07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 20, 2008

வானத்து நட்சத்திரமே!!!


அன்புள்ள நண்பர்களே,

தாரே சமீன் பர் என்ற திரைப்படத்தின் வசனகர்த்தாவும் நடிகருமான அமீர்கானுக்கு சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஓர் அமைப்பு இந்த மாதம் 12 ஆம் தேதி நடத்தியது. எனக்கு மிகவும் பிடித்த கஜல் பாடகர் திரு.ஜகஜித்சிங் அவர்கள் மிக இனிமையாக தனது ஆறு கஜல் பாடல்கள் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினார்.

அதற்கு பிறகு கே.பாலச்சந்தர், அவர் இவர் என்று பலரும் இந்த படத்தையும் அமீர்கானையும் பாராட்டினார்கள். கஜல் பாடல்மட்டும் கேட்டுவிட்டு உடனடியாக வீடு வந்து சேரவேண்டும் என்று நினைத்து அந்த நிகழ்ச்சிக்கு சென்ற என்னை திரு. அனுபம்கெர் என்ற நடிகரின் பேச்சு அந்நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே உட்காரவைத்து விட்டது!

சரி.... இந்த ஹிந்தி நடிகர் அனுபம்கெர் என்ன தான் பேசினார்? ஆங்கிலத்தில் அனுபம்கெர் ஆற்றின உரையின் தமிழாக்கம் எனது ஞாபகத்திலிருந்து இதோ.... ம்ம்... அனுபம்கெர் பேசுகிறார், கெளுங்கள்!!!

இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த எல்லோருக்கும் எனது வணக்கங்கள். தாரே சமீன் பர் என்ற படத்தை விருதிற்காக தேர்வு செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மனநலம் குன்றிய ஒரு குழந்தையை ஊக்கப்படுத்தி மகிழவைக்கும் இந்த படம் நிச்சயமாக எந்த விருதிற்கும் தகுதி பெற்றது தான்! திரு அமீர்கானுக்கும் இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எல்லோருக்கும் களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தையின் ஒரே வருமானத்தில் சித்தப்பா, மாமா, மற்றும் சொந்தபந்தங்கள் எல்லாம் சேர்த்து பதினெட்டு பேர் இதில் வாழவேண்டும். அப்போது என் தந்தைக்கு மாதவருமானம்வெறும் தொண்ணூறு ரூபாய் மட்டும் தான்.

ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருப்போம். சிறுவனாக நான் இருக்கும் வேளையில் நான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவோ தவறாகவோ யாராவது ஒருவர் பதில் தருவார்கள். அப்படியாக எனது சிந்தனைகளில் எழும் கேள்விகளை நான் ஒரு போதும் மறைத்து வைத்ததில்லை; அழித்துவிட்ட்தில்லை!

ஆகா! எத்தனை எத்தனை கேள்விகள்.. ஏன் வானம் நீல ஆடை அணிந்துள்ளது, இங்கிருந்து நட்சத்திரத்திற்கு எத்தனை கிலோமீட்டர் என தொடரும் கேள்வி மழை!

ஒரு நாள் பாட்டியிடம் நான் கேட்டேன். "பாட்டி, நமக்குத் தான் நல்ல ஆடைகள் இல்லை, அளவிற்குமேல் உணவும் இல்லை. இருந்தபோதும் நாம் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறோமே, நாம் கவலையே படுவதில்லையே, அது ஏன்? அதற்கு எனது பாட்டி சொன்ன பதிலை எனது வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன். பாட்டி சொன்னார்கள் "நமக்கு நல்ல கனவுகள்உண்டு; அதனால் நாம் கவலைப்படுவதில்லை"!

எனது அடிப்படை படிப்பு பள்ளியில் முடிந்தது. நாடகத்துரையில் படிக்க வேண்டியவைகளை படித்து சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நடிகனாக வாய்ப்புகள் மலர்ந்தது. நடிகனானேன், நிறைய படங்களில் நடித்தேன். நிறைய பணம் வர ஆரம்பித்ததும் வீடு, விலை உயர்ந்த கார், மற்றும் பதினாறு ஏக்கர் நிலம் வாங்கினேன், அதில் அழகிய தோட்டம், பாம் ஹௌஸ் கட்டவேண்டும் என்ற திட்டமும் இட்டேன்.

எனக்கு திமிரும் ஆணவமும் வந்து விட்டது. இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஒரு சம்பவம் என்னை ஒட்டுமொத்தமாக மாற்றியது. வாழ்க்கையை நான் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் அது மிகையாகது.

பம்பாய நகரத்தில் ஒரு விபத்து. அந்த விபத்தில் ஒரு பேருந்து சிக்கிக்கொண்டது. அந்த பேருந்தில் இருந்தவர்கள் வேறு யாருமல்ல; மனநலம் குறைந்த பிள்ளைகள். சட்டச்சிக்கல் வந்துவிடும் என்ற பயத்தால் பலர் இந்த விபத்தைக் கண்டும் காணாமல் சென்றார்கள். விபத்தில் சிக்கின பிள்ளைகளை பேருந்துவிலிருந்து எடுத்து எனது காரிலேற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று எல்லோரையும் காப்பாற்றினேன்.

இந்த சம்பவம் முடிந்து, கடந்து போய்க்கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் என் மனதில் சொல்ல முடியாத பாரம். நேரடியாக அந்த பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிக்குச் சென்றேன்.

அங்கிருக்கும் தலமை ஆசிரியர் ஒரு கன்னியஸ்த்ரீ. அவர்களுக்கு நான் நடிகன் என்று தெரியாது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு நடிகனென்று அவர்களிடம் சொல்லவும் இல்லை. "நான் நடிப்புத் தொழில் படிக்கும்போது ஸ்பீச் தெரபி படித்துள்ளேன். அதை உங்கள் பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன். எல்லா புதன் கிழமைகளிலும் இரண்டு மணிநேரம் நான் இங்கு வந்து கற்றுக்கொடுக்கிறேன்" என்றேன். சந்தோஷத்துடன் அந்த சகோதரி என்னை பிள்ளைகளிடம் கொண்டு சென்றார்கள். என்னை நன்கு தெரிந்த பிள்ளைகள் ஓடி வந்து "அனுபம் அங்கில் உங்களை எங்களுக்குத் தெரியும்" என்று நான் நடித்த தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் இவைகளின் பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள். உடனே அந்த சகோதரி, "மிஸ்டர்-அனுபம், நீங்கள் நடிகரா? ஏதாவது உள்நோக்கத்துடன் தான் இந்த உதவி செய்ய முன் வந்துள்ளீர்களா? இதற்கு முன்னமும் சிலர் இப்படித்தான் இங்கு வந்தார்கள். வந்து இந்த பிள்ளைகளுடைய வர்களுடைய நடைமுறைகளையெல்லாம் கற்றுக்கொண்டு படம் பிடித்து சம்பாதித்தார்கள்" - என்றதும் நான் அப்படியே அதிர்ந்து போனேன். பிறகு என் மனம் திறந்து அந்த சகோதரியிடம் இந்த பிள்ளைகள் மீதுள்ள எனது பாசத்தையும் ஈடுபாட்டையும் தெறிவித்தேன். அவர்கள் சம்மதித்தார்கள்.

இரண்டு வருடகாலம் நான் அந்த சேவையை தொடர்ந்து செய்தேன். படப்பிடிப்பில் உலகில் நான் எங்கிருந்தாலும், புதன் கிழமை அந்த இரண்டு மணிநேரம் இந்த பிள்ளைகளுக்கு ஸ்பீச் தெரபியைக் கற்றுக்கொடுக்க நான் பறந்து வந்துவிடுவேன்.

அந்நாளில் சந்தித்த ஒரு சிறுவனை இப்போது ஞாபகம் வருகிறது. அவனுடைய உடலின் வயது பன்னிரண்டு இருக்கும்; மனதின் வயது முன்று அல்லது நான்கு! பாடம் நடத்தும்போது சரியாக கவனம் செலுத்தாமல் கவலையாக இருந்தான்.

எல்லோரும் சென்ற பிறகு அந்த பிள்ளையிடம் நான் கேட்டேன், "ஏன் என் மீது கோபம்" என்று.
அதற்கு அந்த சிறுவன் சொன்னான், "அங்கிள் நீங்கள் வரும்போதெல்லாம்
நிறைய இனிப்புகள் கொண்டு வந்து தருகிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமே இல்லை. அது தான் கவலையாக உள்ளேன்.. சரி...என்னிடம் ஒரு சாக்லேட் இருக்கிறது இதை நான் உங்களுக்குத் தருகிறேன்.. ம்ம்.. இதோ எடுத்துக்குங்க.. அங்கில் ஆனா சாப்பிடாதீங்க, சாப்பிட்டா தீர்ந்து போயிடும்". ( Uncle, I will give you this chocklate but don't eat it because it will get over)
- என்றான்.
சந்தோஷமுடன் நான் அந்த சாக்லேட்டை வாங்கினேன். எனது ரெப்ரிஜிரேட்டரில் இன்னமும் அந்த சாக்லேட் பத்திரமாக வைத்துள்ளேன்!

கோடையின் உச்சத்தை பம்பாய் நகரம் காணும் மதியவேளை ஒன்றில் ஏசி போட்டு குளிர் நிறைந்த காரில் நான். ஏசியின் குளிரால் காரின் கண்ணாடி பனிபடிந்தது போல் இருந்தது. எனது கார் சிக்னலில் நிற்கிறது. அந்த இடத்தில் கைத்துண்டு, வளையல் போன்றவைகள் விற்கும் ஏழைப்பிள்ளைகள் காரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுமி எனது காரின் கண்ணாடியில் தனது கன்னத்தை சில நொடிகள் வைத்து விட்டு, அந்த குளிர் கிடைத்த மகிழ்ச்சியில் அருகிலுள்ள நடைபாதையில் சென்று படுத்துக்கொண்டாள். எத்தனையோ படங்களை நான் பார்த்திருந்தாலும் இந்நிகழ்ச்சி அத்தனையும் அழித்து என் மனதில் பதிந்துபோனது.

பல வருடங்களுக்கு முன்னர் நான் தோட்டம் கட்டி மகிழ வாங்கின பதினாறு ஏக்கர் நிலத்தில் ஓர் அனாதை இல்லம் கட்ட இரண்டு மாதங்களுக்கு முன் நான் தீர்மானம் எடுத்தேன். பெருமைக்காக, பேருக்காக அனுபம் இதை சொல்கிறான் என்று பலர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரி தான், அது உண்மையும் தான். அந்த நோக்கத்தோடு தான் சொல்கிறேன். யாராவது ஒரு நாலு பேர் எனது நல்ல நோக்கத்தை உணர்ந்தால், உதவினால் அது போதும் எனக்கு. நான் இதை விளம்பரப்படுத்தத் தான் இதை இங்கே சொல்கிறேன்.

கடந்த ஐந்து வருடங்களாக எந்த விருதுகளையும் நான் வாங்குவதில்லை, இருந்தாலும் விருது தந்து தான் ஆக வேண்டுமென்று அழைத்தால் கூட அந்நிகழ்ச்சிகளுக்கும் நான் செல்வதில்லை! ஏனென்றால் இப்போதெல்லாம் அங்கே கலையை, கலைஞர்களை பாராட்டிட நிகழ்ச்சிகள் நடத்தப்
படுவதில்லை. மாறாக அங்கே தொலைக்காட்சி விளம்பரத்திற்காக நடக்கின்ற வெறு ஒரு டி.வி. ஷோ! - தான் நடக்கிறது.

ஆனால் இங்கே, தாரே சமீன் பர் என்ற நல்ல ஒரு படத்தை பாராட்டி விருது கொடுக்கின்ற இனிய நிகழ்ச்சி என்று சொன்னதும் சந்தோஷமுடன் சென்னைக்கு வந்து இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றேன். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லோருக்கும் என்னுடைய இனிய வாழ்த்துக்கள், நன்றி...

... என்று பேசி முடித்தார்.

எவ்வளவு அழகாக ஒரு குறிப்பும் இல்லாமல் உண்மையை உண்மையின் அழகுடன் சொன்னார் இந்த நல்ல உள்ளம் கொண்ட இனிய நடிகர் அனுபம்கெர் என்று என் மனம் பாராட்டினது, உங்கள் மனம்?

உங்கள் கருத்துக்களை கேட்க ஆர்வமுடன்
என் சுரேஷ்

7 comments:

 1. அனுபம் நல்ல நடிகர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். நல்ல மனிதரும் கூட என்று உணர்த்தியது உங்கள் பதிவு. நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 2. அன்புள்ள வெண்பூ,

  நீங்கள் நினைத்தது போல் தான் நினைத்தேன் நானும்.

  எல்லோரும் நல்லவரே

  நன்றி வெண்பூ

  ReplyDelete
 3. அனுபம்கெர் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுரேஷ். சிந்திக்க வைக்கும் பதிவு!

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி, மனிதர் நம் எண்ணத்திலும் உயர்கிறார். அவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 5. மிக்க நன்றி ராமலக்ஷ்மி அவர்களே, முதன்முறையாக இந்த பெயரை கேள்விப்படுகிறேன். எனக்கு உங்களுடைய பெயரை மிகவும் பிடித்துள்ளது. பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. அன்புள்ள ஜீவா அவர்களே,

  பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. ஆகா - அருமையான எண்ணங்கள் - பொதுவாக நடிகர்களுக்கு பல பிரச்னைகள் - இவ்வாறெல்லாம் சிந்திக்க இயலாது. அனுபம் கெர் வித்தியாசமான நல்ல மனிதர். அவரது பேச்சினை நினைவில் நிறுத்தி பதிவாக இட்டமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது