07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 29, 2010

வலைச்சரம் - மூன்றாம் நாள் - புதன்

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும்

கோவில் மிருகம்! (என்னா தலைப்பு பாஸ்!)

அழகர்சாமி தாத்தா பெரிய இக்கு பிடிச்ச மனுஷன் என்று அப்பாதான் அடிக்கடி சொல்வார். அப்பாவிற்கு ஒரு வேலை சொல்லியிருக்கிறார் தாத்தா. செய்ய தவறி இருக்கிறார் அப்பா. ஏன் என்று கேட்டதற்கு அப்பா சிரித்துக் கொண்டே ஏதோ மழுப்பி இருக்கிறார். அப்பதான் அப்பாவிற்கு இந்த கதையை சொன்னாராம் தாத்தா.

ஒரு அன்றாடங்காய்ச்சி. தனியன். அன்று வயித்துப் பாடு ஓடி அடையவில்லை, இரவு வரையில். மண்பானை நீரை மொண்டு குடிச்சு, வயிறு நிறைப்பி படுத்துவிட்டான். குடிசை வீடு. அங்கும் இங்குமாக கூரை விலகியதில் நிலவொளி வீட்டிற்குள் சிந்திக் கிடக்கிறது. கண்ணயரும் நேரத்தில் கூரையில் ஏதோ சத்தம். விழித்துப் பார்க்கிறான். கயிறு போட்டு திருடன் ஒருவன் இறங்கிக் கொண்டிருக்கிறான்.

தனியனுக்கு மனசிற்குள் கெக்கலிப்பு. "தாய்லி, நம்ம வீட்லயும் திருட ஒருத்தன் வர்றானேயா?" என்பதாக. "வாடி, வா.." என்று இருட்டுக்குள் படுத்திருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான். இறங்கிய திருடன் அங்குமிங்குமாக தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. கடைசியாக அடுக்கு பானையை உருட்டுகிறான். கைப்பிடி கேப்பை(கேழ்வரகு) அதில் இருக்கிறது. கொண்டு போக எதுனா கிடைக்குமா என தேடுகிறான். சிந்திக் கிடக்கிற நிலவொளியை, துணி என நினைத்து அதில் கொட்டுகிறான். துணியை முடிஞ்சு முடிஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திருடனை பார்த்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை தனியனுக்கு. வாய் விட்டு சிரித்து விடுகிறான்.

ஸ்தம்பித்த திருடன், இருட்டில் கிடந்த தனியனை பார்த்து சொன்னானாம்," வீடு வச்சுருக்கிற லெச்சனத்துக்கு சிச்சுக்கிறீர்களோ?"

இந்த அழகர்சாமி தாத்தாவின் தொணியை , அப்படியே விநாயகத்தின் கவிதைகளில் பார்கிறேன். எள்ளல், நையாண்டி, நமுட்டு சிரிப்பு, ஊம குசும்பு, இப்படி எல்லாவற்றையும் எட்டு பத்து வரிகளுக்குள் நிகழ்த்தி விடுகிறார். உண்மையில் வாசிக்கிற எனக்கு அவ்வளவு வலி ஏற்படுத்துகிறது. அவ்வலியில் இருந்து விடுபடவென விரக்தியாக சிரிக்கிறேன். பாருங்களேன், வலி ஒரு வகையான அனுபவம் எனில், எதிர் வினையாக எப்படி என்னால் சிரிக்க முடிகிறது? இந்த முரண்தான் நூலாசிரியரின் வெற்றியாகிறது.

மனித நேயமிக்க கோவில் மிருகம் என்று தொடங்குகிற கவிஞர் நிலா ரசிகன், என். விநாயக முருகனின் கோவில் மிருகம் நம் கண்முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்து விட்ட மனித நேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப் பெற்றாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனையும் முழுவதுமாக ஆட்கொள்ளுகிறது" என்று முன் வைக்கிறார்.

"கவிதைக்கான பாடு பொருளுக்கு நான் அதிகம் சிரமப் படவில்லை. பெரு நகரில் அலையும் முகம் தொலைத்த மனிதர்கள், மின்சார ரயிலில் பிச்சை எடுக்கும் சிறுமி, தொலைகாட்சி அபத்தங்கள், முடிவற்று நீளும் இரவு நேர பெரு நகர சாலைகள் என்று அன்றாடம் கவனிக்கும் எளிய அவதானிப்புகளை பாசாங்கு இல்லாமல் கவிதைக்குள் இழுத்துக் கொண்டேன்." என்று முன்னுரையில் பேசுகிறார் நூலாசிரியர்.

இந்த பாசாங்கு இல்லாமல் என்கிற வார்த்தையை மனசில் இருந்து எடுத்திருக்கவேணும். மனசில் இருந்து எடுக்கிற எதுவும் எளிதாக மனசுகளுக்கு கடத்த முடியும். இல்லையா?

இது நூற்றுக்கு நூறு நிகழ்ந்திருக்கிறது விநாயகம்!

இனி, இவரின் இரண்டு கவிதைகள்,

***

பூங்குழலி


மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்

பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத்
தேனருவியென்று தொடங்கினாள்
தேனருவியின் வேகம் குறைந்தது
அம்மம்மா தம்பி என்று நம்பி
அடுத்த பாடல் பைசா பெறவில்லை
பூங்குழலி அசரவில்லை
மூன்றாவது பாடல் பாடினால்
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே
வரிசையாக பாடினால்.

திடீரென நிறுத்தினாள்
இரண்டு நிமிடம் கனத்த மௌனம்
பாட்டு தீர்ந்துவிட்டதா
பதறிப்போனது எனக்கு.

சற்று நேரம் தயக்கம் அவளிடம்
என்ன நினைத்தாளோ
பூங்குழலி உற்சாகமாய் பாடினாள்
பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச்சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்
நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை.

***

குடைக்காம்பு


அப்பாவின் மரணத்திற்குப்பின்
புது வீடு மாறி வந்ததில்
இடப் பிரச்சினை நிறையவே.

தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள்
கந்தல் துணிகள்
பழைய வாரப்பத்திரிக்கைகள்
யார் யாரோ அனுப்பிய
திருமண அழைப்பிதழ்கள்
துருவேறிய டிரங்க் பெட்டியொன்று

கூடவே முன்பொருநாள்
அம்மாவை அடிக்க
அப்பா பயன்படுத்திய
குடைக்காம்பு

எல்லாம் எடை போட்டு
சில்லரை வாங்கியதில்
குடைக்காம்பு மட்டும்
செல்லாதென்று திருப்பி தந்தான்
பழைய பேப்பர்க் காரன்

அம்மாவும் ஏனோ
அன்றைக்கும் தடுக்கவில்லை.

(உண்மையில், இந்த கவிதை வாசித்ததும் அழுதேன் விநாயகம்)

***

இத்தொகுப்பிற்கான சிறப்பான பார்வையை "இங்கு" பதிந்திருக்கிறார், கவிஞர் நாவிஷ் செந்தில்குமார்.

சரி மக்கா, நாளை பார்க்கலாம்...

***

40 comments:

  1. நீங்க அடுப்புல உலை ஏத்துன உடனே எங்க மூக்குல வேத்துரும் மாம்ஸ். படிச்சு முடிச்சுட்டு வாரேன்.

    ReplyDelete
  2. பாரா அண்ணே ரொம்பவே மனசு வலித்தது.. கண்களுக்குள் எட்டிஎட்டி பார்த்து வரவா வேண்டாமா என்று நீருக்கும் எனக்கும் போட்டியே... கவிதை மிக அருமை..

    ReplyDelete
  3. அன்பின் பா.ரா
    அருமை அருமை - கவிதைகளும் அவை ரசிக்கப்படும் விதங்களும். நன்று நன்று பாரா
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. நன்றி மாப்ஸ் & ஷேக்!

    நண்பர்களுக்கு,

    தம்பி கண்ணனுக்கு ஒரு மீட்டிங். இரவு போஸ்ட் பண்ண வேண்டிய இடுகையை சற்று முன்பாக போஸ்ட் செய்திருக்கிறான். sorry -டா லாவண்யா! உன்னோட டைம் ரெண்டு மணி நேரத்தை நம் வினாயகத்திற்கு தந்ததாக எடுத்துக்கோ. சரியா?

    ReplyDelete
  5. சீனா சாருக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மிக அருமையான அறிமுகம்.

    ReplyDelete
  7. அருமையான கவிதைகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ள விதமும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சிலாகித்தல் கூட ஒரு கலைதான் இல்லையா

    ம்ம்

    இந்தப் பந்தும் சிக்ஸர்

    ReplyDelete
  9. இரண்டு கவிதையும் அற்புதம்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பங்கு

    விஜய்

    ReplyDelete
  11. கவிதை மனதை பாரமாக்கியது.

    கதை சிறுசோகத்துடன் புன்சிரிப்பு தோன்றியது.

    ReplyDelete
  12. ஆஹா...ஆஹா வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம்...

    சாரு நிவேதிதா வாயால சத்குரு பட்டம்...

    கொடுத்துள்ள வச்சிருக்கனும்.

    நன்றி பா.ரா

    ReplyDelete
  13. கவிதை மனசை அசைத்து விட்டது..!!

    ReplyDelete
  14. அண்ணே எனக்கு இன்னும் செவ்வாய் மாலையே முடியல...அனா இந்த அறிமுகம் படிச்சுட்டு, இன்னும் முப்பது மணிநேரம் காத்திருக்கணும் நினைக்கவே முடியல..என்னை மாதிரி ஆளுக்கு இது அமிர்தம்...ரொம்ப நன்றி அண்ணே..

    ReplyDelete
  15. அண்ணாச்சி குடைக்காம்பு உள்ள ஏதோ பண்ணுது....

    ReplyDelete
  16. குடைக்காம்பு
    கவிதை வாசித்து முடித்து வெகு நேரமாகியும் . இன்னும் வலிகள் மட்டும் அப்படியே இருக்கிறது உள்ளம் எங்கும் எந்த மாற்றமுமின்றி . அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  17. விமர்சனம் அருமை அண்ணா.

    ReplyDelete
  18. அண்ணா இரண்டு கவிதைகளுமே மனதில் பாரமாய் இறங்கிவிட்டது.
    வாழ்த்துகள்.இன்னும் தாங்கோ !

    ReplyDelete
  19. ஏன் பா.ரா. கவிதை மாதிரியே உரைநடையும் மனச துடைச்சி விட்டு போகுதே. ஒன்னு ரெண்டு வாரத்துக்கு இப்படியும் எழுதுங்களேன்.

    ReplyDelete
  20. ஆஹா.விமர்சனம் அருமை.

    ReplyDelete
  21. மாவாட்டுகிற சாக்கில் நனஞ்ச அரிசி சாப்டற மாதிரி.

    பயலுக்கு நீச்ச சொல்லிக்கொடுக்கிற சாக்கில் ரெண்டு வட்டம் அடிக்கிற மாதிரி.
    நல்லாருக்கே நாயம்.

    அழகர்சாமித்தாத்தாவா.கோவில்மிருகமா .

    ரெண்டு ரெண்டு பதிவு படிச்சமாதிரி இருக்கேப்பூ.

    ReplyDelete
  22. அருமையான கவிதைகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ள விதமும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. //சிந்திக் கிடக்கிற நிலவொளியை, துணி என நினைத்து அதில் கொட்டுகிறான்.//

    உங்க‌ வீட்டு தாத்தா கூட‌ க‌வித்துவ‌மா தான் பேசுவாங்க‌ளா அண்ணா.

    விநாய‌க‌ முருக‌ன் க‌விதை தொகுப்பின் வெளியீட்டின் போது வாசு, கிராம‌த்திலிருந்து ந‌க‌ர‌த்துக்கு வ‌ந்து ப‌ல‌ விய‌ப்புக‌ளுக்கும் ஆயாச‌ங்க‌ளுங்கும் ஆளாகும் ஒருவ‌ரின் அனுப‌வ‌த்தை ஆனாய‌ச‌ய‌மாக‌ சொல்லி இருக்கின்றார் என்று குறிப்பிட்டார். அவ‌ர் தொகுப்பை வாசித்த‌ போது என‌க்கும் அப்ப‌டியே நினைக்க‌ தோன்றிய‌து. குறிப்பாக‌ பாட்டியின் இற‌ப்பை ப‌ற்றியும் அவ‌ர் இற‌ந்த‌தினும் ஞாயிற்று கிழமை இற‌ந்தது வ‌ருத்த‌ப்ப‌ட மிக வ‌ச‌தியாக‌ போன‌து என்று சொல்லும் க‌விதை க்ளாசிக். அண்ணா ஆனா விம‌ர்ச‌ன‌ம் இப்ப‌டி சுருக்க‌மா போட்டா எப்ப‌டி? நேர‌மெடுத்து இன்னும் சொன்னா ந‌ல்லா இருக்கும் இல்ல‌

    ReplyDelete
  24. இரண்டு கவிதைகளும் என் மனதிற்குள் சென்று தங்கிவிட்டது..

    ReplyDelete
  25. அண்ணன் விநாயகமுருகருக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  26. (உண்மையில், இந்த கவிதை வாசித்ததும் அழுதேன் விநாயகம்)

    பாரா தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன். நூறு வார்த்தைகள், இரண்டு தலைமுறைகள் சொல்லாத, கற்றுக் கொள்ள முடியாத அத்தனை விசயங்களையும் நாலு வரி கவிதை கலக்கி விடுவதை பல முறை உணர்ந்து உள்ளேன். உங்கள் வரிகள் உண்மையான சத்தியமான வார்த்தைகள். இவர் இடுககையில் எழுத்துக்கள் சற்று பெரிதாக மாற்றினால் நலம். வாழ்த்துகள்,

    ReplyDelete
  27. //அம்மாவும் ஏனோ
    அன்றைக்கும் தடுக்கவில்லை// indha varikal kadhai solkiradhu..

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. அருமையான கவிதைகள். உங்கள் விமர்சனமும் அருமை.

    ReplyDelete
  30. இரண்டு கவிதைகளும் மனதுக்குள் ஏதோ செய்கிறது

    ReplyDelete
  31. மிகச்சிறப்பான இருகவிதைகள்.. இரண்டாமதில் எந்த மனம்தான் அழாது... அருமையான அறிமுகம் பா.ரா. சார்....

    ReplyDelete
  32. கவிதைகள் இரண்டும் மனதை வருடுகிறது.

    அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  33. வணக்கம் பா.ரா. அருமையான வாரமா இருக்கும்ன்னு தெரியும்.. எல்லாம் படிக்க முடியல... நீங்க அசத்துங்க.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  34. பா.ரா.
    வ‌லைச்ச‌ர‌ம்....இப்போ,
    விம‌ர்ச‌ன‌மும்,க‌விதையும்,
    க‌ல‌ந்து க‌ட்டிய பூச்ச‌ர‌மாய்,
    எல்லேரையும் ம‌ய‌க்குகிற‌து.

    ReplyDelete
  35. கவிதைகளுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பூங்கொத்து!

    ReplyDelete
  36. இரண்டுமே அருமையான கவிதை...விமர்சனமும் அருமை...

    ReplyDelete
  37. மூன்றாம் நாள் வாழ்த்துகள்..

    கவிதை அருமை

    ReplyDelete
  38. பகிர்தலுக்கு நன்றி அண்ணே!

    //அம்மாவும் ஏனோ
    அன்றைக்கும் தடுக்கவில்லை//

    வலி...........

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  39. நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்!

    ReplyDelete
  40. அண்ணன் விநாயகமுருகருக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது