07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 2, 2014

வீழ்வேனென்று நினைத்தாயோ ?!இன்றைய எனக்குப்பிடித்த என் தோழர்களின் வலைப்பூக்களைப்பற்றி பேசுகிறேன்.
 
____________________________________________________________________________________________________________

ப்ரியத்தோழி

உனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்
காரணம் புரிந்தும் எனக்கு
ஒன்றேனும் வித்தியாசமாகப்படவேயில்லை
உன்னை ஒவ்வொரு முறை பார்க்கையிலும்.

இப்படித்தான் ஆரம்பிக்கும் இவரது எல்லாக்கவிதைகளும். எதோ வெகுநாள் பழகியவர் போல, தொடர்ந்தும் ஒரே தெருவில் வசித்துக்கொண்டு அடிக்கடி சந்தித்துக்கொள்பவர் போல இவரின் கவிதைகள் காணப்படும்.
மிக நெருக்கமாக இவரின் கவிதைகள் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கும்.

அப்படியா என இன்னும் கேட்டால் இப்படி பதில் சொல்வார்

விரல் பிடிக்கையில் எவ்வித 
செல் மாற்றங்களும் உனக்குள்
நிகழவில்லையெனில் என் தோள்
பற்றும் தோழனாக இரு.

இப்படி உங்களை விரல் பிடித்து உள்ளுக்குள் அழைத்துச்செல்லும் இந்தக்கவிதையை முழுதுமாக வாசிக்க இங்கே சொடுக்கலாம்


‘கவி பானு’ இன்னுமொரு கவிதாயினி இல்லை, போகிறபோக்கில் வாசித்துச்சென்றுவிட. முகநூலில் இவரின் கவிதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். பின்னர் தான் தெரிந்தது இவருக்கு ‘பிரியமான தோழி’ என்ற வலைப்பூவும் இருக்கிறது என்று. எனது கவிதைகளை இடைவிடாது தொடர்ந்து வாசிப்பார். முகநூலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த போது, இப்போதெல்லாம் இந்தக்கவிக்காற்று வரத்து குறைந்து விட்டது. எப்போதாவது அடிக்கும் தென்றல் மட்டுமே நம் மனதைக்கொள்ளை கொள்ள வைக்கும் என்பதற்கிணங்க இவரின் அவ்வப்போதைய ட்யூலிப் மணக்கவிதைகள் எனக்கு ஒரு சிறப்பு ஊக்கமருந்து.

இன்னும் கேட்கப்போனால் “ எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு ” என்று தமிழைப்போல நான் எல்லோருக்கும் பொது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி முடித்துவிடுவார்.

அது ஒரு கவிதையின் முதல் அடி , இன்னமும் வாசிக்கத்தூண்டுமதை இங்கு சொடுக்கி வாசியுங்கள்.. ஹ்ம்...


கவிதைத்தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். வேலைப்பளுவின் காரணமாக இப்போதெல்லாம் கவி பாடுவதில்லை , எங்கேனும் எப்போதேனும் இந்தத்தென்றல் போனால் போகட்டும் என வீசிச்செல்லும்.


முழுதுமாக அவர் கவிதைகளில் மனம் திளைக்க மேலிருக்கும் சுட்டியை சொடுக்குங்கள். சட்டென வெளியே வர இயலாதபடி தானாகவே உள்ளிழுத்துக்கொள்ளும் சுட்டி அது. ஆதலால் அதை மேலேயிட்டுவிட்டேன். இனியும் பல நண்பர்களின் வலைப்பூக்களைப்பற்றியும் பேசவேணுமல்லவா
அதனால் தான்.. :)

________________________________________________________________________________________________________________________________

ரவி உதயன்


சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்

என சாவகாசமாக எதோ கதை சொல்லப்போவது போல ஆரம்பிப்பார் ரவி உதயன். இன்னும் என்ன என்று ஆர்வமிகுதியில் கேட்கத்தூண்டும் அவரின் கவிதை .

ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்

என்று தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போவார். எப்படித்தான் முடியப்போகிறது இந்தக்கவிதை என நினைத்துக்கொண்டு போக நேர்ந்தால் கடைசியில் சற்றும் எதிர்பாராது இங்கனம் முடிப்பார்

இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு.

இவர் தான் என் பிரியத்திற்குரிய கவிஞர் ரவி உதயன் அவர்கள். இவர் மட்டும் என்னை நேரில் சந்திக்க நேர்ந்தால் கட்டியணைத்து ஒரு முத்தமிட்டு விட்டுத்தான் பேசவேதொடங்குவேன்.

‘இறகுகளைச்சேமிக்கிறவன் பறவையாகிறான்’ என்ற ஒரு கவிதைத்தொகுப்பை இப்போது சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சிறு கவிதைகள், துளிப்பாக்கள் என இவரின் விரல்கள் நாட்டியமாடும். அந்த வகைக்கவிதைகளையே மிகவும் விரும்பி எழுதுகிறார். முகநூலில் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கும் அருவி போல இவரின் கவிதை மழை.

யாருமற்ற அறையில்
மன்றாடுகிறது
மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி
ஒரு தேநீர்க்குவளை
.
என்று வரும் வரிகள் , இங்கனம் கட்டியம் கூறும்.

யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்
புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது
மெல்லிய தாழை மணம்

முழுக்கவிதையையும் வாசிக்க


இன்னுமொரு கவிதை, சொற்களுக்கா பஞ்சம் இவருலகில்

பிளாட் பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்
ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல்!

இது எங்கனம் முடிகிறது , இங்கே சொடுக்கி வாசியுங்கள்..

http://raviuthayan-kathirmatheyan.blogspot.in/2012/03/blog-post.html

ஹ்ம்.. தவிர்க்கவியலாத இன்னொரு கையைப்போல இவரது கவிதைகளும் எனக்கு ..நீங்களும் உமதாக்கிக்கொள்ளுங்கள் இங்கே சுட்டி...

 _________________________________________________________________________________________________________________________________

யாழிசை ஓர் இலக்கிய பயணம்...... 

புதினங்கள், சிறுகதைத்தொகுப்பின் மீதான கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் , சிறுவர் இலக்கியங்கள் மீதான பார்வைகள் என இவரது எழுத்துப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். Summer Winter Fall Spring என்ற கிம்கிடுக்-கின் படத்தை பார்த்துவிட்டு அதன் சாயலில் ஒரு கவிதை எழுதி முகநூலில் இட்டேன். உடனே அதைப்படித்துவிட்டு ஆஹா, அருமைக்கவிதை என அந்தப்படத்தின் சுட்டியை எனக்கு அளித்து அதிர்ச்சியுறச்செய்தார். இந்த யாழிசை “ லேகா ராமசுப்ரமணியன்”

யாழிசை என்ற முகநூல் பக்கத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். அவ்வப்போது நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள், நூல் விமர்சனங்கள், இலக்கியக்கட்டுரைகளை அதில் பகிர்ந்து கொள்வது எனத்தொடர்ந்து எதேனும் செய்துகொண்டேயிருப்பார். முகநூலில்,ட்விட்டரில், வலைப்பூவில் என எப்படி நேரம் கிடைக்கிறது ?! ஹ்ம். ..

வண்ணதாசனே எங்கும் எதிலும் நிறைந்திருப்பார் , இவரின் எண்ணங்களிலும்,இவர்தம் பக்கங்களிலும் எப்போதும்!

அவர் எழுதிய ஒரு நூல் விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி

கை நிறைய பொய்,கள்ளன் கணக்கு பகுதிகளில் செம்பா சொல்லுவது சிறு பருவத்தில் சகஜமான கபடமற்ற திருட்டும்,பொய்யும்.சின்ன சின்ன திருட்டுக்கள், நண்பர்களை,பெற்றோரை ஏய்க்க கூறிய பொய்கள் இப்பொழுது நினைவில் இல்லாவிடினும் அவை மறுப்பதிற்கில்லை.கிறுகிறுவானம்,இதை விளையாடாமல் யாரும் பால்ய காலத்தை தாண்டி வந்திருக்க முடியாது..கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து வானத்தை பேரதிசியமாய் பார்த்த நினைவுகள் மீண்டும் துளிர்த்தெழுந்த சந்தோசம்!!.

அதை முழுமையாக வாசிக்க


இவருடைய கவிதை நூல் விமர்சனங்களை முழுமையாக வாசிக்க இந்தச்சுட்டி


இது அவர் தொடர்ந்து நடத்தி வரும் ‘யாழிசை’ என்ற முகநூல் குழுவுக்கான சுட்டி


 ______________________________________________________________________________________________________________


வீழ்வேனென்று நினைத்தாயோ ?!

முட்களையும் நேசிக்கிறேன்.நண்பனே, உன் சொற்கள் ஒருபோதும் என்னைக் குத்துவதில்லை.” என மிகுந்த நம்பிக்கையுடன் நம்மை அவர் வழியில் அழைத்துச்செல்பவர் மன்னார் அமுதன். பரபரப்பாக தொடர்ந்தும் முகநூலில்,வலைப்பூவில் என இயங்கிக்கொண்டிருப்பவர். தொடர்ந்தும் எழுத வேணும் என்று நினைக்கும் போதெல்லாம் இந்த அவர் கூறிய அந்த வாக்கியங்கள் மனதில் ஓடும்.

காயப்படுத்துவது,காயம் ஏற்றுக்கொள்வது இரண்டுமே அவ்வப்போதைய மனநிலையைப் பொருத்தது. அதை ஒரு பெரிய விஷயமாக எண்ணிக்கொண்டு அதிலேயே உழன்றுகொண்டிருக்க அவசியமேதுமில்லை என்று பறைசாற்றும் அந்த வாக்கியம்.

நூல் மதிப்புரை, கவிதைகள், கட்டுரைகள் இன்னபிற ஆக்கங்கள், மேலும் உள்ளூரில் தமிழ் மன்றம் அமைத்து மாதமொரு முறையேனும் கூடிப்பேசிக்கலந்தாலோசிக்கும்,பகிர்ந்துகொள்ளும் நல்லுள்ளம் கொண்ட அமுதன். எப்போதும் என் பெயரை இணைத்துவிடுவார் கவிதைகள் எழுதும்போதெல்லாம். நல்ல நண்பர். இப்போதும் தொடர்கிறார் தமது வலைப்பூவில்.

அவர் எழுதிய “நாமும் சாதிக்கலாம்” என்ற ஒரு சுயமுன்னேற்றக்கட்டுரையில் இருந்து ஒரு பகுதி 

எனக்கும் உங்களுக்கும் உருவாக்கித் தரப்பட்ட உறுதியான அத்திவாரம் நம் நண்பர்களுக்குச் சிறிது கலப்படப் பொருட்கள் கலந்து அமைக்கப் பட்டிருக்கலாம். சமுதாயத்தில் நமக்கும் இப்படிச் சில பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லது இருந்தார்கள் என்பதை எவரும் மறுதலிக்க முடியாத உண்மை. கலப்படத்தை நீக்க வேண்டிய பொறுப்பை நம் கைகளில் ஏற்றக்கொள்வோமே. நண்பர்களாக இருக்கும் நானும், நீங்களும் தான் இவர்களுடைய ஆதங்கத்தைக் கேட்க வேண்டும். பலரிடம் மறைக்கும் உண்மைகளை நண்பர்களாகிய உங்களிடம் மனம் திறப்பார்கள். ஒருவனுடைய இருண்ட வாழ்வில் உங்களால் சிறு ஒளிக்கீற்றை உண்டு பண்ண முடியுமானால், அதைச் செய்யத் தவறாதீர்கள்.

இதை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கலாம்.


கவிதைகளுக்கென இந்த வலைப்பூவை அமைத்து புதுப்பித்து வருகிறார்.


தேவதைகளின் தனிமை என்ற இந்தக்கவிதை 

கண்டவுடன்
பொம்மைகளைப் புறமொதுக்கி
கட்டிக்கொண்டாய்
அக்கணத்தில்
அர்த்தப்படுத்தியிருந்தாய்
என்
வாழ்க்கையையும்
தனிமையையும்


தொடர்ந்தும் இவரது ஆக்கங்களை வாசிக்க


____________________________________________________________________________________________________________


நாளத்தின் நடனங்கள்

அடுத்து நான் பகிர விரும்புவது ‘ரமேஷ் ராக்சன்’ என்ற கவிஞரை. நிறைய காதல் இவரிடம் மண்டிக் கிடக்கும். அவை சொற்களாக உருவெடுத்து நம் திரைகளை நிறைக்கும். அடாது மழை பெய்தாலும் விடாது காட்சி நடக்கும் என்பது போல , இவர் கவிதை எழுதாத நாட்கள் மொழியில் சொற்கள் தீர்ந்து போன நாட்களாகவோ, இல்லை காதலே இனி இல்லை என அற்றுப்போன நாட்களாகவோ தானிருக்கும்.

சொற்சிலம்பாட்டங்களில்,தேர்ந்தெடுத்த சொற்களில்,மிகக்கடுமையானதில்லாது யாவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும் இவரது கவிதைகள். அதுவே இவரது பலம். நம் மனதிற்கு பக்க பலம்.
ஒரு முறை இவரின் பக்கங்களை வாசித்துவிட்டு வந்தால் உலகத்தின் மீதான பார்வை மீண்டும் பழைய குதூகல காதல் நிலைக்கு மாறிவிடும் என்பது திண்ணம். முகநூலில் தொடர்ந்து இவரது கவிதைகள் என் சுவரை நிறைக்கும். அதே நேரம் விடாது வலைப்பூவையும் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருப்பவர்.

அவருடனான எனது காதலுக்கு இது ஒரு சிறிய சான்று.

கைக்குள்ளும் கால்களுக்குள்ளும்
பொம்மைகளோடு தூங்கும் மகளை
பின்னிரவில் காணும் தகப்பன்
முத்தமிட எண்ணி புன்னகையோடு
படுக்கைக்குப்போவது போல காத்திருக்கிறேன்-உன்
கோபம் அகன்ற முகத்திற்காக

இது போன்ற இன்னபிற கவிதைகளை வாசிக்க இங்கே :) இவர் இன்னும் சில வலைப்பூக்களை நிர்வகித்தாலும் இந்த வலைப்பூவில் அவரது கவிதைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.என்னைத்திகைக்கவைத்த இன்னொரு கவிதை

திசையெங்கும்
நினைவுகளாகிப்போக
கலங்கரையிருந்தும்
தத்தளிக்கிறது
பார்வையற்ற பறவை____________________________________________________________________________________________________

நாளை இன்னும் பல வலைப்பூக்களுடன் உங்களைச்சந்திக்கிறேன். 

2 comments:

  1. Ramesh Rackson அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஓ... ராம்... மிக்க நன்றிகள்.... புதிய நட்பு வட்டத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது