07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ராமலக்ஷ்மி. Show all posts
Showing posts with label ராமலக்ஷ்மி. Show all posts

Sunday, March 13, 2011

அணில் சுமந்த கற்களாய்.. நன்றியுடன்.. வலைச்சரம் ஞாயிறு

நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.
அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

மேலும் வாசிக்க...

Saturday, March 12, 2011

மண்ணை நேசிக்கும் மாந்தர் - வலைச்சரம் சனி

Surveysan-அழிப்பவன் அல்ல அளப்பவன்!
இவரைப் பற்றிய அறிமுகம்‘பதிவுலகில் நானு-Q & A’ இதிலேயே கிடைத்து விடும், இவரே தந்திருக்கும் சுட்டிகளைப் பிடித்துச் சென்றால்! இப்போதுதான் கவனிக்கிறேன், அதில் தன் எழுத்தை “இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை” என சொல்லியிருப்பதை:)!

இரண்டு வருடங்களுக்கு முன்னரே என் பதிவொன்றில், “தன் எழுத்துக்களால் ஒரு உத்வேகத்தைத் தந்தவர் சர்வேசன். எனது சமூகக் கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன். சர்வேசன்-ஆக்கியவன்[அப்போது ‘ஆக்கியவன்’தான்] அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. என் வலைப்பூவுக்குப் பொருத்தமாய் இருக்குமே என்றதுமே தந்து விட்டார். எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன்.”

இப்படிக் குறிப்பிட்டிருந்தது ‘ஆகாககாகா’ வகையிலே அடங்காத வருத்தத்துடன் வலைச்சர வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன், பல நல்ல விஷயங்களைத் தன் முகம் காட்டாமல் பகிர்ந்தும், செய்தும் வருபவரை முன்னிலைப் படுத்தும் ஆவலில்.

எதைச்சொல்ல எதைவிட எனும் அளவுக்கு இரண்டரை ஆண்டுகால வாசிப்பில் சமூக அக்கறையுடனான பதிவுகள் பல இருப்பினும் ஒருசிலவற்றை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

சென்னை விசிட் - உதவும் கரங்கள்:“மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.

தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.

சும்மா சொல்லக்கூடாது,
ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.

ஒரு போட்டியை அறிவிக்கும் போது சர்வேசன், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை போக அவர்களது பெயரிலேயே உதவும் கரங்களுக்கு ஒரு தொகையை அனுப்ப முன்வந்தது பாராட்டுக்குரிய மகிழ்வான விஷயமென்றால், வெற்றி பெற்றவர் தமக்கான தொகையையும் சேர்த்து உதவும் கரங்களுக்கு வழங்கிட முன் வந்தது மேலும் நெகிழ்வு. நல்ல உணர்வுகளை எழுத்திலும் செயலிலும் பரப்பும் அவருக்கு வைப்போம் ஒரு சல்யூட்.

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல் :பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத, பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?
68 வயதான ஸ்ரீதரன்... 17 ஏக்கர் வறண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.”

“மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உறுதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம். இருவரும் முப்பதுகளில் இருப்பவர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

நன்றே செய் இன்றே செய்
:“வெற்றிகரமாய் போயிக்கிட்டு இருக்காங்க; இயற்கை விவசாயம்; எண்ணை உற்பத்தி; ராகி பயிரிட்டு; குளம் வெட்டி அல்லி வளர்த்து, வீடு கட்டி,மனிதக் கழிவையும் புனிதமாக்கி, இவங்க பயணம், சூப்பரா போயிக்கிட்டே இருக்கு;

மேற்கண்ட பயணத்தின் ஒவ்வொருபடியைப் பற்றிய படங்களுடன் விரிவான விவரங்களுக்கான சுட்டிகளைத் தேடி வழங்கியிருக்கிறார் சர்வேசன்.

இந்த மாதிரி இயக்கங்களுக்கு சொற்ப நேரத்தை செலவிடுவது, திருப்திகரமான பொழுது போக்காய் அமைவதோடு மட்டும் அல்லாமல், சொந்த வாழ்க்கையில், நம்மை அறியாமல் ஒரு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும்...சென்னை/செங்கல்பட்டு வாசிகள், DV ஸ்ரீதரனை தொடர்புகொண்டு, தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தால், இருகரம் நீட்டி ஆரத் தழுவி வரவேற்பார்.” எனத் தொடர்பு விவரங்களைத் தந்துள்ளார்.

அத்துடன் நின்றிடாமல், மண்ணை நேசிக்கும் அம்மாந்தரிடம் பதிமூன்று கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுப் பதிந்துள்ளார் இங்கே: கற்பகம், ஸ்ரீராம், DV ஸ்ரீதரனின் பதில்கள்.
***

இவரது கலகலப்பான எழுத்துக்கு, [அறிமுகப் பதிவில் இருப்பினும் நீங்கள் தவற விடக் கூடாதென], மகளிர் தின வாரத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பெண்களை நம்பவே நம்பாதே, ‘அநியாயத்துக்கும் அருமையா எழுதி’யிருப்பதாக அங்கேயே பாராட்டியிருப்பதாலும்:)!
‘மண், மரம், மழை, மனிதன்.’திரு வின்சென்ட்
இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மாமனிதர்,நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சென்னை அண்ணாநகர் ‘நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்’ மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற பலவற்றிற்கும் அறிவிக்கும் ஒருநாள் பயிற்சிகளைப் பற்றியதான உடனுக்குடன் அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும். “பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது....உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும். ப. தண்டபாணி : 94420-15060” என்று கேட்டுக் கொள்வதுடன், அவர்களை நேரில் சென்று பார்த்துப் பாராட்டி மரத்தின் அருகே நின்று புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டுள்ளார் இங்கே.

பெங்களூரில் மெட்ரோவுக்காக பலநூறு வயதான ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதை வேதனையுடன், கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் மக்களில் நானும்தான் அடக்கம்:(! இந்த வயதில் நின்று சாதித்த அந்தச் சிறுவனுக்கு நம் வாழ்த்துக்கள்!

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு, கடந்த வருடம் தண்ணீர் தினத்துக்காக இவர் விடுத்த அழைப்பினை ஏற்று எழுதப்பட்டவை யாவும். அனைத்து சுட்டிகளிலும் சென்று படித்துப் பயன் பெறுங்கள்.

இந்தவருட "உலகநீர்" நாள் சின்னத்தை
அனைவரும் வலைப்பூவில் இணைத்திடக் கேட்டுக் கொண்டுள்ளார். நான் செய்து விட்டேன். அப்போ நீங்க?


‘கசியும் மெளனம்’ ஈரோடு கதிர்
56 வயதான திரு. நாகராஜன், 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

74 வயதைத் தாண்டிக் கொண்டிருந்த திரு. அய்யாச்சாமி அவர்கள் ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்... சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள்

கோடியில் இருவராய்
இவர்களை அறிமுகப்படுத்திய கதிர் , “ இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை....அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.” எனும் உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்தார் மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா!

கடந்த வாரம் திரு அய்யாச்சாமி, 3000 பிள்ளைகளின் தந்தை, இயற்கையின் அன்னையின் பிரியத்துக்குரிய மைந்தர் காலமானார். “அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில் அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆம், அந்த சுவாச மூச்சு தெற்கிருந்தே வடக்கே, பின் மேற்கே கிழக்கே என உலகெங்கும் பயணப்பட்டு எங்கெங்கும் இயற்கையைக் காக்கும் சக்தியாய், இயற்கையைப் போற்றும் சந்ததிகளுக்கு உறுதுணையாய் இருப்பது நிச்சயம். அதற்கான சான்றாக....இதோ இந்தச் சிறுவன்.
‘ட்விங்கிள் ட்விங்கிள்’(லிட்டில் ஸ்டார்)சபரி
வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை பள்ளி விட்டு வந்ததும், தமக்கையின் உதவியுடன் மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளம் நட்சத்திரம் சபரியை வாழ்த்துவோம், One Boy One Tree!

மண்ணை மரங்களை மனிதர்களை நேசிப்போம்.
இயற்கையைப் போற்றுவோம்.
***

மேலும் வாசிக்க...

Friday, March 11, 2011

பேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி

உழவனின் “நெற்குவியல்”
உழவுக் குடும்பத்தில் பிறந்து, வயல்வெளியில் சுற்றித் திரிந்து, மாடுகன்றுகளோடும் தலையசைக்கும் நாற்றுகளோடும் பழகிச் சிலிர்த்து, கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசமெனும் உரத்தில் மரமாகி, காலத்தின் கட்டாயத்தில் பட்டணத்தில் நடப்பட்டவர். 'உழந்தும் உழவே தலை’ என வாழ முடியாத ஏக்கத்தை ஓரளவேனும் ஈடு செய்ய, குற்ற உணர்வை சற்றேனும் போக்கிக் கொள்ள ‘உழவன்’ என்ற பெயரில் எழுதி வந்தாலும் ‘உழத் தவறியவன்’ என நேர்மையாகத் தனை விளித்துக் கொள்கிறார் வலைப்பூவின் முகப்பினிலே. கிராமத்து நினைவுகளாய் எங்க ஊரு பொங்கலு.

வளர்ந்து வரும் இளங்கவிஞர். இணைய இதழ்களிலும், ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளிலும் இவர் கவிதைகள் வெளியாகி வருகின்றன. எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான கவிதைகள் என்பது இவரது சிறப்பு. மனதில் நின்ற பல கவிதைகளில் ஒன்றிலிருந்து..
“..பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.


ஆவல் அதிகரிக்கிறதா? மீதி வரிகளுக்கு, சாரை சாரையாய்..

மகள் அகமதி இவருக்குத் தந்த கவிதைகள் யாவுமே ரசனைக்குரிய நிறைமதியாய்.., மன்னிக்கவும் [இன்றைய ஆனந்த விகடனில்..].

உரையாடல் போட்டிக்காக இவர் எழுதிய (சின்னஞ்)சிறுகதை ‘பசி’ பலரால் பேசப்பட்ட ஒன்று.

அனுபவக் கட்டுரைகள், அரசியல் அலசல்களோடு நையாண்டியும் நன்றாக வரும்:‘ஆ...ராசா வர்றான்… செம்ப எடுத்து உள்ள வை

சுற்றுப்புற சூழலில் இவர் காட்டிய அக்கறை புதிய தலைமுறையில் சிறப்புக் கவனத்துடன் பிரசுரமானது.

உழவனின் வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
நீலகண்டனின் எழுத்துக்கள்
பத்திரிகை, இணைய இதழ்களில் எழுதுபவர் என்றாலும், மிகச் சமீபமாக ஒருமாத காலத்துக்குள்ளாகதான் இவர் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். பத்திரிகையில் வந்த அருமையான ஒரு கவிதையால் பெயர் கவனத்தில் நிற்க, மறுநாள் இணையத்தில் தற்செயலாக அதே பெயர் தென்பட, நுழைந்தேன் இவர் தளத்துள். பேசட்டும் அவர் எழுத்தே.‘அப்பாவின் குடை’யிலிருந்து சில வரிகள்:
சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....


அப்பாவின் குரல் மட்டுமா, விரியும் இவரது ஒவ்வொரு கவிக்குடைக்குள்ளும் இடிமுழக்கங்கள்தாம். மனிதர்களைப் பற்றியதான அவதானிப்பு இந்தக் கவிதையில் வியக்க வைக்கிறது, சுயநலத்தின் சுற்றுப்பாதை. இவரது ‘எழுத்தின் சாரம்இப்பதிவின் கடைசிப் பத்திக்கும் சாரம்.

மத நல்லிணக்கம், மனித நேயம், மரங்களின் மேலான பாசம் எல்லாம் பேசும் சிறுகதை ‘இந்த வேம்புகள் கசப்பதில்லை’:"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
‘வீடு திரும்பல்’ மோகன் குமார்
சட்ட வல்லுநர். அன்றாட நடப்புகளை வாரம் ஒருமுறை வானவில்லாகத் தொகுத்து வழங்குகிறார். வாசிப்பில் அறிந்தவற்றையும் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவற்றையும் மற்றவரும் பயன்பெற ‘வாங்க முன்னேறிப் பார்க்கலாம்’ [அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] எனத் தொடராக எழுதி வந்துள்ளார். தொடர்ந்து எடுத்துச் செல்வார் என எதிர்பார்ப்போம்.

ஒரு குழுவாக செயல்பட்டு செய்து வரும் சமூக சேவைகளை சமீபத்தில்தான் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்: அரசுப் பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி: “அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..” இது போன்ற பகிர்வுகள் மற்றவருக்குத் தூண்டுதலாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அவரது முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கவும், தேவையில் இருப்பவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பலரும் முன் வந்திருப்பது நெகிழ்வுக்குரியது.

தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுபவர். அவ்வப்போது கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளுகிறார், சுயம்.
எங்கள் ப்ளாக்
ஐந்து பேர் குழுவாக எழுதி வருகிறார்கள். இது 'உங்கள் ப்ளாக்' என அவ்வப்போது போட்டிகள், கேள்விகளை முன் வைக்கிறார்கள். வாசகர்களும் ‘ஆம், நம்ம ப்ளாக்’ என உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். 87 வாரங்களாக, ஞாயிறு தோறும் வித்தியாசமான, ரசனைக்குரிய புகைப்படம் ஒன்றைத் தெரிவு செய்து, தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீராம் எழுதிய நாய்மனம்-1, நாய்மனம்-2 : “நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.
‘மனசு’ சே.குமார்
தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.கிராமத்து நினைவுகளாய், தீபாவளியும் பட்டாசும்..!, மழைக்காலம்:. “சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய...பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு.

கிராமத்தில் வாழ்ந்த காலக்கட்டத்தை இவர் சிறுகதைகளாய் தொடர்ந்து பதிவு செய்து வரும் விதம் பாராட்டுக்குரியது: கருத்தபசு, அப்பா சேர்.
‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்
இவரை புகைப்பட வல்லுநராக மட்டுமே ஒருசிலர் அறிந்திருக்கின்றனர் என்பதை கவிதை கதைகளை தன் வலைப்பூவில் பதியும் போது ‘அட இதெல்லாம் கூட எழுதுவீர்களா?’ என்று வரும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும். மரத்தடி குழுமத்தில் கவிதைகள், வெண்பாக்கள், சிறுகதைகள் என மின்னியவர். 2006-ல் ஆரம்பித்த வலைப்பூவுக்குச் சரியாக ஐந்தாண்டுகள் நிறைவுற்றிருக்க, மொத்தம் 74 இடுகைகளே. எழுதும் படைப்புகளை குழுமங்களிலும், இப்போது கூகுள் buzz-லும் பகிர்வதோடு நிறுத்தி விடுகிறார். வலைப்பூ என்பது ஒருவரது படைப்புகளுக்கான சேமிப்பிடம் என்பதை உணர்ந்து, சமீபத்தில் அதீதம் இதழில் நல்ல வரவேற்பைப் பெற்ற சக்கிரவியூகம் பாகம்:1 , பாகம்:2 சிறுகதை உட்பட, விட்டுப்போனவைகளை தொடர்ந்து வலைப்பூவில் பதிய அழைக்கிறேன் இவரை. சிறுகதைகள்: உறவுகள், ஒரு மெளனத்தில் அலறல்:
அன்று உத்தரையின்
கருக் கொல்ல எய்தது
ஓர் அஸ்திரம்தான்.
இன்று எங்களின் உயிர் கொள்ள
எய்யப்படும் அஸ்திரங்கள் தாம்
எண்ணற்றவை.
” கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறல்!

கவிதைக்கு, தவறுகள்.

[கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!]

‘திரும்பி வாங்க!’
ருமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இப்போது நீண்ட விடுப்பில். ஆதங்கத்துடன் விடுக்கிறேன் அவர்களுக்கு அழைப்பு. அமித்து அம்மா, புதுவண்டு [தாய்மைக்காக எடுத்த விடுப்பு. வாசகர்களை வாடவிடாமல் ஆரம்பியுங்களேன் அமித்து தம்பியைப் பற்றியும், நாதனின் தங்கையைப் பற்றியுமான அப்டேட்ஸுடன்:)!], அனுஜன்யா, சதங்கா [சகலகலா வல்லவராக சமையல், சித்திரம் உட்பட கதை, கவிதைகளில் அசத்தியவர்];தமிழ் பிரியன் கதை எழுதும் ஆர்வம் இருக்கு, திறமை இருக்கு, ஆனா முயற்சி இல்லை:)!; ஜெஸ்வந்தி[மிகச்சிறந்த சிறுகதையாளர், என் பிரிய பபிதா பாகம் 1; பாகம் 2.].

எவரும் எதற்காகவும் எழுதுவதை விட்டு விடாதீர்கள். என் நூறாவது பதிவில் நான் வைத்த கோரிக்கை:“இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

மீண்டும் எனக்கு நானே உரக்கச் சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான், எஸ்.நீலகண்டனின் எழுத்தின்சாரம் கவிதையிலிருந்து..,
“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”
***
மேலும் வாசிக்க...

Thursday, March 10, 2011

உலகம் துளிர்க்க.. - பெண்சக்தி சிறப்புச்சரம் - வியாழன்

‘குறிஞ்சி மலர்கள்’ சுந்தரா:
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம் குறிஞ்சி மலர். மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் சுந்தராவின் கவிமலர்கள். உறவுகளின் நடுவே ஏற்படும் விரிசல்கள், மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூக நலன் குறித்த ஆதங்கங்கள் வீச்சுடன் வெளிப்படுகின்றன இவர் எழுத்துக்களில். காலவதி மருந்துகளை விற்று காசு பார்த்தக் கூட்டத்தைச் சாடுகிறார் இப்படி,
“உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்... ” காலாவதி மனிதம்.
***
இன்னும் சில:வாடகை வயிறுகள், இருவகை இரவுகள், உறவுக் கயிறு,

ஹுஸைனம்மா:
வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றைப் பற்றியும் ‘பொழந்து கட்டும்’ ஹுஸைனம்மாவின் ‘டிரங்குப் பெட்டி’[அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] பதிவுலகில் அதி பிரபலம். “நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!) எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”...இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!” என்கிறார்.

பலரது பதிவுகளில் இவர் இடும் பின்னூட்டங்கள், கேட்கும் கேள்விகள் பளிச்சுன்னு நமக்கு ஒரு புன்னகையை வரவழைக்கும். அதே நேரம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். எதிலும் ஒரு அநாயசம், தனித்துவம், இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று என்றால் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது:)!

இவரது அனுபவப் பகிர்வுகளாகிய ஆறுமுகத்தாய்- பாகம் 1, பாகம்-2 என்னை மிகக் கவர்ந்தவையாகும். சிறப்பான எழுத்து நடைக்கு உதாரணமும்.
‘உப்புமடச் சந்தி’ ஹேமா

தன் ஊர் பெயர் கொண்ட ‘உப்புமடச் சந்தி’யில் ‘கதை பேச வாங்கோ’ என அன்புடனே நமை அழைத்து அளவளாவும் ஹேமா கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறார், இங்கே.

தன் தாய் தேசம் தந்த பரிசாக
மனநெகிழ்வோடும் கண்ணீரோடும் இவர் ஏந்திய ஈழம் பிரிவுக்கான தமிழ்மணம் விருது 2010, இவர் அனுபவித்த.., இவர் போன்ற பல ஈழத்தமிழர்கள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் மவுன சாட்சியாக, யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு. “கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.


இந்த வலிகளில் பிறக்கும் இவரது படைப்புகள் உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிப்பதாக உள்ளன.

இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகும் இவர் கவிதைகள் யாவும் ‘வானம் வெளித்த பின்னும்..’ வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. இவர் மொழிப்புலமை கண்டு வியந்து மகிழும் தமிழ், எழுத்துக்களில் மயிலாகத் தோகை விரித்தும், வேதனைகளில் நெகிழ்ந்து போய் தாயாகப் பங்கெடுத்துத் தன் தோளிலே சாய்த்தும் துணை செல்கிறது.
ஹாஸ்ய ரசம் கோமா
நண்பர் வட்டம், திண்ணை இதழ்களில் ஒரேகால கட்டத்தில் நாங்கள் எழுதி வந்திருந்தாலும் இவரது முதல் படைப்பை நான் வாசித்தது ஒன்பதாவது படிக்கையில், 1979-ல், ரத்னாபாலா சிறுவர் இதழில். ‘இன்னொரு காந்தி வரவேண்டும்!” என்கிற அந்த சிறுகதை பெற்ற ஆயிரம் ரூபாய் பரிசு அந்தக் காலத்தில் உயரிய ஒரு அங்கீகாரம். அதை வலைப்பூவில் இவர் பதிந்திருக்கிறாரா எனத் தேடியபோது கிடைக்கவில்லை. தனிமடலில் கேட்டபோது, ‘அக்கட்டுரையின் கருத்து இக்காலத்துக்கு பொருந்தாதே?’ என்றார். ‘நாட்டுப் பற்றை விதைக்கும் நல்லதொரு கருத்து பொருந்தாமல் போனது காலத்தின் பிழை. நாட்டின் வருந்தத்தகு நிலை. ’ என்றேன். சம்மதித்துள்ளார் பதிவதாக. இன்றும் அந்த விதை எவர் மனதையேனும் அசைத்து, துளிர்த்துத் தளிர்விட வல்லதென்றே நம்புகிறேன். இந்த வாரத்துள் கிடைத்தால் அதன் சுட்டியை இங்கு இணைத்திடுவேன், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசித்த படைப்பை வலைச்சரத்தில் தொகுத்த பெருமையுடன்!

ஒருவேளை தாமதமானாலும், அவர் பதியும் போது பின்னூட்டத்தில் இணைத்திடுவேன் அதன் உரலை.

‘இன்னொரு காந்தி வரவேண்டும்’ வலைச்சரத்துக்கும் நாட்டுக்கும்!
***

இவரது டைமிங் நகைச்சுவைக்கு யாரைக்கேக்கணும்?, வாக்களித்தவன் கேள்விகளும் தமிழக அரியாசனத் தலைமையின் பதில்களும்!
***

தனக்கு நீச்சல் தெரியாத நிலையில் கூட,தண்ணீரில் தத்தளித்த ,பல குழந்தைகளைக் காப்பாற்றி ,தன் உயிர் நீத்த பள்ளி ஆசிரியை சுகந்தி”யை நினைவு கூர்ந்து தான் தேடும் பத்தாவது பெண்மணியாகவும் ஆகிறார் இங்கே முத்தான 10 பெண்மணிகள்.

வள்ளுவம் வலைப்பூவில் இவர் விதைத்து வரும் சிந்தனைளும், ஆன்மீகப் பாடல்களும், ஹாஸ்ய ரசங்களும் விரைவில் தனித்தனிப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட உள்ளன என்பது உங்களுக்குக் கூடுதல் தகவல். வாழ்த்துவோம் இவரை.

[கோரிக்கையை ஏற்று இன்னொரு காந்தியை வலைச்சரத்துக்கு அழைத்து வந்திருக்கும் கோமாவுக்கு நன்றியும் வணக்கங்களும்!!]

அன்புடன் அருணா
தாய்மையின் மறு உருவாய் மாணவரை வழிநடத்தும் தலைமையாசிரியை, பொறுப்பான இல்லத்தரசி, சக மனிதர் யாவரிடமும் அக்கறை காட்டும் சமூக உணர்வு கொண்டவர், மனிதரோடு மழையையும் நேசிப்பவர். எங்கே, நல்ல விஷயங்களைக் கண்டாலும் மனமும் முகமும் மலந்து நீட்டிடுவார் பூங்கொத்தை. சென்றவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலித்த போது பகிர்ந்த படைப்புகள் யாவும் கல்வெட்டு. அதில் நிறைவுதினக் கவிதையை பறந்துபோய் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன் இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம் என்று:
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள் விதைகளை.....
கைக்கெட்டா தூரம் வரை விசிறியடியுங்கள் விதைகளை....

ஒரு பறவையின் நோக்கத்தோடு பறந்து பறந்து விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
” நன்றி அருணா!! தூவுவோம் விதைகளை!!
***

இன்றுடன் பெண்சக்தி சிறப்புச்சரம் நிறைவுறுகிறது. 33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!
மேலும் வாசிக்க...

Wednesday, March 9, 2011

கனவே நனவாக.. - மகளிர் சிறப்புச்சரம் - புதன்

அமைதிச்சாரல்:
பயணக்கட்டுரை, சமையல் குறிப்புகள், கவிதைகள், புகைப்படங்கள் என எல்லாவற்றிலும் கலக்கி வரும் பதிவுலக நம்பிக்கை நட்சத்திரம். இயல்பான நகைச்சுவை இவர் கட்டுரைகளெங்கும் இழையோடும். சமீபமாக அருமையான சிறுகதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று,‘பொங்கல் மகிழ்ச்சி’[லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை]. கவிதை நேரமிது வலைப்பூவில் ‘முன்னேற்றம்’ பற்றி சொல்லியிருப்பதில் எனக்குப் பிடித்தமான சிலவரிகள்:
ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.


‘சமைத்து அசத்தலாம்’ ஆசியா ஓமர்
பதிவுலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகளின் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு இவர் சிறந்த உதாரணம். நண்பர் அஹமது இர்ஷாத் கொடுத்த 'சிறந்த எழுத்தாளர்' விருதே தன்னைச் சிறுகதை முயற்சியில் இறங்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படியாக இவர் எழுதிய முதல் சிறுகதை தமிழ்மணம் விருது 2010 மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஜொலிக்கிறது.
எம்மா: “அப்பப்ப கண்ணை திறந்து, எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்திட்டு கண்ணை மூடிக்கொள்ளுவார், இப்படியாய் ஒரு நாள் முழுவதும் கழிந்தது, சொந்தக்காரங்க எல்லாம் இந்த கிழவனுக்கு வேலை இல்லை,நல்ல திடமாக இருந்திட்டு எல்லாரையும் எங்கேயும் அசைய விடமாட்டேங்கிறார் பாரேன்னு ஒவ்வொருவராக அவரவர் வீடு செல்ல ஆரம்பித்து விட்டனர்..

தமிழ்மணம் விருது தந்திருக்கும் ஊக்கத்தால் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துவோம்.
***
சமையல் செய்முறைகளை ஒவ்வொரு பருவத்திலும் படமெடுத்து வழங்குவது இவரது தனிச் சிறப்பு. சமீபத்தில் தன் வலைப்பூவின் ‘ஒரு வருட நிறைவு’க்காக வழங்கிய இனிப்பு இங்கே.
***
மனநலம் உடல்நலம் குறைந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் இருந்த அனுபவங்களை மூன்று பாகங்களாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் ‘சின்னஞ் சிறிய உலகம்’.
***
‘நினைவின் விளிம்பில்’ கவிநயா:
‘திண்ணை’, மற்றும் மாலனின் ‘திசைகள்’ இணைய இதழ்களில் எழுதி வந்தவர், இணையக் குழுமங்களில் தொடர்ந்து பின்னர் நம் ‘நினைவின் விளிம்பில்’ என்றும் நிற்கக் கூடிய படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைக்கும் இவரது பதிவுகள் எனக்கு. ஒருசில துளிகளே அப்பதிவினில் கழித்திருந்தாலும், அன்றைக்கான தியானத்தை முடித்த நிறைவைத் தரும் பல படைப்புகள்.

ஜலதோஷமும் சந்தோஷமும்
:. “பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

உங்களுக்கு எத்தனை அம்மா?
: “அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும்.

மறக்கத் தெரியுமா?:“நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

கவிதைகள்: நம்பிக்கை, அமைதி, சரணாகதி.

சிறுகதைகள்: ரயில் பயணம், யாருக்குத் தெரியும்?

‘எண்ணிய முடிதல் வேண்டும்’ ஷைலஜா:
தேர்ந்த எழுத்தாளர். 230-கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்களைப் படைத்த இவர் சிறந்த கட்டுரையாளரும். வானொலி மற்றும் (ராஜ்) தொலைக் காட்சிக்காக நாடகங்களும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். விளம்பரங்களுக்குக் குரல் கொடுக்கிறார். சிறந்த இல்லத்தரசியாய் பரிமளித்தபடி பல ஆண்டுகளாக இடைவெளி விடாமல் எழுதி வருவது போற்றவும் நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டிய ஒன்று. பிற எழுத்தாளர்களின் படைப்புகளுடன் இரண்டு தொகுப்புகள் வந்திருப்பினும், சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘அவனும் இவனும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

இவரது நகைச்சுவை உணர்வுக்குச் சிறந்த சான்றாக சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!
***
அணை திறந்த வெள்ளமென இவர் பிறந்த ஸ்ரீரங்கத்துக் காவேரி துள்ளி வரும் அழகில் வார்த்தைகள் பெருக்கெடுத்து ஓட, சொல்லியிருக்கிறார் உருக்கமாய் இக்கவிதையிலே பெண்படும் பாட்டினை.., ஆத்தா ஒன் சீலதான்:.
ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.
.......................
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி..
***
தசரா யானைகளின் அவஸ்தைகள் : “காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும்.” தாய்மையின் கருணையுடன் இதற்கான தீர்வையும் கோரிக்கையாய் வைத்துள்ளார் பதிவின் முடிவிலே பாருங்கள்.
***
‘என் வானம்’ அமுதா:
‘என் வானம்’ வந்த கதையை இவரே சொல்லியிருக்கிறார் இங்கு.

குழலினிது யாழினிது எனும் இழையில் தன் மகள்கள் நந்தினி, யாழினியுடனான தருணங்களைத் தாய்மையின் பூரிப்புடன் பகிர்ந்து வருகிறார். அவர்களில் தன்னையே கண்டெடுக்கும் சந்தோஷத்தை உணர்த்துகிறார் நமக்கும் அற்புதமாய் இங்கே, குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்: “கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

சமீபத்தில் குழந்தைகளுடன் இவர் ஆமை நடை சென்ற அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. ஆமை நடை செல்ல ஆசையா?, சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்.

நூற்று நாற்பது எழுத்து நவீன இலக்கியம் ட்வீட்ஸிலும் அசத்துகிறார் பாருங்களேன்இங்கே.

வாழ்க்கையின் வலிகளை, மனிதரின் மறுபக்கங்களை எளிய வரிகளில் சொல்லிக் கடந்து விடுகிற இவர் கவிதைகள் வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.

உறுத்தல், கேள்விகள், ஊரில் வீடு, மனம், பாடம் என இவர் வானத்தில் மிளிரும் கவி நட்சத்திரங்கள் அத்தனையும் பிரகாசம்! நம்பிக்கை நூற்று நம் காயங்கள் அனைத்தையும் வருடி, மருந்தாகி, மறக்கவும் வைக்கும் இவரது அழகிய வரிகளுடனேயே இந்த மகளிர் சிறப்புச்சரத்தை நிறைவு செய்கிறேன்:
“அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

***
மேலும் வாசிக்க...

Tuesday, March 8, 2011

‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்

இன்று மகளிர் தினம்.

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!
***


பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசுஉன்னையே நீ உணர்’என.

“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
” கொண்டாடுகிறார் ‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன்மகளிர் சக்தி’யை.
கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..


‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***
மேலும் வாசிக்க...

Monday, March 7, 2011

முத்துச்சரம் ஒரு அறிமுகம் - வலைச்சரம் திங்கள்

வலைச்சரம் மூலமாக உங்களை இந்த ஒருவாரமும் சந்திக்க இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. பதிவுலகம் வந்த மூன்று மாதங்களிலேயே சீனா சார் இந்த வாய்ப்பை வழங்கிய போது அதிகம் பேரை அறிந்திராத நிலையில் 'இன்னும் சிலகாலம் செல்லட்டுமே’ எனக் கேட்டுக் கொண்டது சரியா தவறா தெரியவில்லை. ஏனெனில் அதன் பிறகு வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை வாய்ப்பு தேடிவந்த போதும் ஏற்றுக் கொள்ள இயலாத சூழல். புரிந்தணர்வுடன் 'வலைச்சரம் காத்திருக்கும்’ எனப் பெருந்தன்மையுடன் சொன்ன சீனா சாரின் ஆசிகளுடன் ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகிறேன். ஒருவகையில் தாமதமாகச் செய்வதன் பலன் இரண்டரையாண்டு வலையுலக வாசிப்பில் கூடுதலாகச் சிலரை அறிமுகப் படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

மகளிர் தினம் இடம் பெறும் இவ்வாரத்தில், முதல் சில நாட்களை மகளிர் சிறப்புச் சரமாகத் தொடுக்க இருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, என்னைப் பற்றிய அறிமுகமாய் முத்துச்சரத்தின் சில முத்துக்கள்:

தீராத ஆர்வம்..பேனாவும் காமிராவும்..: “முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சென்ற வருட இறுதியில் கடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஒரு டைரிக்குறிப்பாக எழுதியது. இதுவே ஓரளவு என்னைப்பற்றிய அறிமுகத்தைத் தந்து விடும்.

மனதுக்குப் பிடித்தமான பதிவுகள் என பல இருப்பினும், சமூகம் மற்றும் வாழ்வு சார்ந்ததாக எழுதியவற்றில் சிலவற்றை முன் நிறுத்த விரும்புகிறேன்.

கட்டுரைகள்:

இவர்களும் நண்பர்களே:. “கடவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில். இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.

இடுகையின் நோக்கம் தமிழ்மணம் விருது 2009-ல் சமூகம் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் பலரையும் சென்றடைந்ததில் மனதுக்கு ஒரு நிறைவு.

செல்வக் களஞ்சியங்கள்
: “எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம்.”

இக்கருத்தை பலரிடம் எடுத்துச் சென்ற இணைய இதழ்களுக்கும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கும் நன்றி.
***
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...: “சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்?

யூத்ஃபுல் விகடனில் வெளியாகி, பின்னர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் புத்தாண்டு சிறப்பிதழ் மூலமாக ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனப் பலரைச் சென்றடைந்த இக்கட்டுரை ‘பெண்ணியம்’ தளத்திலும்.
***
நல்வாழ்வு தந்தாயே நீயே!:“அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய்.

‘அம்மா அருமை எப்போ தெரியும்?’ ஆக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும், யூத்ஃபுல் விகடன் அன்னையர் தினச் சிறப்புப் பரிந்துரையிலும்.
***
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக..:“அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.

வந்து விட்டது கோடை. இந்நேரம் அவசியம் பகிர வேண்டிய பதிவுகளில் ஒன்றாக எண்ணுகிறேன். யூத்ஃபுல் விகடன் பரிந்துரையிலும், வெள்ளி நிலா இதழிலும்..
***
திண்ணை நினைவுகள்-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

இக்கட்டுரையைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. என் வலைப்பூவைப் பற்றி பேச ஆரம்பிக்கையில் பலரும் குறிப்பிட்டு சிலாகிக்கும் முதல் இடுகை இதுவாகவே இருக்கிறது பெரும்பாலும். பதிவிலிருக்கும் கடைசி பின்னூட்டங்களில் someone like you என்பவரின் ஒருசில வார்த்தைகள் மட்டும் இங்கே: “அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம்.........வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம்.

கலைமகள் மாத இதழின் வலைப்பதிவர் அறிமுகத்திலும் பரிந்துரைக்கப் பட்ட இப்பதிவு, கலாச்சாரம் பிரிவில் தமிழ்மணம் விருது 2008-ன் இறுதிச் சுற்றை எட்டிய ஒன்றும் ஆகும்.

கவிதைகள்:
அழகிய வீரர்கள், ராணித்தேனீ - நவீன விருட்சம்

முகமூடிகள், நட்சத்திரங்கள் - உயிரோசை

பிறழாத பிரவாகம், கேள்விகளைத் தேடி..
- அகநாழிகை

ஒற்றைப் பேனாவின் மை - திண்ணை

நோட்டு மாலைகள், சீற்றம், பால்நிலா - யூத்ஃபுல் விகடன்

ஒரு நதியின் பயணம்
, பவனி - வடக்கு வாசல்

குழந்தைகளை அவதானித்தவையாக, ஆனந்த விகடன் சொல்வனத்தில் பொம்மையம்மா’, கல்கி கவிதை கஃபேயில்தவிப்பு’,‘குளிர்நிலவு’!


சிறுகதைகள்:
வயலோடு உறவாடி..- தினமணி கதிர்: “தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.
***
பொட்டலம் : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்:. “தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.
***
உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர்:“விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது.
***
கைமாறு - தினமணி கதிர்:“தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம்..... பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம்.
***

ஆயர்ப்பாடி மாளிகையில்.. - தினமணி கதிர்
: “ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும்..
***
விசுவாசம் - கலைமகள்
விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்.
***

நூல் விமர்சனங்கள்:
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன் சிறுகதைத் தொகுப்பு: “ . “..மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில். சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.
***
கோவில் மிருகம் - விநாயக முருகன் கவிதைத் தொகுப்பு :“அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க..
***

இந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்க ஆசை. நேரமின்மையால் இயலவில்லை. வாசிப்புக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்கிற புதுவருட நிலைப்பாட்டினை செயல்படுத்த இயலாமல் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டிருந்தாலும் நம்பிக்கை உள்ளது:)!


புகைப்படங்கள்:
புகைப்படங்களை முத்துச்சரத்தில் PiT மாதாந்திரப் போட்டிப் பதிவுகளாகவும், பேசும் படங்களாகவும், ஃபிளிக்கர் தளத்தில் [http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/] காட்சிக் கவிதைகளாகவும் பகிர்ந்து வருகிறேன். போட்டிக்காக படத்தைக் கொடுப்பதுடன் நின்று விடாமல் ஒவ்வொரு முறையும் இயன்றவரை ஒன்றுக்கும் மேலான படங்களை ஆர்வத்துடன் தொகுத்து வழங்கியது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் அவற்றில் பல யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இடம்பெற்றன. காட்சிப் படைப்புகளுக்காகத் தொடர்ந்து 2009 மற்றும் 2010-ல் கிடைத்த தமிழ்மணம் விருதுகளை மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்!

தேவதை பத்திரிகை தனது ‘வலையோடு விளையாடு’ பக்கத்துக்காக முத்துச்சரத்தை அறிமுகம் செய்த வேளையில் இரண்டு பக்கங்களுக்கு நான் எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது.

மேலும்,

‘இந்த வார சிறந்த படம்’ ஆக PiT தளம் கெளரவித்த படம், “கடல வாங்குங்க

PiT தளத்தில் கற்ற பாடத்தால் பிற்தயாரிப்பு செய்ததில் பொலிவு பெற்று, பரிசாக ‘இந்த வார சிறந்த படமாய்’ தனிக்கவனம் பெற்ற “போகுமிடம் வெகு தூரமில்லை”. இப்பதிவில் ஃப்ளிக்கர் தளத்தில் எப்படிச் சேர வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் தந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகலாம்.

Land Mark{PiT]: தமிழ்மணம் விருது 2009-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்
[PiT}: தமிழ்மணம் விருது 2010-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

தண்ணி காட்டறேன்[PiT]:கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை.

ஒற்றை[PiT]: சிங்கிள் சிங்கிளாய் சிலிர்ந்து நிற்கும் விலங்கு பறவைகளின் அணிவகுப்பு

உதய கீதங்களும் அந்தி ராகங்களும்
[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]: வானின் வர்ண ஜாலங்கள்

இந்திய சிற்பக்கலையின் பெருமையை உலகுக்குக் காட்டும் வாய்ப்பாக அமைந்த பதிவுகள்:
1.வழிப்பாட்டுத் தலங்கள்[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]
2.இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

மலர்களைக் கண்டு மயங்காத மனமும் உண்டோ..!?!
1.பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2.2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
3.மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

சமீபத்தில் ஓடும் [ஜெட் வேகத்தில் பறந்த என்றும் சொல்லலாம்] வண்டியிலிருந்து செய்த முயற்சியாக, அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்-கிருஷ்ணகிரி மாம்பழங்கள்.

சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! இருக்கட்டும் விடுங்களேன், மகளிர் தின வாரத்தில் எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்படி:)?

அதுவுமில்லாமல், புதிதாக எழுத வருபவர்களுக்கு இணைய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு முயன்றிடவும், புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் PiT, Flickr மூலமாகத் தம்மை மேம்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுதலாகவும், இப்பதிவு இருக்கும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நாளை சந்திப்போம்!
*****
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது