07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 28, 2011

திங்களன்று அதீத கனவுகள்

விடைபெற்று சென்ற ஆசிரியர் ராஜா ஜெய்சிங் அவர்களின் தந்தையாரின் மறைவு செய்தியை படித்தபோது திடுக்கென்று இருந்தது. மனதில் இனம் புரியாத வலி. அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இன்னும் நான்கு வருசம், ஐந்து வருசம் என சொல்லிக்கொண்டிருக்கும் எனது தந்தை மனதில் நடமாடுகிறார். பதின்மூன்று வருடங்கள் முன்னர் என்னை தவிக்கவிட்டுவிட்டு சென்ற எனது தாய் கண்களில் கண்ணீராய் நிறைகிறார். இந்த ஆசிரியப் பணி பொறுப்பினை எனது பெற்றோர்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். 

தற்போது எனது அதீத கனவுகள் எனும் வலைப்பூவில் இப்படித்தான் என்னை அறிமுகம் செய்து இருக்கிறேன். 

தமிழ்செயின்ட்ஸ் எனும் ஒரு இணையத்தில் முதல் முதலாக ஐந்து வருடங்கள் முன்னர் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த வலைப்பூக்கள் எல்லாம் சுத்தமாக எனக்குப் பரிச்சயமில்லை. அப்படி எழுதி கொண்டிருந்தபோது மற்றொரு இணையத்திலும் எழுதினேன். பின்னர் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது தவிர்த்துவிட்டு தமிழில் எழுத வாய்ப்பும் அமைந்தது. ஆனால் தமிழில் நேராக எழுதுவது என்பது இல்லாத காரணத்தால் சற்று நேரம் அதிகம் ஆனது. 

அப்பொழுது இலங்கை மகள் எனும் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளம் தான் முத்தமிழ்மன்றம்.  அங்குதான் எனது எழுத்து பயணம் முழுவீச்சில் பயணிக்க தொடங்கியது. நினைத்து பார்க்கவே சற்று பிரமிப்பாக இருக்கிறது. இணையங்களில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதி வருகிறேன். முத்தமிழ்மன்றத்தில் கிடைத்த நல்ல நண்பர்கள் மிகவும் அதிகம். இப்பொழுது சில வருடங்களாக முத்தமிழ்மன்றத்தில் எழுதும் நேரம் குறைந்து போனது. 

முத்தமிழ்மன்றத்தில் அடியெடுத்து வைத்த நாள் 4 அக்டோபர் 2006. நண்பர்களின் வேண்டுகோளினால் தொடங்கப்பட்ட வலைப்பூ நாள் 7 அக்டோபர் 2008. முத்தமிழ்மன்றத்தில் எழுதிய பதிவுகளை மட்டுமே சேகரிக்கும் வலைப்பூவாக உருவானது எல்லாம் இருக்கும் வரை. இந்த தலைப்பினை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் வரை தான் எல்லாம். எதுவும் இல்லாமல் போனால் அதனால் ஏற்படும் இழப்புகள் கூட பெரிதாக உணரப்படுவதில்லை. காலப்போக்கில் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, மாறுதலுக்கு உட்பட்டு உலகம் புது வேகத்தில் பயணித்து கொண்டேதான் இருக்கிறது. எல்லாம் எழுதிவிட்டார்கள் என எவரும் இறுமாந்து இருக்கவில்லை. சிந்தனைகள் காலந்தோறும் புதிப்பிக்கப்பட்டு  கொண்டேதான் இருக்கின்றன. 

இப்படியான இலவசமான வலைப்பூவினை பணம் கட்டி ஒரு தனித்தளமாக மாற்றியது ஒரு முட்டாள்தனமான செயல்பாடு என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்று கருத்து இல்லை. எதற்காக செய்தேன், ஏன் செய்தேன் என நினைக்கும்போது தனிப்பட்ட அங்கீகாரம் என்பதற்கா எனவும் புரியவில்லை. இப்படித்தான் ஒரு கல்விக்கென ஒரு தளம் ஆரம்பித்தது கவனிப்பாரற்று கிடக்கிறது. தினமும் ஏதேனும் எழுத நினைத்தாலும் மனம் ஒத்துழைக்கவில்லை. நேரம் தடுமாறி கசிகிறது. 

சில மாதங்களாக எனது மனதின் எண்ணமெல்லாம் எங்கு எங்கோ சென்றுவிட எழுதுவதன் அவசியம் அனாவசியமாகிப் போனது. வாசித்தலில் மனம் நிலைத்திட எழுதிட எழுத்து புரிபடமால் போனது. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தபோதுதான் சீனா ஐயாவிடம் இருந்து வலைசரத்திற்கு ஆசிரியராக பணியாற்ற ஒரு அழைப்பு. வாழ்க்கை பல நேரங்களில் எதிர்பாராத விசயங்களை திணித்து திக்குமுக்காட செய்துவிடுகிறது. நன்றி சீனா ஐயா. வலைச்சர குழுவினருக்கும் நன்றிகள், வலைச்சரத்தில் பணியாற்றி சிறப்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். சீனா ஐயா லண்டன் வந்திருந்தபோது அவரை நான் பார்க்க இயலவில்லை. நேரத்தை காரணம் குறை கூறி எனது சோம்பேறித்தனத்தை மறைக்க விருப்பமில்லை. நான் இந்தியா வந்தபோது எந்த நண்பர்களையும் சந்திக்க முயற்சி எடுக்கவும் இல்லை. நான் ஒரு நன்றி உடையவனா என பல நேரங்களில் கேள்வி எழுந்தாலும் 'இதுதான் நான்' என்னை ஏற்று கொள்ளும் பக்குவம் உடையவர்கள் மட்டுமே எனது நண்பர்கள் எனும் அகங்காரம் இருப்பது உண்டு. 

எனது வலைப்பூவின் பெயரை பணம் கட்டி மாற்றினேன். அப்பொழுது அதீத கனவுகள் எனும் தமிழ் பெயரை பரிந்துரைத்தவர் சுரேஷ் எனும் சக பதிவர். நன்றி சுரேஷ். இவரை நான் எடின்பரோவில் சந்தித்தேன். அருமையான உபசரிப்பினை தந்தார். ஆனால் அவர் லண்டன் வந்திருந்தபோது சந்திக்க இயலவில்லை. இவர் பாராட்டிய  அந்த பாராட்டுக்குரிய தொடர் ஏனோ வெகுவேகமாக எழுத இயலவில்லை. 

எழுதுவதன் அவசியம் என்பதை விட எப்படி எழுதவேண்டும் என்பதில் எனக்கு சில வரைமுறைகள் உண்டு. வார்த்தைகள் தரும் வலி மிக மிக அதிகம். அந்த வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என திருவள்ளுவர் மிகவும் அற்புதமாக சொல்லி இருப்பார். அதைவிட எங்களது கிராமத்தில் சொல்வார்கள், 'வார்த்தையை சிந்திட்டா அள்ளமுடியாது' என்பார்கள். எனது தந்தை 'பேசுனா கூட பரவாயில்லை, எழுத்தில வைக்கிறப்போ ரொம்ப கவனமா இருக்கனும்' என்பார். பலமுறை தவறி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். 

நான் இங்கே இருநூற்றி பதினாறாவது ஆசிரியராக பொறுப்பினை ஏற்று கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். எனது தந்தை ஒரு ஆசிரியர். எனது தாய் மேலும் இரண்டு வகுப்புகள் படித்திருந்தால் அவரும் ஒரு ஆசிரியராக இருந்து இருப்பார். எனக்கு ஆசிரியராக பணியாற்றுவது என்றால் கொள்ளைப்பிரியம். தெரிந்ததை சொல்லித்தருவதைப் போல மிகவும் சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை. இந்த ஆசிரியர் எல்லாம் எவர் எவர் என்பதை பற்றி கூட ஒரு தொடர் எழுதியது உண்டு.  

தம்பி நீ ஆசைப்படு என தைரியம் தரும் வாழ்க்கை இது. ஆசை மட்டும் இல்லாது போனால் இவ்வுலகம் ஜனனம் கண்டிருக்க முடியாது என்பார்கள். உயிரற்ற பொருட்கள் உயிர் கொள்ள ஆசைப்பட்டன. உயிர் கொண்டதும் நிலை கொள்ள ஆசைப்பட்டன. இல்லாத ஒன்றை இருப்பது போன்ற ஆசைகள் வடிவம் கொண்டன. சின்ன சின்ன ஆசைகளுக்குள் பேராசைகள் ஒளிந்திருக்கும் வண்ணம் இருப்பதுதான் வாழ்க்கை. 

கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நான் எழுதுவதை கவிதைகள் என ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் வெறும் வார்த்தைகள் என அடையாளம் சூட்டினேன். அப்படிப்பட்ட வெறும் வார்த்தைகளில் படிக்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வர செய்யும் கவிதைகள் சில உண்டு. 

எழுதும்போது இறைவனை பற்றி குறிப்பிடாமல் போனால் எனது எழுத்துகள் எப்போதும் நிறைவு பெறுவதில்லை. இந்த இறைவன் யார் என்பதில் எனக்கு எப்பொழுதும் இரு வேறு கருத்தில்லை. ஆனால் வார்த்தைகளில் வைத்திடும்போது பலமுறை தடம் புரண்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். விவரிக்க முடியாத பேரானந்தத்தை வார்த்தைகளில் சுருக்கியது எனது முட்டாள்தனமே அன்றி வேறு எதுவும் இல்லை.  

காதல்! காதல் ஒரு முறை வரும் என்பதைவிட ஒவ்வொருவரின் மீதும் வரும் எனும் பைத்தியகாரத்தனமான எண்ணங்களை கவிதைகளில் வடித்து வைப்பது எப்படி சரியாகுமோ என தெரியாது. ஆனால் காதல் புரிந்து கொள்ளும் என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருக்கிறேன். 

நாவல்கள் படைத்த ஒரு வறட்டுத்தனமான போதை அதிகம் உண்டு. ஆனால் அந்த நாவல்களையே விமர்சிக்கும் சக்தியும் மனதில் உண்டு. கண்ணீர் விடவைக்கும் கதையும் உண்டு. 

நுனிப்புல் பாகம் 1 எனும் முதல் நாவலை வெளியிட உதவிய நண்பர் இரத்தினகிரி மற்றும் அவரது நண்பர் கணேஷ் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை சொல்வதிலும், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பை வெளியிட உதவிய தம்பி செல்வமுரளி மற்றும் அவரது நண்பர் இஷாக் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும், தொலைக்கபட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த வலைப்பூ எனும் சோலையில் எனக்கு பிடித்த பதிவுகளும் உண்டு. இதோ இவர்தான் சிறந்த மாணாக்கன் என ஆசிரியர் ஒருவரை சொன்னால் மற்ற மாணவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் இல்லை என நினைத்து கொள்ள கூடாது என்பதுதான் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அறிந்து கொள்ளவேண்டியது எனும் பாடம் எனக்கு ஒரு ஆசிரியர் சொல்லித் தந்தது. 

குருகுல வாசம், ஆசிரியர் எனும் பொறுப்பிற்கு மரியாதை என்பது எல்லாம் தொலைந்து கொண்டே வருகிறது என குறைபட்டு கொள்வோர் உண்டு. ஆனால் இங்கே சக பதிவர்களுக்கு ஆசிரியர் பொறுப்பு தந்து கௌரவிக்கும் வலைச்சரம் பூத்து குலுங்கட்டும். சற்று நேரம் இளைப்பாறி செல்லும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும். 

பற்றினேன் நீ வழி காட்டுவாய் என
போற்றினேன் நீதான் யாவும் என

கற்றது எவையென கேட்டால் 
மறந்தவை கணக்கில் இல்லை

சுற்றி பார்க்கும் வாய்ப்புதனில்
கிட்டுவது எத்தனை எத்தனையோ 

சுட்டிவிடும் முயற்சியில் கொட்டிவிடாது 
கெட்டியாக பிடிப்பது எதுவென்பேன்

தட்டி தருவதால் வளரும் எழுத்து
பரவட்டும் உலகம் செழித்து. 

இது எனது அதீத கனவுகளின் மிங்கி மிங்கி பா






10 comments:

  1. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மிக்க நன்றி சித்ரா.

    மிக்க நன்றி தங்கமணி

    மிக்க நன்றி தமிழ்வாசி

    மிக்க நன்றி லக்ஷ்மி

    மிக்க நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  6. அன்பின் வெ.இராதாகிருஷ்ணன்

    அருமையான சுய அறிமுகம். இத்த்னை நீளமான இடுகை எனில் எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும் - எவ்வளவி இடுகைகளை மீண்டும் படித்திருக்க வேண்டும் - அறிமுகம செய்திருக்க வேண்டும். கடும் உழைப்பு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பரே. தங்கள் எழுத்துக்கள் தரமாக இருக்கின்றன.

    ReplyDelete
  8. மிக்க நன்றி சீனா ஐயா.

    மிக்க நன்றி ராம்சாமி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது