களை வலைச்சரத்திற்கு வரவேற்கிறேன்.
  \\

  நிச்சியம் வாங்க

  நாங்களும் காத்திருக்கின்றோம்.

  ReplyDelete
 41. //Blogger நட்புடன் ஜமால் said...

  \\
  வலைச்சரத்திற்கு எனது தமிழ் மாலை\\

  உங்களது தமிழ் மாலை

  மாலை தான் படிக்க முடிந்தது

  மிகவும் அழகு ..//


  ஜமால், தங்கள் பின்னூட்ட மறுமொழியே அழகுதான்!
  மாலை - மாலை

  ReplyDelete
 42. \\நான் பதிவுலகில் நுழையும் போது, திரட்டிகள் கிடைப்பதற்கு முன்பு எனக்கு கிடைத்த வலைப் பக்கங்கள், வினையூக்கி, ஸ்னாப் ஜட்சுமென்ட், பிகேபி பேட்டிகள், பிரகாஷ் குரோனிகள், சுப்ரா தமிழ்ப்பக்கம்,குப்பைத் தொட்டி, தமிழ் சசி இன்னும் பல. இன்று வரை இந்த பக்கங்களும் தரமாக செயலாற்றி வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது\\

  சர்வ நிச்சயமாக

  அதிலும் பி.கே.பி ஒரு சகாப்தம் என்றே சொல்லலாம்.

  ReplyDelete
 43. \\"ஆறு தன் வரலாறு கூறுதலில் இருந்து அறிவாளி தன் வரலாறு கூறுதல் வரை" என்று வேடிக்கையாக நான் கூறுவதுண்டு. அந்த வரிசையில் நானுமா?! கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். தன் வரலாறு கூறுகிற அளவுக்கு எனது வரலாறு பெரிய புத்தகம் அல்ல. இது சிறிய புத்தகம் தான். அதிலும் திறந்த புத்தகம் தான். இருப்பினும், தன்வரலாறு கூறும் கடமையை கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் சுருங்கக் கூறி விளங்க வைக்க முயற்சிக்கிறேன்.\\

  என்னே தன்னடக்கம்.

  ReplyDelete
 44. \\இரக்கம் இல்லை இந்த வானுக்கு
  உறக்கமில்லை எனக்கு\\

  கிறக்கமுண்டு தங்கள் தமிழுக்கு ...

  ReplyDelete
 45. \\உள்ளக்கிடங்கையில் எழும் உணர்வுகளை ஒப்பிக்காமல் கொட்டிவைத்திருக்கிறேன். அதில் அள்ளிக் கொடுக்க வேண்டியதில்லை சிலவற்றை கிள்ளியாவது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.\\

  ஆஹா!

  கிள்ளியதே இவ்வளவா

  அள்ளி கொடுங்கள் - நாங்களும் மகிழ்ச்சியினை அள்ளி தருகிறோம்

  ReplyDelete
 46. \\வலைச்சரம், பூச்சரம் அதில் மென்மையானவற்றை மட்டுமே தொடுப்பேன் என்று புரிந்துணர்வோடு உறுதி கூறுகிறேன். அவைகள் மென்மையனவையா? மேன்மையானவையா? இரண்டுமா?\\

  அழகா சொன்னீங்க.

  இரண்டும் தான் அதில் ஐயம் ஏதும் இல்லை.

  வன்மையும் மென்மையும் உள்ளவன் தான் மனிதனும்.

  இவ்விடத்தில் மென்மையே தரவேண்டும் என நினைக்கும் உங்கள் எண்ணமே மேன்மையாக இருக்கும் போது - எங்களுக்கு ஐயம் இல்லை - இரண்டும தான்.

  ReplyDelete
 47. \\பாட்டுக் கோட்டையாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பிறந்த கிராமத்துக்கு பக்கத்து கிராமம்\\

  அட அதுதான் காவிரி நீர் வற்றினாலும் தங்கள் தமிழ் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறதோ ...

  ReplyDelete
 48. \\மல்லிகை
  மண மணக்கும்
  மாஞ்சோலைக்
  குயில்கள் கூவும்

  வண்ணமயில்
  தோகை விரித்தாடும்\\

  அழகு வார்த்தைகள் ...

  ReplyDelete
 49. அருமையான, கவித்துவமான அறிமுகம்.
  ஆசிரியர் பணியை சிறப்பிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 50. அன்பின் ஜோதிபாரதி

  அருமையான துவக்கம் - அழகான அறிமுகம் - வலைச்சரம் வருபவர்கள் சுட்டிகளைச் சுட்டத் தயங்க மாட்டார்கள்.

  கவிஞன் யார் ? அருமையான, நம்பும் வைர வரிகள்.

  திண்ணை, கீற்று, வார்ப்பு,சிபி தமிழ், முத்துக்கமலம், பதிவுகள், எழில்நிலா போன்ற இணைய இதழ்கள் - அத்தனை இதழ்களிலும் எழுதும் வாய்ப்பு பெற்றமைக்கு பாராட்டுகள்.

  பொறுமையாக தங்களின் வலைப்பூவினிற்கு வந்து ரசித்துப் படிக்க வேண்டும் - அனைத்தினையும் படிக்க வேண்டும். செய்கிறேன்

  நல்வாழ்த்துகள் ஜோதிபாரதி

  ReplyDelete
 51. ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு
  வாழ்த்துகள்
  ஜோதிபாரதி

  ReplyDelete
 52. இதை நேற்றே வாசித்திருக்கவேண்டும்,முடியவில்லை.
  எதை மேற்கோள் காட்டி இது நன்றாக இருக்கு என்று சொல்லமுடியவில்லை.ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படியே செதுக்கி இருக்கிறீர்கள்.
  வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையையும் சுவைக்கமுடிந்தது இந்த ஆசிரியர் பணியால்.

  ReplyDelete
 53. //ஜோசப் பால்ராஜ் said...
  அருமையான, கவித்துவமான அறிமுகம்.
  ஆசிரியர் பணியை சிறப்பிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


  அன்பின் ஜோசப்!
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்
  நன்றி!

  ReplyDelete
 54. //cheena (சீனா) said...
  அன்பின் ஜோதிபாரதி

  அருமையான துவக்கம் - அழகான அறிமுகம் - வலைச்சரம் வருபவர்கள் சுட்டிகளைச் சுட்டத் தயங்க மாட்டார்கள்.

  கவிஞன் யார் ? அருமையான, நம்பும் வைர வரிகள்.

  திண்ணை, கீற்று, வார்ப்பு,சிபி தமிழ், முத்துக்கமலம், பதிவுகள், எழில்நிலா போன்ற இணைய இதழ்கள் - அத்தனை இதழ்களிலும் எழுதும் வாய்ப்பு பெற்றமைக்கு பாராட்டுகள்.

  பொறுமையாக தங்களின் வலைப்பூவினிற்கு வந்து ரசித்துப் படிக்க வேண்டும் - அனைத்தினையும் படிக்க வேண்டும். செய்கிறேன்

  நல்வாழ்த்துகள் ஜோதிபாரதி//

  அன்பின் சீனா ஐயா!
  எனக்கு இந்த ஒருவார காலத்துக்கு, வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை அளித்தமைக்கு நன்றி!
  நேரம் கிடைக்கும் போது சுட்டிகளில் போய் படியுங்கள்!
  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 55. //மாதங்கி said...
  ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு
  வாழ்த்துகள்
  ஜோதிபாரதி//



  அன்பின் சகோதரி மாதங்கி,
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 56. //வடுவூர் குமார் said...
  இதை நேற்றே வாசித்திருக்கவேண்டும்,முடியவில்லை.
  எதை மேற்கோள் காட்டி இது நன்றாக இருக்கு என்று சொல்லமுடியவில்லை.ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படியே செதுக்கி இருக்கிறீர்கள்.
  வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையையும் சுவைக்கமுடிந்தது இந்த ஆசிரியர் பணியால்.
  //

  அன்பின் வடுவூராரே!
  தங்களுடைய பின்னூட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 57. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 58. அன்பு நண்பர் ஜோதி பாரதி அவர்களுக்கு,,

  நான் மதுக்கூர் பகுதியை சேர்ந்தவன்... அப்பகுதியலேயே தங்கள் ஊர் தான் அதிக பட்டதாதிகளையும் மற்றும் அத்திவெட்டி வீரையன், பெரியார் செல்வன் போன்ற தி.கா வினரையும் கொண்ட ஊர் தங்களுடையது... தாங்கள் சொல்லியது போல் சுயமரியாதை திருமணங்கள் அதிகம் நடைபெறுவதை நான் அறிந்திருக்கின்றேன....
  தங்கள் தொண்டு சிறக்க பெறுக வாழ்த்துக்கள்...

  அன்புடன்,
  தமிழ். சரவணன்

  மதுக்கூர்

  ReplyDelete
 59. //பாலா... said...
  வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துகளுக்கு நன்றி பாலா!

  ReplyDelete
 60. //தமிழ். சரவணன் said...
  அன்பு நண்பர் ஜோதி பாரதி அவர்களுக்கு,,

  நான் மதுக்கூர் பகுதியை சேர்ந்தவன்... அப்பகுதியலேயே தங்கள் ஊர் தான் அதிக பட்டதாதிகளையும் மற்றும் அத்திவெட்டி வீரையன், பெரியார் செல்வன் போன்ற தி.கா வினரையும் கொண்ட ஊர் தங்களுடையது... தாங்கள் சொல்லியது போல் சுயமரியாதை திருமணங்கள் அதிகம் நடைபெறுவதை நான் அறிந்திருக்கின்றேன....
  தங்கள் தொண்டு சிறக்க பெறுக வாழ்த்துக்கள்...

  அன்புடன்,
  தமிழ். சரவணன்

  மதுக்கூர்//

  அன்பின் தமிழ்.சரவணன்,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  தாங்கள் மதுக்கூரைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது